×

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது.

பெண்கள் உட்பட ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக செய்திகளில் வரும் தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டோர் வாழ்வதற்கான உரிமைகளையே மீறும் மிகப்பெரிய பிரச்சினையாக கருத வேண்டியிருக்கிறது. கள்ளச் சாராயத்தை உற்பத்தி செய்தல், வாங்கி, விற்றல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்துக்கு அதிகாரம் இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்துக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் விவரங்கள், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இழப்பீடு உள்ளிட்டவை அரசின் அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும். இச்சம்பவத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : National Human Rights Commission ,Chennai ,Chief Secretary ,DGB ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED தேசிய மனித உரிமை ஆணையமும், மகளிர்...