×

வில்லுக்குறி, சுங்கான்கடை பகுதிகளில் குரங்குகள் சேட்டை: தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள்: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

நாகர்கோவில்: வில்லுக்குறி, சுங்கான்கடை பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்ககளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்ட மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், வீரப்புலி, குமாரகோவில், சுங்கான்கடை உள்ளிட்ட பகுதிகள் குரங்குகளின் வாழ்விடமாக உள்ளன. சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் உணவு பிரச்சினை காரணமாக மலை பகுதிகளில் இருந்து குரங்குகள்  மக்களின் வசிப்பிடத்துக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு ஊருக்குள் வரும் குரங்குகள் வாழைகள் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. குரங்குகளின் தொல்லைகளை தவிர்க்க விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக சுங்கான்கடை மலை பகுதிகளில் இருந்து ஊருக்குள் வரும் குரங்குகள்  சுங்கான்கடை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகிறது. சுங்கான்கடை, தோட்டியோடு, வில்லுக்குறி, திருவிடைக்கோடு, இரணியல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளில் உள்ள பொருட்களை நாசமாக்கி வருகின்றன. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை பதம் பார்க்கும் குரங்குகள், குழந்தைகளுக்கான பால் பாட்டில்களை கூட விட்டு வைக்காமல் கடித்து குதறி சென்று விடுகின்றன. வீடுகளுக்கு வெளியே காய வைக்கும் உணவு தானியங்களையும் சேதப்படுத்துகின்றன. மேலும் வீடுகளில் நிற்க கூடிய வாழைகளை சேதப்படுத்தும் குரங்குகள், தென்னை மரங்களில் தேங்காய்களையும் விட்டு வைப்பதில்லை. வளர் பருவத்தில் உள்ள தென்னை குருத்துக்களை சேதப்படுத்தி செல்கின்றன. இது தவிர சாலையோரம் நடந்து செல்லும் குழந்தைகள், பெரியவர்களை அச்சுறுத்துவதால் பலர் நாள்தோறும் குரங்குகளுக்கு பயந்து ஓடி காயம் அடைகிறார்கள். சுங்கான்கடை பகுதிகளில் உள்ள மண்பாண்டங்களையும் உடைத்து விடுகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கும் பெரும் பொருள் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த குரங்குகள் இடும் சத்தத்தால், பச்சிளம் குழந்தைகள்  பதற்றத்தில் அழும் நிலை உள்ளது. மொத்தத்தில் குரங்குகளால் கிராம மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து அவற்றை வன பகுதிகளில் கொண்டு விட, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வில்லுக்குறி, சுங்கான்கடை பகுதிகளில் குரங்குகள் சேட்டை: தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள்: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Villukuri ,Sungankadai ,Willukuri ,Sungankadi ,
× RELATED தக்கலை அருகே பைக் விபத்தில் மெக்கானிக் பலி