×

காய்கள் பறிக்கும் நேரத்தில் இளந்தளிர் விடுகிறது ரசாயன உரங்களால் மகசூல் காலம் மாறிய மா மரங்கள்

* விவசாயிகள் வேதனை

* வேளாண் அதிகாரிகள் அறிவுரை

நத்தம் : நத்தம் பகுதியில் தொடர் ரசாயன உரம் பயன்பாடு மற்றும் வேர் டானிக் ஊற்றுதல் போன்ற செயல்பாடுகளால், மா மரங்களின் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மாங்காய்கள் பறிக்கும் நேரத்தில், மரங்கள் இளந்தளிர்களுடன் காட்சியளிப்பது, விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.நத்தம் பகுதியில் காசம்பட்டி, பரளி, வத்திபட்டி, புன்னப்பட்டி, துவராபதி, குட்டூர், குட்டுப்பட்டி, மணக்காட்டூர், செந்துறை, சிறுகுடி, சமுத்திராப்பட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மணற்பாங்கான மற்றும் மானாவாரி உள்ளிட்ட பல்வேறு நிலப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமாக விவசாயிகள் மா மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர். இது ஆண்டுக்கு ஒருமுறை மகசூல் கிடைக்கும் விவசாயமாகும்.

இதற்கிடையே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் பூச்சிகளின் பாதிப்பிலிருந்து மாம்பூக்களை பாதுகாக்க மருந்து தெளிக்கும் முறையை துவக்கினர். இன்று அவை பல்வேறு கட்டங்களாக பூக்கள் பூப்பதற்கு முன் பூச்சிகளை அழித்து பூக்கள் பூக்கவும், பூத்த பூக்கள் மரத்தில் இருந்து பிஞ்சு வைத்திடவும், பிஞ்சுகள் மரத்தில் உறுதியுடன் இருந்து பெருக்கும் வகையில் என 4 முறை மருந்து தெளித்து அதிக மகசூலை மா மரங்களிலிருந்து பெற வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இதற்கிடையே தற்போதைய பருவம் தவறிய மழை உள்ளிட்ட இயற்கை மாற்றங்களால் மா மரங்களில் மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு பெரும்பாலான மரங்கள் மகசூல் கிடைக்க வேண்டிய கோடை மற்றும் அதனை தொடரும் நேரத்தில் இளந்தளிர் விட்டு பசுமையுடன் காணப்படுகிறது. எனவே விவசாயிகள் சீசனில் கிடைக்காத மகசூலை பெற முடியாமல் கவலை அடைந்துள்ளனர். அடுத்தகட்டமாக அதிக மகசூல் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் கல்தார் என்ற டானிக்கை மா மரங்களின் தூர்களில் ஊற்றி தண்ணீர் பாய்ச்சுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த இயற்கை சார்ந்த விவசாயிகள் கூறுவதாவது: மா மரங்களில் இயற்கைக்கு உகந்த வகையில் மகசூல் பெறுவதற்கு பதிலாக பலரும் தங்கள் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் மகசூல் பெற நினைத்து பல்வேறு ரசாயன மருந்துகளை பலமுறை மரங்களில் தெளித்தனர். மேலும் மரத்தின் தூர்களில் டானிக்குகளை ஊற்றி விவசாய நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டனர். இதற்கிடையே பெய்ய வேண்டிய நேரத்தில் மழை இல்லாமல் போனது. இதுபோன்ற காரணங்களால் மரங்களில் இருந்து மகசூல் கிடைக்கும் காலம் நிர்ணயம் செய்ய முடியாமலும், மகசூல் குறைந்தும் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மா மரங்களில் மகசூல் பாதிப்பு என்பது, அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது. எனவே மரங்களில் காலத்திற்கு தகுந்த முறையிலும், இயற்கையையொட்டிய வகையிலும் விவசாயம் மேற்கொண்டால் மட்டுமே, சீரான மகசூலை பெற முடியும். இவ்வாறு கூறினர்.

* இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால், விவசாய பயிர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். இதனால் மா மரங்களில் காய்கள் பறிக்க வேண்டிய நேரத்தில் தளிர் இலைகள் உருவாகி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரசாயன உர பயன்பாட்டினை தொடர்ந்தால், மரங்களின் நிலை மேலும் மோசமாகும். இதற்கு மாற்றாக மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். திரவ உயிர் உரங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன.

பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துக்களாக தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை மாற்றி அளிக்கும் திறனுடைய நுண்ணுயிரிகளே உயிர் உரங்களாகும். திரவ உயிர் உரங்கள் அதிக கூட்டமைப்பு உள்ள செல்களை உருவாக்கும் தன்மை கொண்டதாகவும், பயிர்களுக்கு எளிதில் இடும் வகையிலும், பிற நுண்ணுயிர் தொற்றுகள் இல்லாமலும், இந்திய உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி குறைந்தது 1 வருட காலத்திற்கு வாழ்நாள் திறன் குறையாமலும், விதையிலும், மண்ணிலும் நீடித்து உயிர் வாழ்வதாகவும், உற்பத்தி செலவு குறைவானதாகவும், பயிர்களுக்கு குறைந்த அளவே தேவை போன்ற சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது.

உயிர் உரங்கள் இடுவதன் மூலம் நிலங்களுக்கு ரசாயன உரங்கள் இடுவதை 25% வரை குறைத்து கொள்ளலாம். இதனால் இடுபொருள் செலவினம் குறைவதுடன், மண்ணின் வளமும் கூடுகிறது. இதனால் மண்வளம் காக்கப்பட்டு, மகசூல் உற்பத்தியை பெருக்குவதற்கு உறுதுணையாக உள்ளது. மேலும், ரசாயன உரங்களின் உபயோகத்தை குறைக்க உதவுகிறது. இவ்வாறு கூறினர்.

பயன்படுத்தும் வழிமுறைகள்…

விவசாயிகள் திரவ உயிர் உரங்களை ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து உபயோகிக்கக் கூடாது. உயிர் உரங்கள் இருக்கும் கலனை திறந்தவுடன் முழுமையாக பயன்படுத்திவிட வேண்டும்.குறைந்த வெப்பத்தில், நேரடியாக சூரிய ஒளி படாத இடத்தில் இருப்பு வைத்திருக்கவேண்டும். காலாவதி தேதிக்கு முன்னர் பயன்படுத்த வேண்டும். ரசாயன உர பயன்பாட்டிற்கும், உயிர் உர பயன்பாட்டிற்கும் 1 வாரகால இடைவெளி விட வேண்டும். 20 டிகிரி வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது என, உயிர் உர உற்பத்தி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post காய்கள் பறிக்கும் நேரத்தில் இளந்தளிர் விடுகிறது ரசாயன உரங்களால் மகசூல் காலம் மாறிய மா மரங்கள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?