×

எஸ்பி தலைமையில் தீவிர சாராய ரெய்டு * ஒரு வாரத்தில் 138 பேர் கைது * 1,480 லிட்டர் சாராயம் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஜூன் 25: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் தொடர்ந்து கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 57 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.மேலும், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சப் டிவிஷனிலும் சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது.

அதுதவிர, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் திருவண்ணாமலை, போளூர், செங்கம், செய்யாறு பகுதியில் உள்ள கலால் பிரிவு போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் கள்ளச்சாராய வேட்டை நடந்தது. திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர், கல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்பி நேரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சந்தேகப் பட்டியலில் இருந்த வீடுகளுக்கு நேரில் சென்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. தொடர்ந்து, தானிப்பாடி, தட்டரணை, தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக நடந்த அதிரடி சோதனையில், 56 பெண்கள் உள்பட மொத்தம் 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,480 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,750 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கல்வாராயன் மலையில் அதிரடி சோதனை நடந்து வருவதால், அங்கிருந்து கள்ளச்சாராயம் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மேல்வலசை, கீழ்வலசை, அக்கறைப்பட்டி வழியாக கொண்டுவரப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்டையில், அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல், ஜவ்வாது மலையில் கள்ளச்சாராய ஊறல் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு தனிப்படையினர் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றனர்.

The post எஸ்பி தலைமையில் தீவிர சாராய ரெய்டு * ஒரு வாரத்தில் 138 பேர் கைது * 1,480 லிட்டர் சாராயம் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Thiruvannamalai ,Kallakurichi ,incident ,SP ,Karthikeyan ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத்...