×

குமாரபாளையத்தில் பரபரப்பு சம்பவம் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்களும் பலி

*டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடி எதிர்புறம் சென்றது

குமாரபாளையம் : சேலத்திலிருந்து கோவைக்கு கோன் பாரம் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்ததால், நிலைகுலைந்து எதிர்புறம் வந்த கோழி லாரி மீது மோதியது. இதில், இரு லாரிகளின் டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோ(40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் உள்ள லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை 5 மணியளவில், சேலத்திலிருந்து நூல் கோன்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, சங்ககிரியில் உள்ள ஆபிசுக்கு வந்த வினோ, பின்னர் கோவை நோக்கி புறப்பட்டார். குமாரபாளையம் பைபாஸ் ரோட்டில், ஆசிரியர் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், லாரி தறி கெட்டு ஓடியது. தொடர்ந்து சென்டர் மீடியனை தாண்டிச் சென்று, எதிரே பொள்ளாச்சியிலிருந்து கோழி பாரம் ஏற்றி வந்த லாரி மீது பயரங்கரமாக மோதியது. இதில், இரண்டு லாரிகளின் முன்புறமும் அப்பளம் போல் நொறுங்கியது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய கோழிபாரம் ஏற்றி வந்த லாரியின் டிரைவரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசாருதீன்(40), கோன் லாரி டிரைவர் வினோ ஆகிய இருவரும் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். இந்த விபத்தால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரிகளை மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 டிரைவர்களின் உடல்களையும் கைப்பற்றி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post குமாரபாளையத்தில் பரபரப்பு சம்பவம் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்களும் பலி appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Salem ,Coimbatore ,Dinakaran ,
× RELATED இன்றும், நாளையும் மின் மயானம் இயங்காது