×

சாப்பிட முடியல, தண்ணீர் குடிக்க முடியல… லட்சக்கணக்கில் படையெடுக்கும் ஈக்கள்: கோழி பண்ணையை முற்றுகையிட்ட மக்கள்

*குண்டடம் அருகே பரபரப்பு

தாராபுரம் : குண்டடம் அருகே இயங்கி வரும் கோழி பண்ணையால் லட்சக்கணக்கான ஈக்கள் படையெடுத்து வந்து சுற்று வட்டார கிராம மக்களை பாடாய் படுத்துகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கோழிப்பண்ணையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கொக்கம்பாளையம் பகுதியில் தனியார் முட்டை கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது.

இப்பண்ணையில் இருந்து தினமும் ஏராளமான ஈக்கள் சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள மராபாளையம், தர்மர்புதூர் கொக்கம்பாளையம் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் வந்த வண்ணம் உள்ளது. இவை காய்கறிகள், பழங்கள், குடிநீர், உணவுப்பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட எல்லா பொருட்கள் மீதும் அமர்ந்து நோய்களை பரப்பி வருவதாகவும், சமையல் பாத்திரங்களில் விழுந்து வீடுகளில் எங்கு பார்த்தாலும் ஈக்கள் நிறைந்திருப்பதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிம்மதியாக சாப்பிட முடியாத நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தேநீர் அருந்துவதற்குள் டம்ளர்களுக்குள் ஈக்கள் விழுந்து விடுகிறது. அத்துடன் வீடுகளில் துணிகள் உலர்த்தப்படும் கயிறுகளில் இடைவெளியில் இன்றி ஈக்கள் அமர்வதால், அதன் எச்சம் துணிகளில் பட்டு கரை படிந்தது ஆடைகளை அணிய முடிவதில்லை.

மீண்டும், மீண்டும் அதை சலவை செய்து பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். காலை, மாலை வேளைகளில் சமையல் செய்வதற்குள் பாத்திரங்களுக்குள் விழுந்து விடுகிறது சமையல் செய்து முடித்தவுடன் பாத்திரங்களில் ஒன்றாக வைத்து துணிகளை கொண்டு மூடி வைத்து வருகிறோம் என பெண்கள் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து படையெடுத்து வரும் ஈக்களால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டியதோடு நேற்று தனியார் கோழிப்பண்ணையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் மருத்துவத்துறை மற்றும் வருவாய் துறை, போலீசார் கிராம மக்களிடமும், கோழிப்பண்ணை நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அடுத்து வரும் 20 நாட்களுக்குள் ஈக்களை கட்டுப்படுத்த உரிய தடுப்பு மருந்துகளை அடித்து சுகாதார சீர்கேடு ஏற்படாமல், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் நிகழாமல் பார்த்துக் கொள்வதாக கோழி பண்ணை நிர்வாகம் தரப்பில் எழுத்துப்பூர்வமான உறுதிமொழி கடிதம் வழங்கியது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர், கிராம மக்களின் முற்றுகை போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சாப்பிட முடியல, தண்ணீர் குடிக்க முடியல… லட்சக்கணக்கில் படையெடுக்கும் ஈக்கள்: கோழி பண்ணையை முற்றுகையிட்ட மக்கள் appeared first on Dinakaran.

Tags : Kundadam Tarapuram ,Kundadam ,
× RELATED கிராவல் மண்ணை அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்: தாசில்தார் நடவடிக்கை