×

கல்வராயன் மலையில் எஸ்பி தலைமையில் போலீசார் ரெய்டு: கருமந்துறை, கரியகோயிலில் சாராய வேட்டை

சேலம்: கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை, கரியகோயில் காட்டுப்பகுதியில் மாவட்ட எஸ்பி அருண்கபிலன் தலைமையில் 50 போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை முதல் மலையில் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 59 பேர் உயிரிழந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் தீவிர சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் இருக்கும் கருமந்துறை மலைப்பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த ஒரு வாரமாக மாவட்ட எஸ்பி அருண்கபிலன் அமைத்த தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுவரை நடந்த சாராய வேட்டையில் ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கரியகோயில் பகுதியில் 10 பேர் கைது செய்யப்பட்டு, 250 லிட்டர் சாராயம் பறிமுதலாகியுள்ளது. இச்சூழலில் மாவட்ட எஸ்பி அருண்கபிலன் இன்று அதிகாலை நேரடியாக கருமந்துறைக்கு சென்றார். அங்கிருந்து எஸ்பி தலைமையில் டிஎஸ்பிக்கள் ஆனந்தன், சென்னகேசவன் (மதுவிலக்கு), தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில், கருமந்துறை இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் 50 போலீசார், கல்வராயன்மலையில் சாராய வேட்டைக்கு புறப்பட்டனர்.

இந்த தனிப்படையினர் கருமந்துறை, கரியகோயில் பகுதியில் இருக்கும் மலைக்கிராமங்களை ஒட்டிய காட்டுப்பகுதிக்கு சென்று, சாராயம் காய்ச்சப்படுகிறதா?, சாராய ஊறல் போடப்பட்டுள்ளதா? என சோதனையிட்டு வருகின்றனர். கருமந்துறை மலையில் உள்ள பல்வேறு ஓடைகளை ஒட்டிய இடங்களில் சல்லடை போட்டு போலீசார் சோதனையிட்டனர். அதேபோல், குன்னூர் உள்ளிட்ட சில மலைக்கிராமங்களிலும் சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி, தர்மபுரி எல்லையாக இருக்கும் மலைப்பகுதியில் இச்சோதனையை அதிகாலை முதல் நடத்தி வருகின்றனர். இன்று மாலை வரை பல்வேறு இடங்களில் போலீசார் ரெய்டு நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கல்வராயன் மலையில் எஸ்பி தலைமையில் போலீசார் ரெய்டு: கருமந்துறை, கரியகோயிலில் சாராய வேட்டை appeared first on Dinakaran.

Tags : SP ,Kalvarayan Hill ,Karumanthurai, Kariyakoil ,Salem ,Arunkapilan ,Karumanturai ,Kariyakoil ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக...