- பெண்கள் உயர்நிலைப்பள்ளி
- காரமலை நகர் பேரூராட்சி
- வரலட்சுமி மதுசூதனன்
- சட்டமன்ற உறுப்பினர்
- செங்கல்பட்டு
- சட்டப்பேரவை
- ஏத்தாகுதி
- வரலட்சுமி மதுசூதனன்
- திமுக
- மண்ணிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி
- காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
- தின மலர்
செங்கல்பட்டு: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செங்கல்பட்டு ெதாகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசுகையில், ‘செங்கல்பட்டு தொகுதி காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், மண்ணிவாக்கம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அரசு ஆவன செய்யுமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ‘பள்ளியில் ஏற்கெனவே 11 வகுப்பறை உள்ளது. இந்த நிலையில், தற்போது சிஎஸ்ஆர் நிதியின் மூலமாக கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 3 வகுப்பறை, கழிவறைகள் தேவைப்படுகின்றது. மேலும், நூலகம் ஒன்று, ஆசிரியர் அறை ஒன்று, ஆசிரியர் கழிவறை ஒன்று தேவைப்படுகிறது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இப்பள்ளிக்கான கட்டட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
வரலட்சுமி மதுசூதனன்: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்போது, அமைச்சர் கூறியதுபோலவே, தற்போது 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது.அதைவிட, இப்போது அந்தப் பள்ளியில் தலையாய பிரச்னை என்னவென்றால், அந்த உயர்நிலை பள்ளியிலிருந்து வருடந்தோறும் 140லிருந்து 150 பிள்ளைகள் தேர்வாகி மேல்நிலைக் கல்விக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அப்போது அவர்கள் அருகிலுள்ள படப்பை அல்லது பெருங்களத்தூர் போன்ற பகுதிகளிலுள்ள மேல்நிலைப் பள்ளிக்குத்தான் சென்று சேர வேண்டியுள்ளது. அப்படி சேரும்போது அந்தப் பள்ளிகளிலுள்ள மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு தான், இந்த மாணவர்களுக்கு சேர்க்கையை கொடுக்கிறார்கள்.
அதனால், இந்த மாணவர்கள் தாங்கள் விரும்பிய குரூப்பில் இடம் கிடைக்காமல், அவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி சேரக்கூடிய ஒரு நிலை ஏற்படுகின்றது. எனவே, அமைச்சர் இந்தப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2ஐ தரமுயர்த்தித் தரவேண்டும். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: கட்டிடங்கள் கேட்டு, இப்போது தரமுயர்த்துவது பற்றி கேட்டிருக்கிறார்கள். இதை கண்டிப்பாக வரும் காலத்தில் சரி செய்வதற்கான உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். அதேபோல, தரமுயர்த்துவது குறித்த பிரச்னைகள் நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். நிதியமைச்சரிடம் கலந்தாலோசித்து, அதற்கான உரிய நடவடிக்கை வருங்காலத்தில் கண்டிப்பாக எடுப்போம்.
வரலட்சுமி மதுசூதனன்: செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சிப் பகுதியில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்று வேண்டுமென்பதும், அந்தப் பகுதியினுடைய பெற்றோர் மற்றும் பொதுமக்களுடைய நீண்டநாள் கோரிக்கையாக இருக்கின்றது.
இதற்கும் ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால், மறைமலைநகரில் மேல்நிலைப் பள்ளி இருந்தும், அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் எல்லோரும் நந்திவரம் – கூடுவாஞ்சேரியில் உள்ள பெண்கள் பள்ளிக்கு தான் போகிறார்கள். இதனால் நந்திவரம் கூடுவாஞ்சேரி பள்ளியினுடைய எண்ணிக்கை இப்போது 3,000க்கும் அதிகமாக இருக்கின்றது. எனவே, இப்போது இருக்கிற மறைமலைநகரிலேயே ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றை பெண்களுடைய முன்னேற்றத்திற்கு அயராது பாடுபடுகின்ற அரசாக திகழும் நமது அரசு மறைமலைநகரில் கலைஞரின் பெயரில் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அமைத்துத்தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: அரசு பள்ளிகளுக்குள் இன்றைக்கு போட்டி வருகின்ற அளவிற்கான ஒரு பெரிய நிலையை முதல்வர் உருவாக்கி தந்திருக்கின்றார். சட்டமன்ற உறுப்பினர் கேட்டது போன்று, அங்கேயிருக்கின்ற கல்வி சார்ந்த அலுவலர்கள் மூலமாக கருத்துரு கேட்கப்பெற்று, வாய்ப்பிருப்பின் நிச்சயமாக செய்து தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post பொதுமக்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மறைமலைநகர் நகராட்சி பகுதியில் பெண்கள் உயர்நிலை பள்ளி: பேரவையில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.