×

100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் அமராவதி பழைய மேம்பாலம்

*சேவையை நிறுத்தி கொண்டதால் காட்சிப் பொருளாக மாறியது

கரூர் : கரூர் அமராவதி நூறு ஆண்டுகளைக் கடந்தும் தற்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.தமிழகத்தில் உள்ள முதன்மையான பகுதிகளில் கரூர் மாவட்டம் தொன்று தொட்டு சிறப்புடன் திகழ்ந்துள்ளது. அதற்கு சான்றாக கரூர் ஈஸ்வரன் கோயில் கரூர் சித்தர் என்று அழைக்கப்படும் கரூரார் வாழ்ந்த இடம் கரூர் ஆகும். இதன் அடிப்படையில் கரூர் தனி சிறப்பு பெற்றுள்ளது. மேலும் கரூர் மாவட்ட மக்களுக்கு காவேரி, அமராவதி முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி உள்ளது.

அமராவதி ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் ஆற்றை கடந்து மறுபக்கம் செல்ல மிகவும் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் மக்கள் கிராமப்புறங்களில் இருந்து கரூர் நகர் பகுதிக்குச் செல்ல உதவும் வகையில், 1919ம் ஆண்டு பாலம ஒன்று கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.சுமார் ஐந்து ஆண்டுகள் கட்டுமான பணிகளுக்கு பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 1924ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி, அப்போதைய சென்னை கவர்னர் விஸ்கவுண்ட் கோஸ்சென் ஹாக்கார்ஸ்ட் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த பாலம் கட்டுவதற்கு பெரும் நிதி உதவியை, அப்போது ஆண்டிப்பட்டி கோட்டை ஜமீன்தாராக இருந்த பெத்தாச்சி செட்டியார் வழங்கி உள்ளார்.

மேலும், இந்த பாலத்திற்கு திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் தேசிகாச்சாரி என்பவரது பெயர் சூட்டப்பட்டது. பின்னர், அந்த பாலம் அமைந்திருந்த பகுதி `லைட் ஹவுஸ் கார்னர் பாலம்’ என்று அழைக்கப்பட்டது.அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு ஒரு வழி பாதியாகவும், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு பழைய அமராவதி ஆற்றுப்பாலத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இருவழி போக்குவரத்திற்காக புதிய பாலம் கட்டப்பட்டவுடன் அமராவதி ஆற்றுப் பாலம் கரூரின் அடையாளச் சின்னமாக மட்டுமே இருந்தது. 1910 ஆண்டு வரை கரூர், கோவையின் ஒரு பகுதியாகவும், பின்னர் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது. அமராவதி ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது தான்தோன்றிமலை, ராயனூர், சுக்காலியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மக்கள் கரூர் வரவேண்டும் என்றால் ஆற்றைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.

அதன் பின்னர் கரூர் மாநகரத்தின் பல்வேறு வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2001ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ரூ.6 கோடி மதிப்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, இந்த பாலத்தின் அருகே புதிய அமராவதி ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது. இருப்பினும் 2005 ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் புதிய பாலத்தின் அணுகு சாலைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது கூட பழைய அமராவதி பாலத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

புதிய பாலம் கட்டிய பிறகு சில ஆண்டுகளுக்குக்கும் தனது சேவையை தொடர்ந்தது. புதிய அமராவதி பாலம் கட்டிய பொழுது சில காலம் சுங்க வசூலிக்கப்பட்டது. ஆனால் 2005 ஆண்டு மழை வெள்ளத்தில் பாலத்தில் அணு சாலை பாதிப்படைந்த பின் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுங்கத்தை ரத்து செய்தார்.பின்னர் இருவழி போக்குவரத்திற்காக புதிய பாலம் கட்டப்பட்டவுடன் அமராவதி ஆற்றுப் பாலம் கரூரின் அடையாளச் சின்னமாக மட்டுமே இருந்தது. இதனிடையே, கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், கரூர் லைட்ஹவுஸ் அமராவதி பழைய ஆற்றுப்பாலம் மூடப்பட்டு, நடைபாதை பூங்கா போன்று வடிவமைக்கப்பட்டது.

இதற்காக, கரூர் நகராட்சி கரூர் வைஸ்யா வங்கியின் அப்போது நிதி உதவியுடன் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு, 2020ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
பயன்படுத்தப்படுதுடன் ஏராளமான மக்கள் வாக்கிங் நடந்து செல்பி படம் எடுத்துக் கொள்கின்றனர். கரூர் மாநகரின் நுழைவு வாயிலாக உள்ள லைட்ஹவுஸ் அமராவதி ஆற்றுப் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இந்த பாலத்துடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாரம்பரிய அடையாளமாக பாதுகாக்கப்படுகிறது.

The post 100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் அமராவதி பழைய மேம்பாலம் appeared first on Dinakaran.

Tags : Amaravati ,Karur ,Karur Iswaran ,Dinakaran ,
× RELATED பாதியில் கைவிடப்பட்ட அமராவதி பணிகள்...