×

முதுமலையில் பசுமை திரும்பியதால் சாலையோரம் உலா வரும் வனவிலங்குகள்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : முதுமலையில் பசுமை திரும்பியுள்ளதால் சாலையோரங்களில் வன விலங்குகள் வலம் வருவதால், சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு மற்றும் பல்வேறு வகையான மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இப்பகுதிகளில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டதால் செடி, கொடிகள் காய்ந்து போயின. தொடர்ந்து, கடந்த மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் வறண்டு போயின.

இதனால், புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் விலங்குகள் அனைத்தும் உணவு, தண்ணீரை தேடி அருகில் உள்ள மாயார் ஆற்றுபடுகை மற்றும் பந்திப்பூர் சரணாலயம் போன்ற பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தன. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வன விலங்குகளை காண முதுமலைக்கு சென்று சுற்றுலா பயணிகள் விலங்குகளை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக தற்போது காப்பகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பசுமை திரும்பியுள்ளது. இதனால், விலங்குகள் முதுமலை வனத்திற்கு திரும்பியுள்ளன. தற்போது மான், யானை போன்ற விலங்குகள் அனைத்தும் சாலையோரங்களில் வலம் வருகின்றன. குறிப்பாக, ஊட்டியில் இருந்து மசினகுடி வழியாக முதுமலை செல்லும் சாலையோரங்களில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

The post முதுமலையில் பசுமை திரும்பியதால் சாலையோரம் உலா வரும் வனவிலங்குகள் appeared first on Dinakaran.

Tags : Mutumala ,Mudumalai ,Nilgiri District ,Mudumalai Tigers Archive ,Dinakaran ,
× RELATED முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில்...