×

கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை பேரரசர் முதல் பாமரன்வரை சகலரும் விதவிதமாக வழிபட்டிருக்கிறார்கள். கிருஷ்ணன் தவழ்ந்த தருணம் முதல் துவாரகாதீசனாக தேரில் வலம் வந்ததுவரை அந்தந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கிருஷ்ணனைப் பலவாறாக வழிபட்டிருக்கிறார்கள். தாய் யசோதையின் கண்டிப்பு, தந்தை நந்தகோபரின் அன்பு, கோபியரின் காதல், அரக்கியின் வஞ்சகம், குசேலரின் நட்பு, பாண்டவர்களின் பாசம், பாரதப் போரில் கீதையான ஞான வெள்ளத்தை பாய்ச்சிய அவன் மீது பீஷ்மர் கொண்ட வியப்பு, உத்தவரின் ஞானத் தொடர்பு எல்லாமே அவரவர் கிருஷ்ணனை வழிபட்ட விதம்தான்.

இத்தகைய ஞான பரிபூரணனான ஸ்ரீ கிருஷ்ணன் வெவ்வேறு கோலங்களில் பல்வேறு தலங்களில் அருட்கோலோச்சுகிறார். அப்படித்தான் செங்கம் என்கிற செங்கண்மா தலத்தில் ருக்மணி – சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதியாக கம்பீர அழகு காட்டியருள்கிறார். அது பாரதப்போர் முடிந்த சமயம். ஸ்ரீ கிருஷ்ணர் தென் வங்கக் கடலோரத்தில் குடும்பத்தோடு ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தார். கலியுகம் முழுவதும் திருவல்லிக்கேணியில் அமர்ந்து அர்ச்சாவதார ரூபமாக அருள்பாலிக்கலாம் என்று உறுதியோடுதான் பயணத்தைத் தொடங்கினார். ஏகசக்ரபுரி என்றழைக்கப்பட்ட தற்போதைய செங்கத்திற்குள் தம் திருப்பாதத்தை பதித்தார். ஊரே திரண்டது. பேரரசன் முதல் சிறு மன்னன்வரை எல்லோரும் அங்கே கூடி தரிசித்துக் குளிர்ந்தனர். காடுகளுக்குள் தவமிருந்த முனிவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் கிருஷ்ணத் தென்றல் வீசுவது உணர்ந்து அதன் மூலத்தைக் காண ஊருக்குள் குவிந்தனர். அந்த திவ்ய தரிசனம் எல்லோருக்குள்ளும் கல்வெட்டாகப் பதிந்தது. செவிவழிச் செய்தியாகவே பல நூறு தலைமுறைகள் தொடர்ந்தன. நாயக்கர்களின் காலமும் நெருங்கியது.ஸ்ரீ கிருஷ்ண அர்ச்சாவதாரம் அறிந்த தளவாய் திம்மப்ப நாயக்கர் வியந்தார். கிருஷ்ணரிடம் பெரும் பக்தி பூண்டிருந்தவர் அவர்.

தன் பக்தியை கோபுரமாக உயர்த்தி, கோயிலாக நிறைத்துக் காட்டினார். ஊரின் நடுவே நூறடி உயரமுள்ள ராஜகோபுரம் கம்பீரமாக நிமிர்ந்திருக்கிறது. உள்ளே நுழைந்தவுடனே மாபெரும் மைதானத்தின் மையத்திலுள்ள கற்கோயில் நம்மை ஈர்க்கிறது. கோயில் வளாகத்தின் விஸ்தீரணமும் நேர்த்தியான சந்நதிகளின் அழகும் வியப்படையச் செய்கின்றன. மண்டபப் படியேறும் முன்பே ‘சற்று நில்லுங்கள்’ என்பதுபோல அசரவைக்கும் அழகோடு திகழ்கிறது ஒரு சிற்ப யாளி. மண்டபப் படிகளின் பக்கவாட்டில் நாலுகால் பாய்ச்சலோடு ஓடும் பாவனை காட்டும் அந்த யாளி, தன் முகத்தை பின் பக்கம் திருப்பி கோபாவேசத்தோடு வாய் பிளந்து நாக்கை நீட்டி அலறும் சீற்றத்தை கல்லில் கவினுறப் படைத்திருக்கிறார்கள். உள்ளே சிற்பக் காடாக மண்டபமே விரிகிறது. விரலளவு சிற்பம் முதல் ஆளுயரம்வரை சிலைகள். களிமண்ணை பிசைவதுபோல கல்லில் அநாயாசமாக விளையாடியிருக்கிறார்கள். தசாவதாரம் வரிசையாகத் தூண்களில் அணிவகுக்கின்றன. இரண்ய கசிபுவின் வயிற்றைக் கிழிக்கும் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தையும், வாமனரின் தேஜஸையும், கிருஷ்ணரின் சிருங்காரத்தையும் கற்களில் உயிர்த் துடிப்புடன் செதுக்கியிருக்கிறார்கள். உதட்டில் பொருத்திய புல்லாங்குழலோடு சங்கு சக்ரத்தோடு, ஒரு காலை மடித்து திரிபங்க நிலையில் கண்ணன் நிற்கிறான். அவனது மடித்த காலின் பாதத்தை பசு தன் நாவால் வருடுகிறது. அத்ரி மகரிஷிக்காகவே கிருஷ்ணன் காட்டிய அபூர்வ கோலம் இது.

இந்த மண்டபத்தை மட்டும் கல் கல்லாய் தடவிப் பார்த்து முழுவதும் அறிந்து ரசிக்க சில மாதங்களாகும் எனில் மிகையில்லை. இந்த மண்டபத்திலேயே தளவாய் திம்மப்ப நாயக்கரும் சிலை கொண்டுள்ளார்.அடுத்து அர்த்த மண்டபம். அழகான அலங்காரங்களோடு உற்சவராக கனகவல்லித் தாயாரை தரிசிக்கிறோம். அருகேயே ஸ்ரீ தேவி-பூதேவி சமேதராக உற்சவர் வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். கருவறையில் ருக்மணி-பாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி. வேணுகோபாலன் பார்த்தசாரதியாக, தேரோட்டும் சாரதியாக கையில் சாட்டையோடு நிற்கிறார். இடது கரம் வரத ஹஸ்தம் காட்ட, தலையை சற்றே திருப்பி குதிரைகளை செலுத்துபவர்போல சேவை சாதிக்கும் அழகு உள்ளத்தை நெகிழ்த்தும். இந்த சந்நதியில் கமழும் பச்சைக்கற்பூரமும் துளசியின் வாசமும் உள்ளத்தை குளிர்விக்கின்றன. பிரச்னைகளின் எண்ண ஓய்ச்சல்களால் குமுறும் மனம், இந்த கிருஷ்ண சாந்நித்தியத்தில் அடங்குகிறது. பேரமைதி நம்மைச் சூழ்கிறது. பிராகார வலத்தில் முதலில் தனிச் சந்நதியில் பேரருளோடு கனகவல்லித் தாயார் அருளைப் பொழிகிறாள். அடுத்ததாக ஆண்டாள், ஆழ்வார்கள், ராமானுஜர் என்று ஒவ்வொருவராக தனித்தனி சந்நதியில் தரிசிக்கிறோம். 1600ம் வருடத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. கோயில் கொடிமரத்திற்கு கீழ் விழுந்து நமஸ்கரிக்கையில் வேணுகானம் செவிக்குள் புகுந்து நெஞ்சத்தை நிறைக்கிறது.செங்கம் தலம், திருவண்ணாமலை-பெங்களூரு பாதையில் திருவண்ணா மலையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

படங்கள்: சு.திவாகர்.
கிருஷ்ணா

The post கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Kṛṣṇa ,Temple ,Lord ,Sri Krishna ,Emperor ,Palmaran ,Dwarkadyṣṇa ,Yasoda ,Nandakobar ,Kopier ,Art Fragrance Kṛṣṇa Temple ,
× RELATED சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 11,108...