×

திருக்கழுக்குன்றத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கிய மலைக்கோயில்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் கோபுர உச்சியில் மின்விளக்கு எரியாததால் கோயில் இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பட்சி தீர்த்தம், வேதமலை, கழுக்குன்றம் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகின்ற திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உலக பிரசித்திப்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்குள்ள மலைக்கோயிலின் கோபுரம் மற்றும் உச்சியில் தினமும் மின் விளக்கு எரிவது வழக்கம், வெளியூர்களிலிருந்து இரவு நேரத்தில் திருக்கழுக்குன்றம் வருபவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்திலேயே மலை உச்சியில் எரியும் கோபுர மின் விளக்கை பார்த்தே அதோ மலைக்கோயில் தெரிகிறது, திருக்கழுக்குன்றம் வந்து விட்டது என்றும், கோபுர வெளிச்சத்தை வழி காட்டியாகவும் பக்தர்கள் எண்ணுகின்றனர்.

வேலைக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ சென்று இரவு நேரத்தில் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் (பக்தர்கள்) பொதுமக்கள் பலர் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரரை கைக்கூப்பி கும்பிடுவது வழக்கம். இந்நிலையில், வேதகிரீஸ்வரர் மலை மீதுள்ள கோபுரத்திலும், அதன் உச்சியிலும் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் சில நாட்களாகவே எரியாததால் இருள் சூழ்ந்து மலை இருப்பதற்கான அடையாளமே இல்லாததுபோல் உள்ளது என்று பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மலை உச்சியில் தொடர்ந்து தடையின்றி மின் விளக்கு எரிய வழிவகை செய்ய வேண்டுமென்று பக்தர்கள், பொதுமக்கள் பல முறை கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நிர்வாகத்தினர் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ் நாட்டில் இயங்கி வருகின்ற பெரிய மற்றும் வருமானமுள்ள கோயில்களில் இதுவும் ஒன்று என்ற போதும், இந்த கோயிலுக்கென்று தனியாக ஒரு எலக்ட்ரீசியனை இதுவரை வேலைக்கு அமர்த்தவில்லை.

எனவே, மலைக்கோவிலுக்கென்று தனியாக ஒரு எலக்ட்ரீசியனை நியமித்து, இதுபோன்ற மின் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘கோயிலுக்கென்று எலக்ட்ரீசியன் தனியாக கிடையாது. மின் விளக்குகள் பழுதாகும்போது வெளியிலிருந்து யாராவது அழைத்து வந்து பழுதை நீக்குவோம். கோயிலுக்கு என்று எலக்ட்ரீசியன் கிடையாது. இது குறித்து சம்பந்தப்பட்ட அறநிலைய துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கிய மலைக்கோயில்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Hill temple ,Thirukkalukkunram ,Vedakriswarar ,temple ,Thirukkalukukunram ,Patsi Theertha ,Vedamalai ,
× RELATED திருக்கழுக்குன்றத்தில் மின்...