×

லயிக்க வைக்கும் லெபாக்ஷி

ஆலயம்: வீரபத்திர சுவாமி ஆலயம், லெபாக்ஷி, அனந்தபூர் மாவட்டம்,
ஆந்திரப் பிரதேசம்.
காலம்: பொ.ஆ.1530-1540 விஜயநகர மன்னர் அச்சுத தேவ ராயரின் ஆட்சியில் இப்பகுதியின் ஆளுநர்களாக இருந்த விருபண்ணா மற்றும் வீரண்ணா சகோதரர்களால் கட்டப்பட்டது.ராமாயணத்தின் முக்கிய நிகழ்வான ராவணன் சீதாதேவியை கடத்திச்செல்வதைப்பார்த்த பறவைகளின் அரசனான ஜடாயு ராவணனுடன் சண்டையிடுகிறார். அப்போரின்போது கடுமையாக காயமடைந்த ஜடாயு வீழ்ந்த பகுதி லெபாக்ஷி (லெ பக்ஷி – பறவை) என்று நம்பப்படுகிறது. இங்குதான் ஜடாயு, ராமர் மற்றும் அவரது சகோதரர் லட்சுமணனுக்கு சீதை ராவணனால் கடத்தப்பட்டதைத் தெரிவிக்கிறார். இறக்கும் தருவாயில் இருந்த ஜடாயுவுக்கு ராமர் நன்றி கூறி முக்தி அடைய உதவினார். புராண முக்கியத்துவம் நிறைந்த லெபாக்ஷியில் அமைந்த பிரம்மாண்ட ஆலயமே சிவபெருமானின் அம்சமான வீரபத்திர சுவாமி கோயில்.கருவறையில் வீரபத்ரர், மண்டை ஓடுகள், ஆயுதங்கள் ஏந்தி அருள் பாலிக்கிறார். விஜயநகர கட்டிடக்கலை பாணியில், பேரழகு சிற்பங்கள் அமைந்த பெரும் தூண்களுடன் கூடிய ரங்க மண்டபம், அந்தராளம், கருவறை இவற்றுடன், மேற்கூரை முழுவதும் மகாபாரத, ராமாயண காட்சிகள் நிறைந்த பழங்கால வண்ண ஓவியங்கள், சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. மண்டபத்தின் உள்ள புடைப்புச்சிற்பங்களில், பிரம்மா, நடராஜர், பிட்சாடனர், நந்தி, பார்வதி, நாட்டியப்பெண்கள் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.முற்றுப்பெறாத கல்யாண மண்டபத்தில் உள்ள தூண் சிற்பங்களின் நேர்த்தியும், அழகும் வியப்பில் ஆழ்த்தும்.‘‘தொங்கும் தூண்’’ கோயிலின் மற்றொரு ஈர்ப்பு. தூணின் அடிப்பகுதிக்கும் தரைக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி உள்ளது, இதனூடே துணி மற்றும் காகிதம் போன்றவற்றை எளிதில் நுழைத்து எடுக்க முடியும். கோயில் வளாகத்தின் கிழக்குப் பகுதியில் பெரிய கற்பாறையில், ஒரு பெரிய ஏழு தலை நாகத்தின் கீழ் அமைந்துள்ள சிவலிங்கம், மற்றொரு பாறையில் வடிக்கப்பட்டுள்ள பெரிய பிள்ளையார் சிற்பம் ஆகியவை சிறப்பானவை.கோயிலின் வெளிப்புறத்தில் சுமார் 600 அடி தொலைவில் ஒரு பெரும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள 18 அடி உயரம், 30 அடி நீளம் கொண்ட மாலைகள் மற்றும் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட நந்தி சிற்பத்தின் அழகு பிரமிக்க வைக்கிறது.

The post லயிக்க வைக்கும் லெபாக்ஷி appeared first on Dinakaran.

Tags : Lebakshi ,Veerabhatra Swamy Temple ,Lebakshi, Anantapur District, Andhra Pradesh ,Virupanna ,Veeranna ,Vijayanagara king ,Achutha Deva Raya ,Ramayana ,Sita Devi ,Ravana ,
× RELATED வீரபத்திர சுவாமி கோயில் விழா