×

சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தும் விவசாயிகளின் மானியம் 50 சதவீதமாக உயர்வு: மாநில அரசு உத்தரவு

பெங்களூரு: வேளாண் தொழிலுக்கு சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கான மானியம் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள பம்புசெட்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தி கொள்ளும் வகையில் குசும்-பி என்ற திட்டம் அறிமுகம் செய்துள்ளது. கர்நாடகா புதுப்பிக்கதக்க எரிசக்தி மேம்பாட்டு கழகம் (கேஆர்இடிஎல்) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நீர்மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பம்புசெட்களுக்கு பயன்படுத்துவதை படிப்படியாக குறைத்து, சூர்யசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு மாநில அரசு மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் ‘‘விவசாயிகள் சூரியசக்தி மேளா’’ ஏற்பாடு செய்தது.

இதில் 16,300 விவசாயிகள் தங்கள் பெயரை பதிவு செய்தனர். இதில் 7 ஆயிரம் விவசாயிகளின் நிலத்தில் உள்ள பம்புசெட்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பம்புசெட்களில் உள்ள பழைய மின்சார மோட்டரை மாற்றிவிட்டு சூர்யசக்தி மூலம் இயக்கப்படும் மோட்டார் பொருத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஏற்படும் செலவில் 30 சதவீதம் மாநில அரசு மானியமாக வழங்கி வருகிறது.

மாநிலத்தில் சூரிய சக்தி மின்சார பம்ப்செட் அமைக்க விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதை உணர்ந்த மாநில அரசு, இவ்வாண்வடு 40 ஆயிரம் பம்புசெட்கள் பயன்படுத்த அனுமதி வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் 25 ஆயிரம் பம்புசெட்கள் பயன்படுத்த ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதியை தொடர்ந்து, விவசாயிகளுக்கு தேவையான பம்புசெட் மோட்டார்கள் தயாரித்து கொடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு டெண்டர் வழங்கியுள்ளது.

மேலும் தற்போது பம்புசெட் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு வழங்கி வரும் மாநில அரசின் மானியம் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. ஒரு சோலார் பம்ப்செட் அமைக்க ரூ.4.10 லட்சம் செலவாகும். இதில் ஒன்றிய அரசின் 30 சதவீதம் மானியமும், மாநில அரசின் 50 சதவீதம் மானியமும். விவசாயிகள் பங்கு 20 சதவீதமாகும். ஐந்து ஆண்டு உத்தரவாதம் உண்டு. சோலார் பம்புக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற்றால், ஐந்தாண்டுகள் பராமரிக்கும் பொறுப்பு மோட்டார் பம்பு தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செலவு, மானியம் பற்றிய தகவல்கள்
* சோலார் பம்ப் திறன் 3 ஹெச்பி சர்பேஸ் சோலார் பம்ப் செட் விலை ரூ.2,04,760. இதில் மாநில அரசு மானியம் ரூ.1,02,380, ஒன்றிய அரசு மானியம் ரூ.57,157. விவசாயிகள் செலுத்துவது ரூ. 45,223.

* 5 ஹெச்பி நீர்மூழ்கி கருவிக்கான சோலார் பம்ப் செட் விலை ரூ.2,98,384, மாநில அரசு மானியம் ரூ.1,49,192, ஒன்றிய மானியம் ரூ.88,050. விவசாயிகள் பங்களிப்பு ரூ.61,142.

* 7.5 ஹெச்பி நீர்மூழ்கி சோலார் பம்ப் செட் விலை ரூ.4,09,680, மாநில மானியம் ரூ.2,04,840, ஓன்றிய மானியம் ரூ.1,19,342 மற்றும் விவசாயிகள் பங்கு ரூ.85,498. 10

* 10 ஹெச்பி சப்மெர்சிபிள் சோலார் பம்ப் செட் விலை 5,14,27.9 மாநில மானியம் ரூ.2,04,840, ஓன்றிய மானியம் ரூ.1,19,342 , விவசாயிகள் பங்கு ரூ.1,90,097.

The post சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தும் விவசாயிகளின் மானியம் 50 சதவீதமாக உயர்வு: மாநில அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : State government ,Bengaluru ,government ,Dinakaran ,
× RELATED மாநில அரசில் நிலவும் கடுமையான நிதி...