×

மாநில அரசில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி மத்தியிலும் 7வது ஊதிய உயர்வு செயல்படுத்தப்படுமா? அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு, முதல்வர் சித்தராமையா முடிவு என்ன?

பெங்களூரு: மாநில அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 7வது ஊதிய உயர்வை கடுமையான நிதி சுமை சந்தித்து வரும் கால கட்டத்திலும் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் திட்டம் செயல்படுத்த வசதியாக கடந்த பாஜ ஆட்சியில் ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் சுதாகர்ராவ் தலைமையில் 7வது ஊதிய உயர்வு ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் பல துறைகளின் அதிகாரிகள், ஊழியர் சங்க பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய தகவலின் அடிப்படையில் இடைக்கால அறிக்கையை தற்போதைய காங்கிரஸ் அரசிடம் வழங்கியுள்ளது. இதில் ஊழியர்களுக்கு 27 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு சிபாரிசுகள் செய்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுத்த ஐந்து உத்தரவாத திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டு பட்ஜெட்டிலும் குறைந்த பட்சம் ரூ.55 ஆயிரம் கோடி முதல் 59 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் மாநிலத்தில் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சி, சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட தேவைகளை சந்திக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு உள்ளது.

நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஊதிய மறுசீரமைப்பு அவசியம் என்பது, முதல்வர் சித்தராமையாவை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் உத்தரவாதச் சுமைக்கு மத்தியில், மாநில அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு அறிக்கையின்படி திருத்தப்பட்ட ஊதியத்தை அமல்படுத்த காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நிதி ஆதாரம் சேமிக்க வேண்டுமானால் தற்போது பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ் வரி உயர்த்தி இருப்பது போல், வேறு வழியிலும் நிதி திரட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மாநில அரசு 7வது ஊதியக் குழு அறிக்கை 27.5% பரிந்துரை: மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன், கே.சுதாகர் ராவ் தலைமையிலான ஊதிய உயர்வு குழு கடந்த மார்ச் 16ல் 30க்கும் மேற்பட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை முதல்வர் சித்தராமையாவிடம் சமர்ப்பித்தது. மக்களவை தேர்தல் விதிமுறை காரணமாக கடந்த மார்ச் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை செயல்படுத்தாமல் இருந்த நிலையில், தேர்தல் விதிமுறை விலக்கிய பின் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 7வது ஊதிய உயர்வு சிபாரிசு செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஊதிய உயர்வு குழு கொடுத்துள்ள இடைக்கால சிபாரிசுகளை செயல்படுத்தும் விஷயத்தில் அமைச்சர்கள் இடையில் இருவேறு கருத்துகள் வெளிப்பட்டதாகவும் பல அமைச்சர்கள் சிபாரிசுகளை செயல்படுத்த வேண்டாம் என்று கூறிய நிலையில், சிலர் அரசுக்கு ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க வேண்டுமானால் சிபாரிசு செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்ததாகவும் ஆனால் முதல்வர் சித்தராமையா தனது பரிந்துரையின்படி 27.5% ஊதிய உயர்வுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

* மாநில அரசின் கணக்கீடு என்ன?
ஊதியக் குழு அறிக்கையின்படி 27.5% ஊதியம் வழங்கினால் நடப்பு 2024-25ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.17,440.15 கோடி கூடுதல் செலவாகும். மாநிலத்தில் பசவராஜ் பொம்மை அரசு இருந்தபோது, இடைக்கால நிவாரணமாக 17% ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இப்போது 7வது ஊதியக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்து 27.5% ஊதியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அரசு ஊழியர்கள் ஊதிய குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

மாநில அரசு 27.5% ஊதியம் உயர்வு செய்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.17,000 லிருந்து ரூ.27,000 ஆக உயரும். தற்போது 17% உயர்வு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது, ஊதிய திருத்தம் 27.5% என்றால் மீதியுள்ள 10% ஊதிய உயர்வு மட்டுமே தேவை. 2024-25 பட்ஜெட்டில், சித்தராமையா தலைமையிலான அரசு ரூ.15,000 கோடி ஊதியத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

மீதியுள்ள 10 சதவீதத்திற்கான ஊதியம் உயர்வு செய்தால் கூடுதலாக ரூ. 2,500 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது தவிர முன் தேதியிட்டு வழங்க வேண்டிய பாக்கி ஊதியம் வழங்குவதுடன் ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கி வரும் ஊழியர்களின் பென்ஷன் தொகையும் 7வது ஊதிய உயர்வு குழு சிபாரிசு அடிப்படையில் வழங்க வேண்டும்.

* அரசுக்கு என்ன சுமை?:
நடப்பு 2024-25 பட்ஜெட் மதிப்பீட்டில் ஊதியம் வழங்க ரூ.80,434 கோடி மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ.32,355 கோடி என மொத்தம் ரூ.1,12,789 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2023-24 ஆம் ஆண்டில் ஒதுக்கிய நிதியை காட்டிலும் ரூ.22,670 கோடி அதிகமாகும். இடைக்கால நிதித் திட்டத்தின்படி ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் படிகள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற ஓய்வூதிய பலன்கள் ஆகியவற்றின் திருத்தம் காரணமாக ஆண்டுக்கு ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை கூடுதல் சுமை ஏற்படும்.

மேலும் 7வது ஊதியக் குழு அறிக்கையின்படி, ஊதியத் உயர்வு அமல்படுத்தப்பட்டால், கூடுதல் ஊதிய செலவு ரூ.7,408.79 கோடியாக இருக்கும். இது தவிர வீட்டு வாடகை, நகர்ப்புற நிவாரண உதவித்தொகை, இதர உதவித்தொகை என கூடுதல் செலவு ரூ.824 கோடி வரை வழங்க வேண்டும். மேலும் மருத்துவக் செலவினங்களுக்கு ரூ.109.30 கோடியும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கான கூடுதல் செலவு ரூ.3,791.43 கோடியாக இருப்பதுடன் புதிய ஓய்வூதிய ( என்பிஎஸ்) திட்டத்திற்கு கூடுதல் செலவு ரூ.530.45 கோடியாக இருக்கும். மேலும் இறப்பு மற்றும் ஓய்வுக்கான கூடுதல் செலவு ரூ.1,083.56 கோடியை எட்டும்.

மேலும் விடுப்பு பணமாக (லீவ் என்கேஜ்மென்ட்) ரூ. 241.02 கோடி கூடுதல் செலவாகும். சுமை குறையும். ஓய்வூதிய மாற்றத்திற்கான கூடுதல் செலவினமாக ரூ.563.41 கோடி, ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்திற்கான கூடுதல் செலவாக ரூ.373.89 கோடி, ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ வசதிகளுக்கான கூடுதல் செலவாக ரூ.315 கோடி. மற்றும் உதவி பெறும் நிறுவனங்களின் சம்பள மானியத்தின் கூடுதல் செலவாக ரூ.2,599.30 கோடி. இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* ஊதிய உயர்வு தாமதமானால் போராட தயார்
7வது ஊதிய உயர்வு திட்டம் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தினால் போராட்டத்தில் குதிக்க மாநில அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் கஷ்டமோ நஷ்டமோ ஏற்பட்டாலும் முதல்வர் சித்தராமையாவுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகத் உள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு விரைவில் அமல்படுத்தும் என்று கர்நாடக மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர் சி.எஸ்.சடாஷ்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்வர், துணைமுதல்வர் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளனர். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டும். கூடிய விரைவில் அரசாங்கம் ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இல்லை என்றால் கூட்டம் நடத்தி அடுத்து என்ன செய்வது என்று யோசிப்போம் என்றார். இதுதவிர ஏப்ரல் மாதம் முதல் நிலுவைத் தொகையை முன்னோடியாக வழங்க வேண்டும் என ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post மாநில அரசில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி மத்தியிலும் 7வது ஊதிய உயர்வு செயல்படுத்தப்படுமா? அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு, முதல்வர் சித்தராமையா முடிவு என்ன? appeared first on Dinakaran.

Tags : pay hike ,Chief Minister ,Siddaramaiah ,BENGALURU ,state government ,Dinakaran ,
× RELATED இந்தியா இந்து நாடல்ல; பன்முகத்தன்மை...