×

அரிமளம் பகுதியில் அதிக மழை பெய்தும் தைல மரங்களால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருமயம் : அரிமளம் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்யதும் தைல மரங்களை பாதுகாக்க வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் நீர்நிலைகள் வறண்டு போனதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை எதிர்பார்த்த அளவு செய்வதில்லை.

இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் பருவ காலத்தில் கூட போதுமான நீர் இருப்பதில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சுற்றுவட்டார பகுதிகள் பெருமளவு வனப்பகுதிகளை கொண்டுள்ள போதிலும் பருவம், கோடை காலங்களில் மழை பெய்தாலும் நீர் நிலைகளில் நீர் நிரம்புவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் அரிமளம் பகுதி மட்டும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதற்கு காரணம் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தைலமரமும் அதனைப் பாதுகாக்க வனத்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை தான் என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி வேதனையை வெளிப்படுத்தி வருகின்றன.

இதுபற்றி அப்பகுதியினர் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக போதிய பருவ மழை பெய்யாததால் வயல்வெளிகள் வறண்டதோடு நிலத்தடி நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனதால் அப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

அதுமட்டுமின்றி குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையும் அங்கு ஏற்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து அரிமளம் பசுமை மீட்பு குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அப்பகுதியில் உள்ள ஏரி,கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது சொந்த நிதியில் தூர்வாரி கரையைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். ஆனாலும் கூட நீர்நிலைகளுக்கு கடந்த காலங்களைப் போல் முறையாக தண்ணீர் வந்தபாடில்லை. காரணம், அரிமளத்தை சுற்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வனத்துறையால் பயிரிடப்பட்டுள்ள தைல மரங்களை காப்பதற்காக நீர்நிலைகளுக்கு வரும் வரத்து வாரிகள், நீர்வழிப்பாதைகளை வரப்புகள், பள்ளங்களை தோண்டி வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளனர்.

மேலும் தைல மர காடுகளை வளர்ப்பதற்காக மரங்களின் வரிசைகளுக்கு இடையே சுமார் 3 அடியில் வாய்க்காலும் வனத்தை சுற்றி உயரமான வரப்புகளும் அமைக்கப்பட்டிருப்பதால் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்தும் கூட அரிமளம் பகுதியிலுள்ள நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லாததால் 20க்கும் மேற்பட்ட ஏரி, குளம், கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டே காணப்படுகிறது. மேலும் அரிமளம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

நீர் நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என அரிமளம் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் கூட விளை நிலத்திற்கும் விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தைல மரங்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் வனத்துறையினர் ஏற்படுத்திய தடுப்புகளால் செய்வதறியாது தவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு அதிகாரிகளிடம் அரிமளம் பகுதி மக்கள் புகார் கொடுத்து வரும் நிலையிலும் வனத்துறையினர் வனப்பகுதியில் அமைக்கப்பட்ட வரப்புகளை அப்புறப்படுத்தாததால் அரிமளம் பகுதி மக்கள் வேதனையில் தவிக்கின்றனர். எனவே வரும் காலங்களில் போதிய அளவிற்கு அதிகமாக மழை பெய்தும் குளங்கள் அனைத்தும் நிரம்பாத நிலையில் கோடை காலத்தில் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள மழை நீர் தேக்கிகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரிமளம் பகுதியில் அதிக மழை பெய்தும் தைல மரங்களால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Arimalam ,Puthukkottai district ,
× RELATED அரிமளம் பேரூராட்சி பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி