×

போலி ஐடி மூலம் மெயில் அனுப்பிய மர்ம நபர் சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு அனுப்பியதால் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படுவதுபோல் போலி ஐடி மூலம் மெயில் அனுப்பிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த மர்ம நபர் ஒரே நேரத்தில் நாட்டிலுள்ள பல்வேறு விமானநிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்துள்ளது. சென்னை விமான நிலைய ஆணையம் இ-மெயில் முகவரிக்கு, நேற்று காலை ஒரு தகவல் வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் கழிவறை, ஓய்வறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் அலுவலகத்திற்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில், உயர் மட்ட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய போலீசார், விமான நிறுவன பாதுகாப்பு படை, ஆணையக பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து விமான நிலையத்திற்கு, தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலமாக 7வது முறையாக மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக விமான நிலைய கழிவறைகள், பயணிகள் ஓய்வறைகள் போன்றவற்றில் முழு சோதனைகள் நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எனவே இது வழக்கம்போல் புரளி என்று தெரிய வந்தது. ஆனாலும் இதேபோல் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால், சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே இ-மெயில் ஐபி முகவரியை வைத்து பார்த்தபோது, அமெரிக்காவில் இருந்து மிரட்டல் வந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் நவீன விபிஎன் தொழில்நுட்ப சாப்ட்வேர் மூலம், இதேபோல் போலியான ஐடி உருவாக்கி, வெளிநாடுகளில் இருந்து இந்த தகவல் வருவதுபோல் அனுப்பி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதோடு தொடர்ந்து இதேபோல் அனுப்பி வரும் மர்ம ஆசாமி குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு மட்டுமல்லாது நாட்டிலுள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஒரே நபர் அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் புரளியை அனுப்பி வருவதாக தெரிகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த இளைஞர் ஒருவரை, சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். அந்த இளைஞர் தற்போது புழல் சிறையில் இருக்கிறார். இனிமேல் இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் புரளி வராது என்று, அதிகாரிகள் நம்பிக் கொண்டு இருந்த நிலையில், மீண்டும் வெடிகுண்டு புரளி வந்துள்ள சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

The post போலி ஐடி மூலம் மெயில் அனுப்பிய மர்ம நபர் சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு அனுப்பியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,US ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்