×

கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாக வடமாநில இளைஞர் அடித்துக்கொலை

கரூர்: கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாக வடமாநில இளைஞர் அடித்துக்கொலை செய்துள்ளனர். கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் காவிரி ஆற்று பரிசல்துறையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர்.

அதே சமயத்தில் கரூரில் ஒரு வடமாநில இளைஞரை சிலர் கண்மூடித்தனமாகத் தாக்கி கழுத்தில் கால்களால் மிதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்துள்ளது. இறந்து கிடந்த நபரும் வீடியோவில் இருந்த நபரும் ஒன்றாக இருக்கவே வீடியோவைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் இறந்தவர் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் என்பதும் அவர் கடந்த சில நாட்களாக கரூரில் வாங்கல் கடைவீதியில் சுற்றி திரிந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்த விசாரணையில், சம்பவத்தன்று மாலை அந்த இளைஞர் வாங்கல் காவிரி ஆற்று பரிசல்துறை விநாயகர் கோயில் பின்புறம் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள இரு சக்கர வாகனத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட வாங்கல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், பாலாஜி, கருவாடு (எ) முத்து, கரன்ராஜ், கே.வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த கதிர்வேல் (28) ஆகிய ஐந்து நபர்களும் அந்த இளைஞரை குச்சியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அத்தோடு கழுத்தில் கால்களை வைத்து மிதித்துளனர். இதனால் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விஏஓ பூர்ணிமா அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வினோத்குமார், கதிர்வேல் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள மற்ற மூவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அத்தோடு உயிரிழந்த வட மாநில இளைஞர் யார், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், இத்தனை நாட்களாக தமிழ்நாட்டில் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி வடமாநில இளைஞரை அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாக வடமாநில இளைஞர் அடித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : northern state ,Karur ,North- ,Kaviri Aatu Prisaltarha ,Wangal ,North State ,Karur district ,Dinakaran ,
× RELATED கலர் கோழிக்குஞ்சு விற்பனை களை கட்டியது