×

எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் கிடையாது: பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி: ‘எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் இல்லை’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியாவில் எமர்ஜென்சி விதிக்கப்பட்டதன் 49ம் ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் நேற்று கூறியதாவது: எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு, நமது அரசியலமைப்பு சட்டத்தை நேசிப்பதாக சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. இவர்கள்தான் பல சந்தர்ப்பங்களில் 356வது சட்டப்பிரிவை திணித்தவர்கள், பத்திரிகை சுதந்திரத்தை அழிக்கும் மசோதாவை கொண்டு வந்தவர்கள், கூட்டாட்சி முறையை அழித்தவர்கள், அரசியலமைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள். எமர்ஜென்சியை கொண்டு வந்த மனநிலை, அதே கட்சியினரிடம் இப்போதும் உயிர்ப்புடன் உள்ளது.

அவர்கள் அரசியலமைப்பு மீதான அவமதிப்பை சிறுபான்மையினர் ஆதரவு மூலம் மறைக்க முயன்றாலும் கோமளித்தனமான செயல்கள் மூலம் வெளிப்படுகிறது. அதனால்தான் இந்திய மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரித்தனர். ஆட்சியை பிடிப்பதற்காக அன்றைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஜனநாயகக் கொள்கையையும் புறக்கணித்து, தேசத்தை சிறையாக மாற்றியது. எதிர்த்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இன்றைய நினைவு தினம் எமர்ஜென்சியை எதிர்த்த அனைவருக்கும் மரியாதை செலுத்தும் நாள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஒரு குடும்பத்தை ஆட்சி அதிகாரத்தில் வைத்திருப்பதற்காக காங்கிரஸ் நமது அரசியலமைப்பை பலமுறை நசுக்கியது. எமர்ஜென்சியின் போது மக்கள் மீது இந்திரா காந்தி இரக்கமற்ற அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டார்’’ என கூறி உள்ளார்.

* கடந்த 10 ஆண்டு பாஜ ஆட்சி அறிவிக்கப்படாத எமர்ஜென்சி: மோடிக்கு கார்கே பதிலடி
புதுடெல்லி: எமர்ஜென்சி குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மக்கள் அனுபவித்தனர்’’ என குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து கார்கே தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அவர்களே, நாடு எதிர்காலத்தை எதிர்நோக்குகிறது. ஆனால் உங்கள் தோல்விகளை மறைக்க கடந்த காலத்தை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில், 140 கோடி இந்தியர்களுக்கு அறிவிக்கப்படாத அவசரநிலை என்றால் என்ன என்பதை உணரச் செய்தீர்கள். ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிலும் கடுமையான அதிர்ச்சிகளை விளைவித்தீர்கள்.

கட்சிகளை உடைப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பின்வாசல் வழியாக கவிழ்ப்பது, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது, முதல்வர்களை சிறையில் அடைப்பது, தேர்தலுக்கு முன் அதிகாரத்தை பயன்படுத்தி சமதளத்தை சீர்குலைப்பது, இவையெல்லாம் அறிவிக்கப்படாத அவசரநிலை இல்லையா? பாஜ ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை புறக்கணித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் எப்போதும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு ஆதரவாக நிற்கிறது. அது தொடரும். இவ்வாறு கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ‘‘அரசிலமைப்பை பாதுகாக்க வேண்டுமென எமர்ஜென்சி நமக்கு நினைவூட்டுகிறது என பிரதமர் மோடி கூறியது மிகவும் உண்மை. அதனால்தான் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை எந்த ஒரு ஆட்சியாளராலும் மாற்ற முடியாத வகையில், பாஜவின் பலத்தை குறைத்து நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்’’ என்றார்.

The post எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் கிடையாது: பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,India ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...