×

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு.. 155 பேருக்கு தொடர் சிகிச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம்தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 59 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதன்மூலம் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் 155 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விஷ சாராய வழக்கில் கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜா, ராமர், புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ், ஷாகுல் ஹமீது (65), பண்ருட்டியை சேர்ந்த சக்திவேல் (27), கள்ளக்குறிச்சி அருகே உள்ள சூலாங்குறிச்சியை சேர்ந்த கண்ணன் (30) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த தெய்வீகன் (27), கள்ளக்குறிச்சி சூலாங்குறிச்சி அய்யாசாமி (65), செம்படாகுறிச்சி அரிமுத்து (30), சேஷசமுத்திரம் கதிரவன் (35) ஆகியோர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மதுரவாயலை சேர்ந்த சிவகுமார், பன்சால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன்மூலம் 21 பேர் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஷ சாராயம் குடித்த 95 பேரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளார். இதனிடையே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் உள்ளிட்ட 9 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண் 1) நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து 60 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாமக வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

The post கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு.. 155 பேருக்கு தொடர் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalalakurichi ,Salem ,Viluppuram ,Puducherry ,Kalalakurichi Karunapuram ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...