×

ரூ16 கோடியில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு; சென்னையில் 2ம்கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகம்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சோழிங்கநல்லூர்: அனைத்து பேருந்துகளிலும் ரூ.15.54 கோடியில் தானியங்கி கதவு அமைக்கப்படும். சென்னையில் கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
சட்டப் பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

* பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க கதவு இல்லாத அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்துதல் திட்டத்தின் கீழ் 3,886 பேருந்துகளுக்கு ரூ.15.54 கோடி செலவில் தானியங்கி கதவுகள் பொருத்தப்
படும்.

* இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் உள்ளிட்ட சாலை பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அனைத்து நகர பேருந்துகளிலும் பக்கவாட்டு பாதுகாப்பு அரண் பொருத்துதல் திட்டத்தின் கீழ் 8771 பேருந்துகளுக்கு ரூ.8.77 கோடி செலவில் பாதுகாப்பு அரண்கள் பொருத்தப்படும்.

* சென்னை மாநகரில் தனிநபர் வாகனங்களை பயன்படுத்துவோர் பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதற்கு ஏதுவாகவும், மாசுக்களை குறைக்கவும், குளிர்சாதன வசதி, வைபை, ஜிபிஎஸ் கண்காணிப்பு கேமரா, அவசர கால பொத்தான் மற்றும் சொகுசு இருக்கை உள்ளிட்ட வசதிகளை கொண்ட உயர்தர பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும்.

* உலக வங்கியின் நிதி உதவியுடன் சென்னையில் இரண்டாம் கட்டமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த 500 மின்சார பேருந்துகள் கூடுதலாக அறிமுகப்படுத்தப்படும்.

* எல்லோருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கணினி மயமாக்கப்பட்ட சிற்பம் மற்றும் சரக்கு அனுப்புதல் சேவை அறிமுகம் செய்யப்படும்.

* பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்ய தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகள் போன்ற அடிப்படை வசதிகள் நூறு பணிமனைகளில் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

* பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் பயன்படுத்தும் ஒப்பனை அறைகள் நூறு பணிமனைகளில் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

* ஒவ்வொரு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மாதாந்திர விருப்பம் போல் பயணம் செய்யும் பயண சீட்டு வழங்கும் திட்டம் அனைத்து நகரப் பேருந்துகளிலும் விரிவுபடுத்தப்படும்.

* இஸ்லாமிய பெருமைகளை அதிநவீன உபகரணங்கள் மற்றும் கருவிகள் மூலம் மேம்படுத்தி தொழில்நுட்ப உற்பத்தி அதிகரிக்க 8 பணிமனைகளில் ரூ.8.4 கோடி செலவில் அதிநவீன உபகரணங்கள் அமைக்கப்படும்.

* மதுரை, கோவை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகள் ரூ.53 லட்சம் செலவில் நவீனமயமாக்குதல் மற்றும் உயர்த்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசு துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காகவும் கோயம்புத்தூர் அரசு தானியங்கி பணிமனையில் ரூ.21.35 லட்சம் செலவில் அரசு நடமாடும் பணிமனை அமைக்கப்படும்.

* மதுரையில் இயங்கி வரும் ஓட்டுநர் புத்தாக்க பயிற்சி மையத்தில் கலந்துகொள்ளும் அரசுத் துறை ஓட்டுநர்களுக்கு மூன்று நாட்கள் தங்கி பயிற்சியில் கலந்து கொள்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.44 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

* வாகன தொகுப்பாளர் செயலி மூலம் பயணிக்கும் பயணிகளின் நலனுக்காக வாகன தொகுப்பாளர்களுக்கான விதிகள் வகுக்கப்படும்.

* வாகனம் முன்பதிவு எண்களை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

* புதிய சாலை பாதுகாப்பு கொள்கை மற்றும் செயல் திட்டம் வெளியிடப்படும்.

* சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கும் மரணம் அடைபவர்களின் சட்டபூர்வ வாரிசுகளுக்கும் முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கான ஒரு புதிய செயலி ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

* அதிகப்படியான ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மூலம் ஏற்படும் ஒலி மாசினை கண்டறிய அச்சுப்பொறி வசதியுடன் கூடிய 255 ஒலி அளவிடும் கருவிகள் மாநிலத்தில் உள்ள அனைத்து கள அலுவலர்களுக்கும் ரூ.76.50 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post ரூ16 கோடியில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு; சென்னையில் 2ம்கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகம்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Minister ,Sivashankar ,Choshinganallur ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக...