×

மாநிலத்திற்கு ஏற்பட்ட நஷ்டங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் கொண்டு வந்த நில உரிமை சட்டம் ரத்து

* புதிய தொழில்நுட்பத்துடன் இளைஞர்களுக்கு பயிற்சி

* முதல் அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

திருமலை : ஆந்திராவில் நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், ஜெகன்மோகன் ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும், நில உரிமை சட்டம் ரத்து மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.ஆந்திர மாநிலம் அமராவதியில் வெலகம்புடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன்கல்யாண் தலைமையில் நேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். குறிப்பாக தேர்தல் வாக்குறுதியின்படி முதலமைச்சரின் முதல் 5 கையெழுத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறியதாவது:

நில உரிமையாளர்களுக்கு தங்கள் நிலத்தில் உரிமை இல்லாத வகையில் ஏற்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்ட நில உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நில உரிமையாளர்களுக்கு நிலப் பாதுகாப்பு வழங்கப்படுவதோடு நிலப் பிரச்சனை இருந்தால் சிவில் மற்றும் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல முடியாமல் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு தொடரும் நிலைக்கு ஜெகன்மோகன் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நில உரிமையாளர்களுக்கு ஜெகன்மோகன் படத்துடன் கூடிய பட்டா இல்லாமல் அவர்களின் ஒரிஜினல் பத்திரம் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ₹6000, முழு உடல் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹10,000, நீண்ட கால தீராத நோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம், கிட்னி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹10 ஆயிரமாக மாதந்தோறும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் அரசு பென்ஷன் திட்டத்திற்காக ஆண்டுக்கு ₹23,272.44 கோடி செலவு செய்த நிலையில் சந்திரபாபு அரசு ₹33,099.72 கோடி இந்த திட்டத்திற்காக செலவு செய்கிறது.

திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத் துறைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்துடன் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. என்டிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை ஜெகன்மோகன் அரசு ஒய்எஸ்ஆர் ஹெல்த் யுனிவர்சிட்டி என பெயர் மாற்றம் செய்தனர். இதனால் அங்கு படிக்கும் மருத்துவர்கள் சான்றிதழ்கள் பெறுவதில் ஒரு இடத்தில் என்டிஆர் பல்கலைக்கழகம் என்றும் ஒரு இடத்தில் ஓய்.எஸ்.ஆர். பல்கலைகழகம் என குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக புகார் அளித்தனர். இதனை அடுத்து மீண்டும் என்டிஆர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

ஆந்திர மாநில அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்த சுதாகர், உதவி அட்வகேட் ஜெனரலாக இருந்த தர் ராஜினாமா செய்த நிலையில் அட்வகேட் ஜெனரலாக சீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கஞ்சா விற்பனைக்கு முனையமாக மாறி உள்ளது. கல்லூரி, பள்ளிகளில் கூட சுலபமாக கஞ்சா கிடைக்கும் விதமாக கொண்டு வந்தனர். இதனை கட்டுப்படுத்த மற்றும் முழுவதுமாக அழிக்க உள்துறை, பழங்குடியினர், கல்வித்துறை, சுகாதாரத் துறை, கலால் துறை என 5 அமைச்சர்களைக் கொண்ட சிறப்பு கமிட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கஞ்சா வளர்ப்பு, விற்பனை முழுவதும் கட்டுப்படுத்தி அழிக்கும் விதமாக உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் தொற்றுநோய் பரவாமல் இருக்க, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கும், கால்வாய்கள் தூர்வாருவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.7 துறைகளில் கடந்த அரசால் மாநிலத்திற்கு ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்து மற்றும் நிதிநிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போலவரம், அமராவதி, மின்சாரம், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் மணல் கனிம வளங்கள், கலால் மது, சட்டம் ஒழுங்கு, நிதித்துறை என 7 துறைகள் மூலம் மாநிலத்தில் எந்த அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மீண்டும் ₹5க்கு உணவு வழங்கும் அண்ணா கேன்டின் திட்டம்: சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஏழைகளுக்கு ₹5க்கு பசியாற்றும் உணவு வழங்கும் அண்ணா கேன்டின் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது ஜெகன்மோகன் அரசால் மூடப்பட்டது. மீண்டும் ஏழைகளுக்கு ₹5க்கு உணவு அளிக்கும் அண்ணா கேன்டின் மீண்டும் தொடங்கப்படும். மொத்தம் 203 அண்ணா கேன்டின்கள் இருந்த நிலையில் 183 கேன்டின்கள் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் விரைவில் திறக்கப்பட உள்ளது. மீதமுள்ள 20 கேன்டின்களும் விரைவில் திறக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார்.

கல்வித்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு தரமான கல்வியை வழங்க ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் பள்ளிகளுக்கு பெயிண்ட் அடித்தும் சுற்றுச்சுவர் கட்டி மாற்றம் செய்ததாக ஜெகன்மோகன் அரசு கூறி வந்தது. ஆனால் கல்வித்துறையில் காலியாக இருந்த 16,347 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தேர்தலுக்கு முன்பு முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தனர். அதன்படி முதல்வராக பதவியேற்ற பின் சந்திரபாபு நாயுடு முதல் கையெழுத்திட்டார். இந்நிலையில் கல்வித்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர், விடுதி காப்பாளர் என காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தேசிய கல்விக்கொள்கையை பரிசீலித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜூலை 1 முதல் முதியோருக்கு ₹4000 பென்ஷன் வழங்கப்படும்

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் ₹4000 உயர்த்தப்படுகிறது. ஜெகன்மோகன் அரசால் ஆயிரம் ரூபாய் பென்ஷன் உயர்த்துவதற்கு நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிலையில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற பதினைந்து நாட்களில் ஆயிரம் ரூபாய் உயர்த்தி நான்காயிரம் ரூபாயாக வழங்கப்பட உள்ளது. ஜூலை 1ம் தேதி அந்தந்த பகுதியில் உள்ள செயலக ஊழியர்கள் மூலம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும் பென்ஷன் தொகை உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்ட ஏப்ரல், மே , ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான ₹1000 சேர்த்து ₹7000 மாக பென்ஷன் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாநிலத்திற்கு ஏற்பட்ட நஷ்டங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் கொண்டு வந்த நில உரிமை சட்டம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Andhra ,Dinakaran ,
× RELATED ஆந்திர தேர்தலில் தோல்வி; ஜெகன்மோகனை பார்த்து கதறி அழுத தொண்டர்கள்