×

19 ஆண்டுகால முன்விரோத தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி எரித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது; வியாசர்பாடியில் பயங்கரம்

பெரம்பூர்: வியாசர்பாடியில் 19 ஆண்டுகால முன்விரோத தகராறில் மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (72). இவரது மனைவி வசந்தா (65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதே பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டு அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தினர். இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் செந்தில்குமார் (42), டிங்கரிங் தொழிலாளி.

கடந்த 2005ம் ஆண்டு வசந்தாவுக்கும், செந்தில்குமாரின் தங்கை செண்பகவல்லி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், செண்பகவல்லி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வசந்தாவை கைது செய்தனர். நீதிமன்ற வழக்கு விசாரணையில் போதிய சாட்சிகள் இல்லாததால் வசந்தாவை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதன் காரணமாக செந்தில்குமாருக்கு, வசந்தா மீது முன்விரோதம் ஏற்பட்டது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் தனது குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் குடும்பத்தினருடன் மீண்டும் வியாசர்பாடிக்கு வந்து குடியேறினார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செந்தில்குமார் மதுபோதையில் வசந்தாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்து வசந்தா எம்கேபி நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று காவல் நிலைய விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது செந்தில்குமார் மதுபோதையில் இருப்பதை அறிந்த போலீசார் மாலையில் காவல் நிலையம் வருமாறு கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வசந்தாவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வசந்தாவின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்ததில் வசந்தா அலறித்துடித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து மூதாட்டி வசந்தாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில், வசந்தாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எம்கேபி நகர் உதவி கமிஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரிடம் விசாரித்தனர். அதில், எனது தங்கை தீ வைத்து தற்கொலை செய்துகொண்டதற்கு வசந்தா தான் காரணம். மேலும், என்னை பார்க்கும்போது இரட்டை அர்த்த வார்த்தைகளால் அவதூறாக பேசினார். இதனால், ஏற்பட்ட 19 ஆண்டுகால முன்விரோத தகராறில் மதுபோதையில் வசந்தா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தீ வைத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்று மாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, எம்கேபி நகர் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

The post 19 ஆண்டுகால முன்விரோத தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி எரித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது; வியாசர்பாடியில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,Perambur ,Nagaraj ,Annai Satya Nagar ,Chennai ,
× RELATED செல்போனில் பேசியதால் தந்தை கண்டிப்பு; 13 வயது மகள் தற்கொலை