×

தம்பதியை சரமாரியாக தாக்கி நகை, பணம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

சித்ரதுர்கா: நள்ளிரவில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், தம்பதியை சரமாரியாக தாக்கி, அவர்களை கட்டிப்போட்டு, அங்கிருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பணம், நகையை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ரதுர்கா மாவட்டம், செல்லகெரே தாலுகா, பெங்களூரு சாலை, நிர்மலா லாட்ஜ் அருகே உள்ள மேகலா மானே சுனன்னிங்கப்பா பேரங்காடியை சேர்ந்தவர் பி.ஏரண்ணா. ஹிரேம்தாரே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ராதா.கடந்த சனிக்கிழமை இரவு தம்பதி, சாப்பிட்டு முடித்து தூங்க சென்றனர். நள்ளிரவில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே மர்மநபர்கள் 3 பேர் நுழைந்தனர். சத்தம் கேட்டு ஏரண்ணா எழுந்தார். உடனே மர்மநபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த ராதாவுக்கும் பலத்த அடி விழுந்தது. இதில் பின்னர் 2 பேரையும் கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள், ராதா அணிந்திருந்த நகைளை கொள்ளையடித்து சென்றனர்.

புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஏரண்ணா வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், ரூ.3.95 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் 3 தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், படுகாயமடைந்த தம்பதி, நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post தம்பதியை சரமாரியாக தாக்கி நகை, பணம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chitradurga ,Chitradurga district ,Selagere taluk, Bengaluru ,
× RELATED விண்ணுக்கு செயற்கைக்கோள்களை...