×

ஒன்றிய அரசிடம் வெள்ள பாதிப்புக்கு கேட்டது ரூ.37 ஆயிரம் கோடி கிடைத்தது ரூ.270 கோடி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில்

சென்னை: வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசிடம் கேட்டது ரூ.37 ஆயிரத்து 970 கோடி. ஆனால் ஒன்றிய அரசு வழங்கியது ரூ.270 கோடிதான் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தனது பதிலுரையில் கூறியதாவது: வருவாய்த்துறை என்பது ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறை. அதன் மூலம் அப்போது வரி வசூல் மட்டுமே நடந்தது. கால மாற்றத்துக்கு ஏற்ப இப்போது அந்த துறை பல்வேறு பணிகளையும் உள்ளடக்கிய ஒரு துறையாக உள்ளது. அதன்படி அனைத்து சான்றுகளையும் வழங்குதல் குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கான வருவாய், இருப்பிட, சாதிச்சான்றுகளை வழங்கும் பணிகளை செய்யும் வகையில் திமுக தலைவர் கலைஞர் இந்த துறையில் ஏற்பாடு செய்தார். தற்போது 2020-21ம் ஆண்டு முதல் 26 வகையான சான்றுகளை ஆன்லைன் மூலம் இந்த துறை வழங்கி வருகிறது. அதுவும் விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இந்த துறைக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் வந்தன. அவற்றை வகைப் பிரித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 1039 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. கடந்த 3 ஆண்டில் மட்டும் இந்த துறையின் மூலம் 2 கோடியே 75 ஆயிரம் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித்தொகையை ரூ.1200 ஆக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தியுள்ளார். வருவாய்த்துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் மாவட்டங்களில் 3வது புதன் கிழமைகளில் மக்கள் தொடர்்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் மூலம் மாவட்ட ஆட்சியர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று தங்கி ஆய்வு செய்துவருகின்றனர். இலவச வேட்டிசேலை திட்டத்தை பொறுத்தவரையில் 2024-25ம் ஆண்டில் 1 கோடியே 52 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் குறிப்பாக புயல் காலங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கே பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளுக்கு தாலுகா அலுவலக கட்டிடம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதேபோல கோட்ட வருவாய் அலுவலகம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இதற்கான கட்டிடங்கள் விரைவில் கட்டப்படும். அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப விரைவில் இந்த கட்டிடங்கள் கட்டப்படும். அதுகுறித்து நிதித்துறைக்கும் வலியுறுத்தியுள்ளோம்.

மிக்ஜாம் புயல் நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார். நிதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அவருக்கு பிறகு நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். அதன் பிறகு வெள்ள பாதிப்பு நிதியாக ரூ.37,970 கோடி கேட்டோம். ஆனால் அவர் ரூ.270 கோடி தான் கொடுத்தார். புயல் வந்தபோது சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் தேங்கியது. அந்த நீரை வெளியேற்ற அதிமுக ஆட்சியில் நாள் கணக்கில் வெளியேற்றினர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 24 மணி நேரத்தில் அந்த நீர் வெளியேற்றப்பட்டது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசிடம் வெள்ள பாதிப்புக்கு கேட்டது ரூ.37 ஆயிரம் கோடி கிடைத்தது ரூ.270 கோடி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் appeared first on Dinakaran.

Tags : Union government ,Minister KKSSR ,Ramachandran ,Chennai ,Revenue Minister ,KKSSR ,Minister ,Dinakaran ,
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்