×

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ₹2.50 கோடிக்கு பருத்தி கொள்முதல்

*அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7,777 விலைபோனது

*விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனார்கோயில் : செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.2.50 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,777 விலைபோனது.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விவசாயிகள், இடைத்தரகர்கள் இன்றி தங்களது விளைபொருட்களான நெல், உளுந்து, பயறு, பருத்தி, நிலக்கடலை ஆகியவற்றை தேசிய மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் (இ-நாம் முறையில்) விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். இதனால் பயன்பெறும் விவசாயிகள் நெல், பருத்தி உள்ளிட்ட விளைபொருட்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடப்பு பருவத்தில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பனார்கோயில், பரசலூர், மேம்மாத்தூர், கீழ்மாத்தூர், ஆறுபாதி, கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம், நல்லாடை, கொத்தங்குடி, விசலூர், திருவிடைக்கழி, அரசூர், விளாகம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், பருத்தியை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகள் பருத்தி அறுவடை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் 2024ம் ஆண்டுக்கான பருத்தி கொள்முதல் தொடங்கியது.

அந்த வகையில் நேற்று கண்காணிப்பாளர் சங்கர்ராஜா தலைமையில் இணை செயலாளர் சிலம்பரசன் மேற்பார்வையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,777-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,569-க்கும் சராசரியாக ரூ.7,000-க்கும் விலைபோனது. நேற்று ஒரே நாளில் மொத்தமாக சுமார் 2,500 குவிண்டால் பருத்தி ரூ.2.50 கோடிக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 925 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 25 வியாபாரிகள், மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர். டெல்டா பகுதியிலேயே செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிக விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ₹2.50 கோடிக்கு பருத்தி கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Sembanarco ,Sembanarcoil ,Sembanarkoil ,Mayiladuthurai district ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் குறுவை நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்