×

பத்துகாணி அருகே கூட்டம் கூட்டமாக நடமாடும் காட்டு பன்றிகளால் ஆபத்து

அருமனை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிற்றாறு பகுதி அழைய மலைகள் அடங்கிய காட்டுப்பகுதி ஆகும். மலையோர பகுதி என்பதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி யானைகள், புலி, சிறுத்தை என வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. சில நேரங்களில் அவை மனிதர்களை தாக்கி கொன்றுவிடுவதும் நடந்து வருகிறது. இந்த பகுதியையொட்டி அரசு ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் எப்போது என்ன நடக்குமோ? என பயந்தவாறு வேலைக்கு செல்கின்றனர். அவர்களை யானைகள், புலிகள் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் வனவிலங்குகள் விவசாய பயிர்களையும் நாசம் செய்துவிடுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

குறிப்பாக பத்துகாணி, கோதையாறு, ஆறுகாணி உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிப்படைகின்றனர். மாமிச பட்சினிகள் ஒருபக்கம் உயிருக்கு ஒருபக்கம் தொல்லை கொடுத்தாலும் குரங்கு, காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. ஒரேநேரத்தில் உயிருக்கும், தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே பணிக்கு செல்கின்றனர். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை அரசு ரப்பர் தோட்டங்களாக மாற்றி 60 ஆண்டுகள் ஆன பிறகும் கடந்த சில வருடங்களாக காட்டு விலங்குகள் அச்சுறுத்தலால் தொழில் பாதிக்கப்பட்டு அடிக்கடி முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்துகாணி பகுதியையொட்டி இரவு நேரத்தில் சாலையோரம் உலாவரும் காட்டுப்பன்றிகளால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

அவை கூட்டம் கூட்டமாக சாலையில் திடீரென கடந்து செல்வதால் பைக்கில் செல்பவர்கள் மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பைக்கை நிறுத்திவிட்டால் இந்த மூர்க்கமான காட்டுப்பன்றிகள் கொடூர தாக்குதலிலும் ஈடுபடும் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் மோதிரமலை அரசு ரப்பர் கழக பணியாளர் வேலைக்கு சென்றபோது யானை தாக்கி உயிரிழந்துள்ளார். மருதம்பாறை பச்சைகாவு பகுதியில் யானைகள் கூட்டமாக சென்று பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. குழித்துறை ஆறுகாணி சாலையோரத்திலும் யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர். இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு பலரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post பத்துகாணி அருகே கூட்டம் கூட்டமாக நடமாடும் காட்டு பன்றிகளால் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Bathugani ,Arumanai ,Chittaru ,Kanyakumari ,
× RELATED அருமனையில் ஆற்றில் மூழ்கி முதியவர் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்