×

வாலிபருக்கு பாலியல் துன்புறுத்தல் சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜூலை 1ம் தேதி வரை போலீஸ் காவல்: நீதிமன்றம் அனுமதி

பெங்களூரு: வாலிபரை பாலியல் வன் கொடுமை செய்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மேலவை உறுப்பினர் சூரஜ் ரேவண்ணாவை வரும் ஜூலை 1ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. கர்நாடக மாநில அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய பேரவை உறுப்பினருமான எச்.டிரேவண்ணா, அவரது மனைவி பவானி ரேவண்ணா, அவரின் மகனும் முன்னாள் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் பாலியல் வன் கொடுமை புகாரில் கர்நாடக சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர்.

இதில் எச்.டி.ரேவண்ணா மற்றும் பவானி ரேவண்ணா ஆகியோர் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றுள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து சில புகார்களில் நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் விசாரணை கைதியாக உள்ளார். இப்படி ஒரே குடும்பத்தில் மூன்று பேர் பாலியல் வன் கொடுமை புகாரில் சிக்கிய நிலையில், அதே குடும்பத்தை சேர்ந்த நான்காவது நபராக சட்டமேலவை உறுப்பினர் சூரஜ் ரேவண்ணாவும் வாலிபர் ஒருவரை பலவந்தமாக பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியதாக ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் கொடுத்த புகாரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அவரை பெங்களூரு கோரமங்கலாவின் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வழக்கை விசாரணை நடத்தும் நீதிபதியின் வீட்டிற்கு அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சூரஜ் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வாலிபரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சூரஜ் ரேவண்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் ஒப்படைக்க கோரி, கர்நாடக சிஐடி போலீஸ் தரப்பில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுமீது உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணை நடந்தது. போலீஸ் மற்றும் குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் செய்தனர். அதை தொடர்ந்து ஜூலை 1ம் தேதி வரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையில் பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டு சிஐடி போலீஸ் விசாரணை பிடியில் இருக்கும் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிடகோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று பகல் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். அதை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார். நாளை தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக நீதிமன்ற வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

The post வாலிபருக்கு பாலியல் துன்புறுத்தல் சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜூலை 1ம் தேதி வரை போலீஸ் காவல்: நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Suraj Revanna ,Bengaluru ,Bengaluru People's Representative Court ,Dinakaran ,
× RELATED சூரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்