×

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம் மருத்துவமனைக்கு வெளியே நிறுத்திய பைக் திருடிய ஆசாமி

*சிசிடிவி கேமரா மூலம் போலீஸ் வலை

ஆம்பூர் : ஆம்பூர் அருகே சோலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தாயை காண வந்தவரின் விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் சதீஷ். இவரது தாய் உடல்நல பாதிப்பு காரணமாக ஆம்பூர் அடுத்த சோலூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதீஷின் தாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அங்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனது தாயை காண சதீஷ் விலை உயர்ந்த பைக்கில் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பைக்கை மருத்துவமனைக்குள் அனுமதிக்க இயலாது எனவும், மருத்துவமனையின் வெளியே நிறுத்தும் படி அங்கிருந்த காவலாளி தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி சதீஷ் தனது பைக்கை மருத்துவமனையின் வெளியிலேயே பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார், பின்னர் சதீஷ் வெளியே வந்து பார்த்த போது, தனது பைக் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பட்டப்பகலில் மர்மநபர் ஒருவர் சதீஷின் பைக்கை திருடி செல்வது தெரியவந்தது.
உடனடியாக சதீஷ் இதுகுறித்து ஆம்பூர் தாலூகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு பைக்கை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பைக், செல்போன் பறிப்பு உள்ளிட்ட தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இதுகுறித்து மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆம்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம் மருத்துவமனைக்கு வெளியே நிறுத்திய பைக் திருடிய ஆசாமி appeared first on Dinakaran.

Tags : Asami ,Venture Hospital ,Bhatapakal ,Ampur ,SOLUR ,Bhatapagal ,
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது