×

இந்தியன் 2 உருவாக காரணம் அரசியல்தான்: கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

சென்னை: ‘இந்தியன் 2’ படம் உருவாக காரணம் அரசியல்தான் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார். ஷங்கர் இயக்கத்தில் 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘இந்தியன் 2’. ஜூலை 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னையில் நடந்தது. அப்போது ‘இந்தியன் 2’ படத்தின் டிரைலரை ஷங்கர், இசை அமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, நண்டு ஜெகன் ஆகியோருடன் அமர்ந்து பார்த்த கமல்ஹாசன், பிறகு மேடையில் பேசியதாவது: 2ம் பாகமாக படத்தை உருவாக்கலாம் என்று முதல் விதை போட்டது ‘இந்தியன்’ படம்தான். இப்படத்தில் நடித்தபோதே ஷங்கரிடம் நான், ‘இந்தியன் 2’ எப்போது உருவாக்கலாம் என்று கேட்டேன். இப்போது அது சாத்தியமாகி இருக்கிறது. அதோடு, ‘இந்தியன் 3’ படத்தையும் நாங்கள் உருவாக்கி முடித்துவிட்டோம். இங்கு பேசிய ரவிவர்மன், ‘இந்தியன் 2’ சாதனையை இனி ஷங்கரும், கமலும் நினைத்தாலும் செய்ய முடியுமா, அதை முறியடிக்க முடியுமா என்று பேசினார்.

நான் விவாதம் செய்ய வரவில்லை. செய்ய முடியுமா, முறியடிக்க முடியுமா என்பதை நாங்களே மீண்டும் இணைந்து ‘இந்தியன் 3’ படத்தை உருவாக்கி முடித்துள்ளோம். ‘இந்தியன்’ படம் வெளியாகி 28 வருடங்கள் கழித்து ‘இந்தியன் 2’ உருவாகியுள்ளது. இதற்கு காரணம், அரசியல்தான். இன்னும் நாம் மாறவில்லை. அதற்கு எல்லோரும் ஆயத்தமாக வேண்டும் என்று சொல்வதுதான் ‘இந்தியன் 2’. இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று சொல்வோம் இல்லையா, அதன் வெளிப்பாடுதான் இந்தியன் தாத்தா. நல்லவேளை, எனக்கு அதேமாதிரி கேரக்டரை ஷங்கர் கொடுத்தார். 100 சதவீதம் எப்படி கடுமையாக உழைப்பது என்பதை இசை அமைப்பாளர் அனிருத்திடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். நானும் அவரிடம் இருந்து சில விஷயங்களை தெரிந்துகொண்டேன். பல தடைகளை கடந்து ‘இந்தியன் 2’ உருவாகியுள்ளது.

இதற்கு காரணம் இயற்கை, படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா லாக்டவுன் போன்ற காரணங்களை சொல்லலாம். இந்த படத்தில் நடித்திருக்கும் நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா போன்றோர் இன்று நம்மிடம் இல்லை என்றாலும், அவர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வை இந்தியன் 2 படம் ஏற்படுத்தும். ஷங்கர் கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். இனி ‘இந்தியன் 4’, ‘இந்தியன் 5’ ஆகிய பாகங்கள் வருமா என்று கேட்கிறார்கள். அய்யோ… அதை நினைத்துப் பார்த்தாலே பதற்றமாக இருக்கிறது. மலையாளத்தில் மம்மூட்டி ‘சிபிஐ டைரி குறிப்பு’ படத்தில் செய்த சாதனையை நினைத்துப் பார்க்கிறேன். அதை என்னால் தாண்ட முடியுமா என்று தெரியவில்லை. தெம்பும், சந்தர்ப்பமும் அமைந்தால் ‘இந்தியன் 4’, ‘இந்தியன் 5’ ஆகிய பாகங்களை ஷங்கரும், நானும் இணைந்து உருவாக்க முடியும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

The post இந்தியன் 2 உருவாக காரணம் அரசியல்தான்: கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chennai ,Makkal Neethi Mayyam ,Shankar ,Dinakaran ,
× RELATED இந்தியன் 2 🔥🔥 Kamal Haasan Speech at Indian 2 Trailer Launch | Shankar | Anirudh | Dinakaran news.