×
Saravana Stores

காடுகளில் உணவு கிடைக்காமல் எஸ்டேட் பகுதிகளில் உலா கால்நடைகள் மீது செந்நாய், புலி தாக்குதல் அதிகரிப்பு

*பாதுகாப்பு வளையத்திற்குள் மூணாறு கொண்டு வரப்படுமா?

*வன விலங்குகளின் வாழ்விடம் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்

மூணாறு : மூணாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகள் மீது செந்நாய் மற்றும் புலி தாக்குதல் தொடருவதால், தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன.

மூணாறு முற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும். இங்கு முக்கிய தொழில் தேயிலை விவசாயம். இதனால் மூணாறு எந்த காலநிலையில் பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும் இடம் ஆகும்.இந்த தேயிலை விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.தொழிலாளர்களின் குடியிருப்புகள் நிலை கொள்வது வனத்தோடு சேர்ந்த பகுதிகளில் ஆகும்.

மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் செந்நாய்கள், புலிகள், காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் வன விலங்குகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

கேரள மாநிலம், மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் நேசம்மாள். இவர் இந்த எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கறவை பசுக்களை வளர்த்து வருகிறார். கடந்த மே 20ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற இவரது 2 பசுக்களை காணவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பசுக்களை தேடி சென்றபோது எஸ்டேட்டை ஒட்டிய காட்டுப்பகுதியில் புலி தாக்கியதில் கறவை பசுக்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளன.

இதனால் அப்பகுதியினர் பீதியில் இருந்த நிலையில் பசுக்களை கொன்ற இடத்திற்கு அன்று மாலை 5.30 மணியளவில் 3 புலிகள் மீண்டும் வந்துள்ளது. அதனை பார்த்த அப்பகுதி தொழிலாளர்கள் அதிச்சியடைந்தனர். புலிகளை நடமாட்டத்தை கண்டவர்களை அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலானது. மேலும் இப்பகுதியில் சுற்றித்திரியும் மூன்று புலிகளை வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களின் குற்றச்சாட்டிற்கு வனத்துறை சிறிதளவு கூட செவி சாய்க்கவில்லை.

இந்த சம்பவம் சில நாட்களிலேயே மூணாறு அருகே வட்டவடை ஊராட்சி சிலந்தியாறு பகுதியில் கனகராஜ் என்பவர் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்தார். கடந்த மே 28ம் தேதி வழக்கம்போல் ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்ட அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது அவரது 40 ஆடுகள் செந்நாய்கள் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் 10 ஆடுகள் காணாமல் போயின.

இந்த சம்பவம் நடப்பதற்கு 2 தினங்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள பழத்தோட்டம் அருகே 4 பசுக்களை செந்நாய்கள் கூட்டம் தாக்கியுள்ளது. பொதுமக்கள் அவற்றிடம் இருந்து பசுக்களை மீட்டுள்ளனர். இதற்கிடையே சில ஆடுகளும் செந்நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. மூணாறு மற்றும் சுற்றுப்பகுதிகளில் யானைக் கூட்டம் மற்றும் புலியின் தாக்குதலை தொடர்ந்து, தற்போது செந்நாய்களின் தொந்தரவும் அதிகரித்திருப்பது விவசாயிகளையிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

செந்நாய்கள் மற்றும் புலியின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. வனத்துறையிடம் இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் வனப்பகுதியை சுற்றி மின்சார வேலி அமைக்கப்படவில்லை என்று பழங்குடி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனவிலங்கு தாக்குதலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் இப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை ஒன்று சேர்த்து சாலை மறியல் போராட்டம் உள்ளிட்டவை நடத்த போவதாக அப்பகுதி பழங்குடியின மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். எனவே புலியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தாக்குதலுக்கு இதுவும் கூட காரணம்

வன விலங்குகளுக்கு அத்தியாவசிய உணவைத் தருவதில் புல்வெளிகளும், சோலை காடுகளும் முக்கிய பங்காற்றி வந்தன. ஆனால் தற்போது 95 சதவீத புல்வெளி மற்றும் சோலை காடுகள் தேயிலை தோட்டம், காய்கறி விவசாயம், தனியார் விடுதிகள், வீடுகள் கட்ட என பல்வேறு தேவைகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. இதனால் வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, மனித வனவிலங்கு மோதலுக்கு காரணமாக உள்ளது.

இது தவிர வெளிநாட்டு மரங்களான கற்பூரம் மற்றும் சீகை ஆகியவை பெருமளவில் வளர்க்கப்பட்டதால் நிலம் அமிலத்தன்மையாக மாறியதன் காரணமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் இந்த மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் புல் முளைப்பது தடைப்பட்டுள்ளதால் புல்தரைகள் இல்லாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் வன விலங்குகளுக்கு உணவாக இருந்த களைகள், களைக்கொல்லி மருந்துகள் அடித்து கட்டுப்படுத்தப்பட்டுவதால் வனவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி பல்லுயிர் சூழல் விலங்கான புலி மற்ற விலங்குகளான காட்டெருமை, காட்டுபன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வந்தபோது, இயற்கை வனஉயிரினங்கள் சமநிலைப்படுத்தப்பட்டு வந்தது.

மோதலை தடுக்க முடியும்

கடந்த 1947ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 40 ஆயிரம் புலிகள் இருந்த நிலையில் தற்போது சுமார் 1,230 புலிகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் மற்ற வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சராசரியாக புலி ஒன்றுக்கு 50 சதுர கிலோமீட்டர் பரப்பு வாழிடமாக தேவைப்படுகிறது. இதே போல ஒவ்வொரு வன விலங்குகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வாழிடம் தேவைப்படுகிறது.

வாழிடம் குறைவதால் வனவிலங்குகள் குடியிருப்புக்குள் அடிக்கடி வந்து விடுகின்றது. இதுமட்டுமின்றி வன விலங்குகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து அவற்றிற்கு பிடித்தமான கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயம் செய்வதால் யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் இது போன்ற விவசாய தோட்டங்களில் புகுந்து உண்பதால் விவசாயம் அழிக்கப்படுகிறது. எனவே புல்வெளிகள் மற்றும் சோலை காடுகளை வளர்ப்பதன் மூலமும் கற்பூரம் மற்றும் சீகை மரங்களை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுப்பதன் மூலமும் வன விலங்குகளின் வாழிதடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுப்பதன் மூலமும் மனித விலங்குகள் மோதலை முற்றிலுமாக தடுக்க முடியும்.

கால்நடை தொழில் பாதிப்பு

புலியின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதால் மூணாறு தேயிலை தோட்டப்பகுதியில் தங்களின் கால்நடைகளை காப்பாற்ற முடியாமல் போகும் நிலையில் உள்ளதாக கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புலியை பிடித்து வேறு இடத்தில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புலி தாக்குதலால் கடந்த சில ஆண்டுகளாக பால் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக கால்நடை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

பசுக்களை புலி தாக்கி கொல்வதால் பால் சேமிப்பிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 4500 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. 1100 லிட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணமாக இருப்பது புலி அச்சறுத்தலால் பலர் மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

60க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

கேரள மாநிலம், மூணாறு அருகே வட்டவடை கடவரி பகுதியை சேர்ந்தவர் போஸ். இவருக்கு சொந்தமான இரண்டு பசு மாடுகள் 2 தினங்களுக்கு முன் காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்றன. இரவு வெகுநேரமாகியும் பசு மாடுகள் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து போஸ் பசு மாட்டை தேடிச் சென்றார். அப்போது விவசாய நிலத்தில் புலி பாதி தின்ற நிலையில் பசுக்களின் உடல் காணப்பட்டது. சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வட்டவடை மற்றும் சுற்றுப்புற பகுதியில் செந்நாய்கள் அடிக்கடி கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. தற்போது புலி தாக்குதலில் இரண்டு பசு மாடுகள் கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. புலியின் தாக்குதலில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ப்ளீஸ் இதெல்லாம் பண்ணாதீங்க…

மூணாறு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரோட்டில் பல இடங்களில், யானைகள் கடப்பதோடு, மாட்டுப்பட்டி, குண்டளை போன்ற சுற்றுலா மையங்களில் குட்டிகளுடனும் உலா வருவதால், சுற்றுலாப்பயணிகள் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்த ரோட்டில், வாகனங்களை நிறுத்தி காட்டுயானை அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும், ஹாரன் அடிப்பது போன்ற, வன விலங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நான் தான் இருக்கேன்ல….

புலிகள் தாக்குதல் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் சக்கை கொம்பன், படையப்பா போன்ற காட்டுயானைகள் உலாவுவதாலும் பொதுமக்கள் கலங்கி போய் உள்ளனர். மூணாறில் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கானல் எஸ்டேட் அருகே மே 23ம் தேதி மாலை 4 மணி அளவில் சக்கைகொம்பன் என்று அழைக்கப்படும் காட்டுயானை சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது திடீரென தனது பாதையை மாற்றி சாலையின் நடுவே நடந்து வந்தது. தொடர்ந்து அந்த வழியாக வந்த சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை கண்ட யானை சத்தமிட்டபடியே ஆக்ரோஷமாக ஓடி வந்ததால், சுற்றுலாப்பயணிகள் வாகனங்களை வந்த வழியே திருப்பிக் கொண்டு சென்றனர். அப்பகுதியில் இருந்த எஸ்டேட் தொழிலாளர்களும் ஓட்டம் பிடித்தனர்.

The post காடுகளில் உணவு கிடைக்காமல் எஸ்டேட் பகுதிகளில் உலா கால்நடைகள் மீது செந்நாய், புலி தாக்குதல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Munnar ,Tamil-Kerala ,Dinakaran ,
× RELATED மூணாறு மலைச்சாலையில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள்