×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 20ம் தேதி விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நியாய் பிந்து கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 21ம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் சுதீஷ் குமார் ஜெயின் மற்றும் ரவீந்தர் துடேஜா ஆகியோர் அமர்வு, “ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

மேற்கண்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதீர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்தர் துடேஜா ஆகியோர் அமர்வு நேற்று வழங்கிய இறுதி தீர்ப்பில்,\\” டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கை சிபிஐ சிறப்பு நீததிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதி சரியாக கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜாமீன் மனு குறித்து வாதங்களை முன்வைக்க அமலாக்கத்துறைக்கு போதிய அவகாசத்தை வழங்கியிருக்க வேண்டும். அதனை விசாரணை நீதிமன்ற நீதிபதி வழங்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் பணமோசடி சட்டம் 45வது பிரிவு குறித்து விவாதிக்கப்படவில்லை என்ற வலுவான வாதங்கள் அமலாக்கத்துறையால் முன்வைக்கப்பட்டது. அதனை உயர் நீதிமன்றம் ஏற்கிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை அமலாக்கத்துறை தரப்பில் எந்தவித தவறான நடவடிக்கைகளும் இல்லை என்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது. இதே விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான எந்தவொரு முடிவையும் விசாரணை நீதிமன்றம் வழங்கி இருக்கக் கூடாது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் வாதங்களை விசாரணை நீதிமன்றம் மதிக்கவில்லை. அமலக்கத்துறை தரப்பு ஆவணங்களையும் சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. எனவே இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சிபிஐ விசாரணை நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு தடை விதிக்கிறோம்” என்று தீர்ப்பளித்தனர்.

* உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு பாரபட்சமாக செயல்படுகிறது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்று கூறினார்.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI court ,Kejriwal ,Delhi High Court ,New Delhi ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Tihar Jail ,Dinakaran ,
× RELATED மதுபான முறைகேடு வழக்கில்...