×

திருவெள்ளக்குளம் ஸ்ரீ நிவாசப் பெருமாள்

ஒரு குளம்தான் எத்தகைய எதிர்பாராத நல் மாற்றங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது! அதற்கு நன்றி சொல்வதற்காகவே அந்தக் குளம் அமைந்திருக்கும் பகுதியே அந்தக் குளத்தின் பெயரில் விளங்குகிறது! ஆமாம், திருவெள்ளக்குளம் அப்படி புராண முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொய்கை. இந்தக் குளம் உருவானதே ஒரு ‘வெள்ளைய’னால்! யார் அந்த வெள்ளையன்?துந்துமாரன், சூரியகுலத்து வேந்தன். பல வருடங்களாகப் பிள்ளைப் பேறு இன்றி ஏங்கியிருந்த அவனது கவலையைப் போக்க இறைவன் அவனுக்கு ஒரு குழந்தையை பிரசாதமாக நல்கினான். அது இறைக் குழந்தை என்பது அதன் பிறப்பிலேயே தெரிந்தது. ஆமாம் மனித இயல்புக்கு மாறாக, முற்றிலும் வெண்மை சருமத்துடன் திகழ்ந்தது. அதனாலேயே அக்குழந்தைக்கு சுவேதன் என்று பெயரிட்டான் மன்னன். ஸ்வேதம் என்றால் வெண்மை. அரண்மனையே குழந்தை பிறந்த வைபவத்தில் களித்திருக்கும்போது, அந்தக் குழந்தைக்கு ஆசி நல்க குலகுருவான வசிஷ்டர் வந்தார். சுவேதனைப் பார்த்த அவருடைய முகத்தில் பளிச்சென்று கவலை ரேகை ஓடியது. அவனது அங்க அமைப்புகளை கவனித்த அவர், அவன் பிறந்த தேதியை, நேரத்தைக் கணக்கிட்ட அவர், அந்தக் குழந்தை பாலகப் பருவத்தையே தாண்டாது என்றறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் தனக்குத் தெரிந்த உண்மையை மறைக்கலாகாது என்ற நேர்மையுடன் அவர் துந்துமாரனிடமும், அவன் மனைவியிடமும் அதனைத் தெரிவித்தார். பெற்றோர் பதறிப் போனார்கள்.

இது என்ன கொடுமை! ஏங்கி, தவமிருந்து பெற்ற அபூர்வமான பிள்ளையை அற்பாயுளிலா பறிகொடுக்க வேண்டும்! ‘குலகுருவே தாங்களே இந்த விதியை மாற்ற உதவ வேண்டும்’ என்று வசிஷ்டர் அடி தொழுதார்கள். ‘‘கவலைப்படாதீர்கள்,’’ ஆறுதலளித்தார் முனிவர். ‘‘உங்கள் மனவேதனையைத் தீர்க்க நிவாசன் காத்திருக்கிறார். இவன் சிறுவனாக வளர்ந்த பிறகு, அவரிடம் உங்கள் குறையைச் சொல்லி தீர்வு காணுங்கள்,’’ என்று பரிகாரம் சொன்ன அவர் குறிப்பிட்டது, இப்போதைய வெள்ளக்குளம் பகுதியில் இன்றும் அர்ச்சாவதாரமாக கொலுவிருந்து அனைவருக்கும் ஆறுதலும், தேறுதலும் அளித்துகொண்டிருக்கும் அண்ணன் பெருமாளைத்தான். முதலில் அவர்கள் அங்கே போவதாகவும், தான் தலயாத்திரையைப் பூர்த்தி செய்தபிறகு வந்து அவர்களுடன் அங்குவந்து சேர்ந்துகொள்வதாகவும் தெரிவித்தார் வசிஷ்டர். குலகுரு யோசனைப்படியே அரச தம்பதியர் அண்ணன்கோயிலுக்கு வந்தனர். தங்கள் மைந்தன் சுவேதனை கோயில் பொய்கையில் நீராடச் செய்தனர். வெண்மையானவன் நீராடியதாலேயே அந்தக் குளம் வெள்ளைக் குளம் என்றழைக்கப்பட்டு தற்போது வெள்ளக்குளமாக மாறிவிட்டது. இந்தத் தலத்துப் பெருமாளின் கருணை, வெள்ளமாகப் பொங்கக்கூடியது என்ற கருத்தை வலியுறுத்துவதாக உள்ளதும் பொருத்தம்தானே! பிறகு எம்பெருமான் ஸ்ரீ நிவாசனை வழிபட்டார்கள். இதே சமயத்தில் அங்கே வந்து சேர்ந்தார் வசிஷ்டர். அங்கே ஒரு ஆசிரமம் அமைத்துக்கொண்டு, சுவேதனுக்கு நரசிம்ம மகாமந்திரத்தை உபதேசம் செய்தார்.

இந்த மந்திரம், அதனை ஜபிப்பவரின் ஆயுளை விருத்தியாக்கும். குருவின் உபதேசப்படி அந்த மந்திரத்தை ஜபிக்கத் தயாரானான் சுவேதன். ஒற்றைக் காலில் தவமிருந்தபடி ஐப்பசி மாத சுக்லபட்ச தசமியன்று மந்திரம் சொல்ல ஆரம்பித்த அவன், கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி அன்றுவரை அவன் வயதுக்கும், வளர்ச்சிக்கும் மீறிய மிகக் கடுமையான தவமாக எட்டாயிரம் முறை அந்த மந்திரத்தை ஜபித்து உருவேற்றினான். அந்தப் பகுதியிலிருந்த மக்களும், முனிவர்களும் அங்கே ஒன்றுகூடிவிட்டனர். வசிஷ்டர் தலைமையில் ஒரு பாலகன் நெடிய தவமிருப்பதை வியந்து பார்த்தார்கள். எம்பெருமானும் மனம் நெகிழ்ந்தார். தன் கருட வாகனத்தில் பறந்து வந்தார். சிறுவனை ஆரத் தழுவிக்கொண்டார். ‘சிரஞ்சீவியாக வாழ்க’ என்று வாழ்த்தினார். அவனுக்கு மட்டுமல்லாமல், அந்த நரசிம்ம மந்திரத்தை அந்தப் புஷ்கரணியில் அமர்ந்தபடி ஜபிப்பவர்களுக்கும் நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தான் வழங்குவதாக ஸ்ரீ நிவாசப் பெருமாள் உலகோர் அனைவருக்குமே பேரருள் பாலித்தார்.இந்த வெள்ளைக் குளம் இன்னொரு சம்பவத்தாலும் புகழ் பெற்றது. 108 திவ்யதேசம் என்றாலே அவற்றை மங்களாசாசனம் செய்த ஆழ்வார் பெருமக்கள்தான் நம் நினைவுக்கு வருவார்கள். அவர்களிலும் குறிப்பாக திருமங்கையாழ்வார் நம் நினைவில் முன்னே நிற்பார்.

காரணம், மிக அதிக எண்ணிக்கையில், 86 திவ்ய தேசங்களுக்கு, தன் குதிரையிலேயே விஜயம் செய்து அந்தந்தப் பெருமாள்களை கண்ணாற, உளமாற சேவித்து, தன் வருகையைப் பதிவு செய்யும் வகையிலும், பிறர் அனைவருக்கும் அந்த இடத்தில் அப்படி ஒரு பேரருள் கோயில் கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பல பாசுரங்களை, ஒவ்வொரு தலத்துக்கும் இயற்றிப் பேரானந்தம் அடைந்தவர்; அந்த ஆனந்தத்தை நாமும் அடையச் செய்தவர். ஒரு காலத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு சிற்றரசனாக வெறும் அரசியல் வாழ்க்கையிலேயே உழன்று கொண்டிருந்த அவரை, வைணவம் போற்றும் ஆழ்வாராக மாற்றிய பெருமை ஒரு கந்தர்வப் பெண்ணுக்கு உண்டு. அத்தகைய அற்புதத்தை அவள் நிகழ்த்த நிலைக் களமாக அமைந்தது இந்த வெள்ளக்குளம்!வெள்ளக்குளத்தில் குமுத மலர்கள் பூத்துப் படர்ந்திருக்கும். வானவீதியில் தன் தோழிகளுடன் சென்ற கந்தர்வப் பெண் ஒருத்தி அந்த மலர்களைப் பார்த்து தன் வயமிழந்தாள். உடனே கீழிறங்கினாள். குளக்கரைக்கு வந்தாள். கரையிலிருந்தபடியே மலர்களின் அழகைக் கண்டு பூரித்துப் போன அவள், மெல்ல உள்ளே இறங்கி, அந்த மலர்களை மென்மையாகக் கொய்ய ஆரம்பித்தாள். நேரமாக ஆக, உடன் வந்த தோழிகள் இவளுக்காகக் காத்திருந்து அவள் வராததால் தாம் மட்டும் கந்தர்வ லோகம் திரும்பினார்கள். தனித்து விடப்பட்ட இந்தப் பெண் திகைத்தாள். குறிப்பிட்ட நேரம் கடந்துவிட்டால் அவளால் மீண்டும் தன் உலகத்துக்கு மீள முடியாது.

வேறு வழியின்றி ஒரு மானிடப் பெண்ணாக இந்த திருவெள்ளக்குளம் பகுதியிலேயே அவள் தங்கிவிட்டாள். தனிமைப்பட்டுத் தவித்த அவளை அந்த ஊர்வாழ் வைத்தியர் ஒருவர் கண்டு, அவள் மீது இரக்கம் கொண்டு, தன் பொறுப்பில், தன் மகளாக அவளை வளர்த்து வந்தார். குமுத மலர்கள் நிறைந்த பொய்கையருகே கண்டெடுக்கப்பட்டவள் என்பதால் இவள் குமுதவல்லியானாள். ஒரு மலரே இன்னொரு மலரைப் பறிக்கும் அதிசயத்தை அப்போது அந்தப் பக்கமாக வந்த நீலன் கண்டு பிரமித்து அப்படியே நின்றுவிட்டான். சிற்றரசனான அவன் அந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தபோது அவன் கண்வலையில் சிக்கிய குமுதவல்லி, உடனேயே அவனது மனசுக்குள்ளும் போய் அமர்ந்துகொண்டாள்! தன்னை அவன் காதலுடன் பார்ப்பதை அறிந்த அவள் திடுக்கிட்டாள். தான் இங்கேயே தங்கவேண்டி வந்ததும், இப்போது இவனது பார்வைக்குள் சிக்கியிருப்பதும் இந்தத் தலத்துப் பெருமாளின் திருவுளம்தான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள். அந்தப் பெண்ணுக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் சமர்ப்பிக்கத் தயாரானான் நீலன். ஆனால் அவளோ, வெறும் காதலுடன், கல்யாணத்துடன், குடும்ப உறவுடன் அவனது பொறுப்புகள் முடங்கிவிடக் கூடாது என்று அவனிடம் சொன்னாள். இவன் ஆற்றல் மிக்கவன். அந்த ஆற்றல் நாடு வளர்க்கும் அல்லது பிடிக்கும் அரசியல் வியூகத்துக்குள் சிக்கி வீணாகிவிடக்கூடாது; இவன் பெருமாள் பெருமையை உணர வேண்டும், போற்ற வேண்டும், பரப்ப வேண்டும்; அதற்குத்தான் உற்ற துணையாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொண்டாள். ஆகவே திருமால் திருத்தலத்தில் மலர்ந்த அவனது காதலைத் தான் ஏற்க வேண்டுமானால், நீலன் பஞ்ச சம்ஸ்காரங்களை மேற்கொண்டு ஒரு வைணவனாக மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்தாள்.

உடனே அடிபணிந்தான் அவன். அவள் சொன்னபடி தன் உடலில் ஸ்ரீ வைணவச் சின்னங்களைத் தாங்கினான். இதுவும் அவனுடைய உள்ளார்ந்த திருமால் பக்தியாலல்ல; தன்மீது அவன் கொண்ட காதலால்தான் என்பதை உணர்ந்திருந்த குமுதவல்லி, ஒவ்வொரு நாளும் அவன் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு அமுது படைத்திட வேண்டும் என்று அடுத்த கோரிக்கையை விடுத்தாள். இதற்கும் சம்மதித்தான் நீலன். தன் கஜானாவிலிருந்து செல்வங்களை வாரி இறைத்தான். தினமும் ஆயிரம் அடியார்களுக்கு அமுது செய்தான். அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் விஷயம் கேள்விப்பட்டு அடியார்கள் வந்தார்கள். தன் வீரர்களை விட்டு அந்தப் பெரியவர்களை மரியாதை குறையாமல் அழைத்து வந்து உபசரித்தான். அதைக் கண்டு குமுதவல்லி பூரித்தாலும், நடுநடுவே பெருமாள் அவனை சோதிக்கவும் தவறவில்லை. ஒருநாள் 999 பேர் குழுமிவிட ஒரு நபர் குறைவால் மனம் பேதலித்தான் நீலன். ஒன்றுதான் ஆனாலும், அது சேர்ந்தால்தானே 1000ம் ஆகும்? தவித்து மறுகினான். வந்திருந்த அனைவருக்கும் இலை போட்டு அமரச் செய்தாகிவிட்டது. எங்கே போவான் அந்த ஒரு நபருக்காக? கண்ணுக்கெட்டிய தூரம்வரை கூர்ந்து பார்த்தான்…ஊஹும்… அந்த ஒருவரைக் காணவேயில்லை. அமர்த்தப்பட்ட பிற அனைவரும் தமக்கு உணவு பரிமாறப்படாத கோபத்தால் எழுந்து போய்விடுவார்களோ என்ற பயம் உந்த, ஒரு தவம் போல, உளமாற திருமாலை தியானம் செய்தான். உள்ளுக்கும், வெளிக்குமாக அலைந்து களைத்தான்.

ஆனால் உணவு பரிமாறப்பட, அடியார்கள் அனைவரும் அந்த அமுதை ருசித்து மகிழ்ந்தார்கள். 1000 எண்ணிக்கையில்லாமல் உணவு பரிமாறுவது வழக்கமில்லையே என்ற சந்தேகத்தோடு, பந்தியில் அமர்ந்திருப்பவர்களை எண்ணினான்… ஆயிரம்! எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? யாரந்த ஆயிரமாவது நபர்? தன் கண்களுக்குத் தப்பி எப்படி உள்ளே நுழைந்தார், இலைமுன் அமர்ந்தார்! இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த குமுதவல்லி தனக்குள் சிரித்துக்கொண்டாள். ‘எம்பெருமான் தன் கருணையைத் தன் கணவனுக்குக் காட்ட முற்பட்டுவிட்டார்’ என்று மனசுக்குள் சிலிர்த்துக்கொண்டாள். நீலன் கொஞ்சம் கொஞ்சமாக திருமால் வசப்பட்டான். இவ்வாறு அன்னதானமிடப்பட்ட அந்தப் பகுதி இன்றளவும் ‘மங்கை மடம்’ என்றழைக்கப்படுகிறது.கஜானா காலியானது. சோழ மன்னருக்குத் தான் கட்டவேண்டிய கப்பத்தைக் கட்டாமல் நிறுத்தி அதனை அன்னதானத்துக்கு செலவிட்டான் நீலன். நாளாக ஆக, ஆயிரம் பேருக்கு அன்னதானமளிக்க ஆதாரம் இல்லை. என்ன செய்வது என்று கையைப் பிசைந்தான் நீலன். எங்கே போய் பொருள் ஈட்டுவது, யாரிடம் யாசகம் கேட்பது? அப்படியே கிடைத்தாலும் அதெல்லாம் 1000 பேருக்கு தினசரி உணவிட போதுமா? பெரும் பொக்கிஷம் கிடைத்தால்தான் அது சாத்தியம். அதற்கு எங்கே போவது? கொள்ளையடிப்பதுதான் ஒரே வழி! அதற்கும் துணிந்தான் நீலன். காட்டுப் பகுதிக்குச் சென்று வழிப்பறியில் இறங்கினான். குறிப்பிட்ட நாளன்று செல்வம் சுமந்து வருவோருக்காகக் காத்திருந்தான் நீலன். அவனை முற்றிலுமாக ஆட்கொள்ள நினைத்த பெருமாள், பூர்ண மகரிஷியின் மகளாக வளர்ந்துவந்த பூர்ணவல்லி என்ற திருமகளை மணந்துகொண்டு, மிகப் பெருஞ்செல்வமாக சீர் வகைகளைச் சுமந்தும், மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்தபடியும் பெருமாள், மனைவியுடன் வந்துகொண்டிருந்தார்.

அதைப் பார்த்த நீலன் மகிழ்ச்சியால் துள்ளினான். உடனே திருமண கோஷ்டிமுன் பாய்ந்தான். கத்தி காட்டி மிரட்டினான். அவர்கள் கொண்டுவந்திருந்த எல்லா நகைகளையும், பொருட்களையும் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டினான். அதைத் தூக்க முயன்ற அவன் தடுமாறி விழுந்தான். அந்த மூட்டை அத்தனை கனமாகிவிட்டிருந்தது. விழுந்தவன் கண்களில் மணமகன் காலில் அணிந்திருந்த மெட்டி தென்பட்டது. அதையும் கழற்றிக் கொடுக்குமாறு மிரட்டினான் நீலன். ஆனால், தன்னால் அதனைக் கழற்ற இயலவில்லை என்றும், முடிந்தால் அவனே கழற்றிக்கொள்ளலாம் என்றும் திருமால் தெரிவித்தார். கீழே குனிந்து திருமாலின் பாதத்தைத் தொட்டு எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு மெட்டியைக் கழற்ற முனைந்தான் நீலன். எவ்வளவோ முயற்சித்தும் இயலவில்லை. இறுதியாகத் தன் பற்களால் கடித்து இழுக்க முனைந்தான். அவன் உதடுகள் அந்தப் பாதத்தில் பட்ட அந்த விநாடியே பேரானந்த மின்னலால் தாக்கப்பட்டான் நீலன். அது உடலின் ஒவ்வொரு அணுவிலும், ரத்த நாளங்களிலும் ஊடுருவி அவன் மேனியையே சிலிர்த்துப் போட்டது.இப்படி ஒரு இன்ப உடலதிர்ச்சியை தான் இதுவரை அனுபவித்ததேயில்லையே என்று திடுக்கிட்டு நிமிர்ந்தான் நீலன். உடனே, ‘ஏதோ ஏமாற்று வேலை நடக்கிறது. என் இனிய காதலியான குமுதவல்லியின் ஆக்ஞையை நிறைவேற்ற முடியாதபடி ஏதோ, கண்ணுக்குத் தெரியாத சக்தி ஒன்று என்னைத் தடுக்க முயற்சிக்கிறது. கூடாது. நான் மதி இழந்து விடக்கூடாது! இது போன்ற தந்திரங்களுக்கெல்லாம் அடிபணிந்துவிடக்கூடாது. ஆயிரம் வைணவ அடியார்கள் அங்கே காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

நான் அவ்வாறு உணவளிப்பேனா என்று காத்திருக்கும் குமுதவல்லிக்கு, என் இந்த சேவை தடைபட்டால் மனவருத்தம் ஏற்படும்; அது அவளது அழகு முகத்திலும் படரும். அந்த அழகு, இந்தக் கவலையால் சுருங்கச் செய்யவிட மாட்டேன். அவளுடைய விருப்பமான வைணவ அடியார் சேவைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த முயற்சியையும் தவிடுபொடியாக்கிவிடுவேன்’ என்று தனக்குள்ளேயே சூளுரைத்துக்கொண்டான். சுய உணர்வு பெற்று, கைக்கும், வாய்க்கும் எட்டாத அந்த மெட்டியை மட்டும் விட்டு விட்டு, பிற நகை பொக்கிஷத்தையாவது எடுத்துச் செல்லலாம் என்று நினைத்தான். அந்த மூட்டையை குனிந்து எடுக்க முற்பட்டான். அந்த மூட்டையோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அவனை கேலி செய்வதுபோல அது அசையாமல் கிடந்தது. கடுங்கோபம் கொண்டான் நீலன். ‘‘நானே கள்வன், என்னிடமே மாயம் செய்கிறாயா? என்ன மந்திரம் சொல்லி இந்த மூட்டையை இவ்வளவு கனக்க வைத்திருக்கிறாய்?’’ என்று வெகுண்டான். நிமிர்ந்து திருமாலைப் பார்த்தான். அவரோ, புன்னகையுடன் அவனை நெருங்கினார். ‘‘எந்த மந்திரம் என்று சொன்னால் இந்த மூட்டை லேசாகிறதோ இல்லையோ, உன் மனசு லேசாகிவிடும். அதில் கனத்துக்கொண்டிருக்கும் மாசுகள் நீங்கிவிடும்,’’ என்று சொல்லி அவன் காதருகே தன் பவள வாயைக் கொண்டு சென்றார். ‘‘இதோ, இந்த மந்திரம்தான்,’’ என்று கூறிய அவர், அவன் காதில் திருமந்திரத்தை ஓதினார். காது வழியே புகுந்த அந்த மந்திரச் சொல் அவன் உள்ளத்தை அப்படியே உருக்கியது. திடுக்கிட்ட அவன், தன்முன் சங்கு சக்ரதாரியாக திருமால் நெடிது நின்றிருந்ததைக் கண்டான். அவ்வளவுதான், கரகரவென்று கண்கள் நீர் சொரிய, மளமளவென்று உதடுகள் பாசுரத்தை
உதிர்த்தன:

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துய ரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேனோடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!

‘ஓர் இளம்பெண்ணுடன் காணும் சுகமே உலகத்தின் பேரானந்தம் என்று நினைத்து இதுநாள்வரை ஏமாந்து போனேனே. பகவானே, உன் திருநாமம் உலக இன்பங்களுக்கெல்லாம் எவ்வளவோ மேன்மையானது என்பதை இப்போதுதானே உணர்கிறேன்!’ என்று ஆனந்தக் கூத்தாடினான் நீலன். இவ்வாறு பாசுரம் பாடிய அவன், அக்கணத்திலிருந்தே திருமங்கை ஆழ்வார் ஆனார். குமுதவல்லியால் ஈர்க்கப்பட்டு அவளாலேயே திருமாலின் கருணையை நேரடியாகப் பெற்றவர் என்பதால், அந்த மங்கை உருவாக்கியவராதலால், திருமங்கை ஆழ்வார்! இந்த அபூர்வ சம்பவங்களுக்குக் காரணமான வெள்ளக்குளம் இன்றும் மௌன சாட்சியாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பொய்கைக் கரையில் ஆஞ்சநேயர் சிறு சந்நதி கொண்டிருக்கிறார். துவஜஸ்தம்பத்தின் கீழ் கருடாழ்வார் காட்சியளிக்கிறார். கருவறையில் ஸ்ரீ தேவி-பூமிதேவி சமேதராக அண்ணன் பெருமாள் கம்பீரமாக நின்றிருக்கிறார்.
இவர் ஏன் அண்ணன் பெருமாள் எனப்படுகிறார்? இதற்கும் திருமங்கையாழ்வாரே காரணம். திருமங்கையாழ்வாராகப் புதுப் பொலிவு கொண்ட நீலன், ஒவ்வொரு திவ்ய தேசமாகச் சென்று அந்தந்தப் பெருமாள்களைத் தரிசித்து மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தார். அந்த வகையில் திருமலை சென்று மலையப்ப சுவாமியாகிய ஸ்ரீ நிவாசனைக் கண்ணுற்று,

கண்ணார் கடல் சூழி லங்கை இறைவன்றன்
திண்ணாகம் பிளக்கச் சரஞ்செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய
அண்ணா, அடியேன் இடரைக் களையாயே

என்று பாடி மகிழ்ந்தார். ‘கடல் சூழ்ந்த இலங்கையில் அதர்மத்தை அழித்து விண்ணோர் தொழுதேத்தும் வேங்கட மாமலையானே, அண்ணா, அடியேன் என் துயரைத் துடைப்பாயாக’ என்ற பொருளில் பாடி வணங்கினார்.அதே திருமங்கையாழ்வார் சுமார் 30 திவ்ய தேசங்களை தரிசித்து விட்டு வெள்ளக்குளம் வந்தபோது, அவருக்குப் பழைய நினைவுகள் மனதில் அலை மோதியிருக்கும் போலிருக்கிறது. இப்படிப் பாடுகிறார்:

கண்ணார் கடல்போய் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்
திண்ணார் மதிள்சூழ்
திருவெள்ளக்குளத்துள்
அண்ணா, அடியேன் இடரைக் களையாயே

‘அகன்ற கடல்போன்ற கரிய நிறம் கொண்ட பெருமாளே, போர்க்களத்தில் பகைவர்களை வெற்றிகொள்ளும் மறையோதிய பெருமக்கள் நிறைந்திருக்கும் திருநாங் கூரில், உயர்ந்த மதில்கள் சூழப்பெற்ற திருவெள்ளக்குளம் என்ற திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் அண்ணா, அடியேன் என் துயரைத் துடைப்பாயாக’ என்ற பொருளில் பாடி இன்புறுகிறார். இரண்டு பாடல்களிலும் ‘கண்ணார் கடல்..’ என்று ஆரம்பித்ததும், ‘அண்ணா, அடியேன் இடரைக் களையாயே..’ என்று முடித்ததும் நயம்பட கவனிக்கத்தக்கது. வேங்கடவனை ‘அண்ணா’ என்று அழைத்த ஆழ்வார், அதே வேங்கடவனே போன்ற இந்த ஸ்ரீ நிவாசனை அவருக்கும் அண்ணா என்றழைத்து அவருக்கு இவரை மூத்தவராக்குகிறார்.

இதனாலேயே இந்தத் திருவெள்ளக்குளம் திருமலைக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது. அண்ணன் குடிகொண்டிருக்கும் கோயில் என்பதால் இது அண்ணன் கோயில் என்றே பரவலாக, பிரபலமாக அழைக்கப்படுகிறது. திருமலையில் பெருமாள் ஸ்ரீ நிவாசனாகவும், தாயார் அலர்மேல்மங்கைத் தாயா ராகவும் விளங்குவதுபோலவே திருவெள்ளக்குளத்திலும் அதே பெயர்களில் இந்தப் பெருமாளும், தாயாரும் திகழ்கிறார்கள். திருமலையைப் போலவே இங்கும் பிரம்மோற்சவம், புரட்டாசி மாதமே நடை பெறுகிறது. திருமலையில் ஸ்ரீ நிவாசப் பெருமாள் தனித்து கொலுவிருக்க, தாயார் கீழே திருச்சானூரில் தரிசனம் தருகிறார். ஆனால் வெள்ளக்குளத்தில் இருவரும் அருகருகே தனித்தனி சந்நதிகளில் சேவை சாதிக்கிறார்கள்.

ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராகக் கோலோச்சும் பெருமாள், ‘நானிருக்க பயமேன்?’ என்றளிக்கும் அபயம், நம் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்ப்பதை அக்கணத்திலேயே உணர முடிகிறது. தாயார் கோயில் கொண்டிருக்கும் பிராகாரத்தில் 108 திவ்ய தேசப் பெருமாள்களும் தனித்தனி ஓவியமாக அழகுற காட்சியளிக்கிறார்கள். தாயாரின் புன்முறுவலில் தான் எத்தனை கருணை! அந்த பார்வையே நம் மனக் கவலைகளையெல்லாம் ஆற்றி விரட்டி, அரவணைத்து ஆறுதல் சொல்ல, அந்தத் தாய்மைக்கு நன்றி சொல்லும் விதத்தில் நம் கண்கள் நீர் பெருக்குவதைத் தவிர்க்க முடியாதுதான். நீலனை திருமங்கையாழ் வாராக மாற்றி வைணவம் தழைக்கச்செய்த குமுதவல்லித் தாயாருக்குத் தனி சந்நதி உள்ளது. மிகப் பெரிய சாதனை புரிந்தும், மலராத குமுத மொட்டுபோல அடக்கமாகப் புன்னகைக்கும் இந்த தாயாரை சேவித்ததும், உள்ளம் ‘நன்றி தாயே’ என்று இயல்பாகவே பொங்கிப் பரிமளிக்கிறது.

பிள்ளைப் பேறளிக்கும் புனித தலம் இது. இங்கு வேண்டிக்கொண்டால் தடைகள்உடனேவிலகி திருமணங்கள் எளிதாக நடந்தேறுகின்றன. ஆயுள் விருத்தியையும் அருளும் அற்புத தலம். வெள்ளக்குளமும், திருமலையும் ஒரே பெருமாளைக் கொண்டிருந்தாலும், திருமலை வேங்கடவனுக்கு மேற்கொண்ட பிரார்த்தனைகளை, வெள்ளக்குளத்தில் நிறைவேற்றலாம் என்றும், ஆனால், இங்கே நேர்ந்துகொண்டவற்றை இங்குதான் நிறைவேற்ற வேண்டும்; திருமலையில் அல்ல என்றும் கூறுகிறார்கள். எப்படிப் போவது: சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது அண்ணன்கோவில். பேருந்து, ஆட்டோ வசதி உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 11.30 மணிவரையிலும், மாலை 4 முதல் 8 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு அண்ணன்பெருமாள் திருக்கோயில், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609125.

தியான ஸ்லோகம்

திருவெள்ளக்குளம் என்ற அண்ணன் கோயிலுக்குச் சென்று ஸ்ரீ நிவாசப் பெருமாளை தரிசிக்கும்வரை அவரது கீழ்காணும் தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீ மச் ச்வேதஸர: புரேது பகவாந் நாராயணோ நாமித:
பத்மஸ்தா தயிதா சதர்வரசிதம் தத்வ்யோமயா நோத்தமம்
தீர்த்தம் ச்வேத ஸரஸ் ஸுராதிப திசம் ஸம்வீக்ஷ மாணோநிசம்
ச்வேதாக்யே நகராதிபேநச புரா ஸாக்ஷாத் க்ருதோ ராஜதே

 

The post திருவெள்ளக்குளம் ஸ்ரீ நிவாசப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Thiruvellakulam Sri ,Perumal ,Tiruvellakulam ,Thiruvellakulam ,Sri ,
× RELATED பிரம்மனுக்கு வேதங்கள் உபதேசித்த பெருமான்