×

தெளிவு பெறுவோம்!

பக்தர்களுக்குக் கடவுள் தரிசனம் கொடுத்த வரலாறுகளை நாம் புராணங்களில் படிக்கிறோம். சமீபகாலத்தில் வாழ்ந்த அடியார்கள், ஆழ்வார்கள்கூட இவ்வாறு உணர்ந்திருக்கிறார்கள். நம்மிடையே அது போன்ற நிகழ்ச்சி இப்போது ஏன் நடைபெறுவதில்லை?

– விஜயன், பாப்பாரபட்டி.
நாணலும், பாசியும் மூடிய குளத்தில், அதனுள்ளே துள்ளி ஓடும் மீன்களை வெளியிலிருந்து பார்க்க முடியுமா? அதைப்போல மாயையால் மூடப்பட்ட மனித இதயத்தில், ஈஸ்வரன் உள்ளே இருந்தாலும் வெளியே தெரிவதில்லை. திவ்ய மாதாவை நாம் ஏன் காண முடிவதில்லை? அவள் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகிறாள். பிறர் கண்ணில்படாமலே இருந்து, எல்லா நிர்வாகத்தையும் சாமர்த்தியமாக கவனிக்கும் உயர்குல குடும்பத்து எஜமானியைப் போல அவள் நம்மை வழிநடத்துகிறாள். அவளுடைய உண்மையான பக்தர்களுக்கு மட்டும் அவள் திரையைத் தாண்டி, வெளியே வந்து தரிசனம் கொடுக்கிறாள். அப்படித் தரிசித்தவர்கள் அந்த இன்பத்தை மட்டுமே வெளியே கூறுகிறார்கள். வேறு விதமாக வர்ணிப்பது சாத்தியமில்லை.

நாம் அனைவரும் வேதாந்திகளாகிவிட்டால் குடும்பத்தை யார் காப்பாற்றுவது? எல்லோருக்குமே தெய்வ சிந்தனையும், ஆன்மிக வாழ்க்கையும் முக்கியமாகிவிட்டால், பணம் சம்பாதிக்கும் பற்று எப்படி ஏற்படும்? குடும்பம் எவ்வாறு முன்னேறமுடியும்?

– ஞானசேகரன், மணக்கால்.
பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும், அதைச் சேர்க்க வேண்டும் என்ற ஆவலும் நம்மை உயர்த்துவதில்லை. ஆசைகள் நம்மை அழிக்கின்றன. அவற்றை ஒதுக்கும் மனப்பான்மை நம்மை உயர்த்துகிறது. இதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆயினும் உலக வாழ்க்கையில் பயன்படவும், நம்மை நாமே பார்த்துக்கொள்ளவும் பொருள் தேவைதான். நம்முடைய மதம் அவற்றைச் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதன் மீது பற்று வைக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறது. ஒருவர் சொந்த வீட்டில் இருக்கிறார். அதன் ஒவ்வொரு பகுதியையும் அவர் சொந்தம் என்று நினைத்துப் பற்று வைப்பதால், அதில் ஏற்படும் சிறு பாதிப்பும்கூட அவரை வேதனைக்கு ஆளாக்குகிறது. அதேபோல இன்னொரு வீட்டில் ஒருவர் வாடகைக்கு குடியிருக்கிறார். அவர் அதே வசதிகளை அனுபவித்தாலும் வீட்டைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அது தன்னுடையது அல்ல என்பதை ஒவ்வொரு நிமிடமும் உணருவதே அதற்குக் காரணம். பொருள் சம்பாதித்தாலும், குடும்பம் நடத்தினாலும் அப்படிப்பட்ட மனப்பான்மை நமக்கு இருக்கவேண்டும். பொறுப்புகள் இருந்தாலும் அதுவே பற்றாக இருந்து நம்மை இழுக்கக்கூடாது. எல்லாம் இறைவன் கொடுத்தவை, அவனுக்கே உரியவை என்று நினைத்துவிட்டால் நம்முடைய நினைவிலும், செயலிலும் தூய்மை இருக்கும். இப்படி பற்றில்லாமல் கடமையைச் செய்வது எப்படி? இந்த வழியைத்தான் நம்முடைய வேதங்களும், சாஸ்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும் காட்டுகின்றன. நம்முடைய தேவைக்கேற்ப லேசான அல்லது கடுமையான மருந்தைச் சாப்பிடுவது போல், நம்முடைய பற்றுதல் நம்மை எவ்வளவு வாட்டி எடுக்கிறது என்பதைப் பொறுத்து இவற்றில் நாம் ஈடுபாடு கொள்ளவேண்டும். தியாகம் செய்வது வேறு; வெறுப்பது வேறு. முழு மதிப்பையும் உணர்ந்து, அது கிடைத்ததும் எனக்கு வேண்டாம் என்று சொல்வது தியாகம். கிடைக்காத ஒன்றை நினைத்து வேதனைப்படும்போது கிடைப்பது வெறுப்பு. நாம் அடையும் சலிப்பும், தளர்ச்சியும் வெறுப்பைத்தான் கொடுக்கும். அது நம்மை முன்னேற்றாது. மனப்பக்குவத்தால் கிடைக்கும் தியாக உணர்வு நம்மை முன்னேற்றும். வேதாந்தக் கருத்துகள் இந்த உணர்வைத்தான் நம்முடைய மனதில் வளர்க்கின்றன. இதனால் லாபமே தவிர, இழப்பு எதுவும் இல்லை.

The post தெளிவு பெறுவோம்! appeared first on Dinakaran.

Tags : Puranas ,God ,Adiyars ,Alvars ,Vijayan ,Paparapatti ,
× RELATED கோயில் சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் தம்பதியினர்!