×

சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு சென்னையில் இந்திராகாந்திக்கு சிலை: பல்வேறு தலைவர்கள் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

சட்டப்பேரவையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்:
* சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிலை அமைக்கப்படும்.
* மருது சகோதரர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிலை நிறுவப்படும்.
* தமிழ்நாட்டில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி தமிழுக்கு பெருமை சேர்த்த சீகன் பால்குக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.
* தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக பணிபுரிந்த சர்.ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சென்னையில் ரூ.50 லட்சத்தில் சிலை நிறுவப்படும்.
* அறிவியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவுக்கு கோயம்புத்தூரில் ரூ.50 லட்சத்தில் சிலை நிறுவப்படும்.
* திருத்தணியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு ரூ.50 லட்சத்தில் சிலை நிறுவப்படும்.
* முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சென்னையில் ரூ.50 லட்சத்தில் சிலை நிறுவப்படும்.
* தியாகி வை.நாடிமுத்துப்பிள்ளைக்கு பட்டுக்கோட்டையில் ரூ.50 லட்சத்தில் சிலை நிறுவப்படும்.
* காவேரி மீட்புக் குழுவில் இணைந்து போராடியகரூர் சி.முத்துசாமிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிலை நிறுவப்படும்.
* 31 மணிமண்டபங்கள், அரங்கங்களில் மேலாண்மை பணிகள் தொடர் செலவினமாக ஆண்டுதோறும் ரூ.3.25 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* மணிமண்டபங்கள், அரங்கங்கள் பராமரிப்பு பணிகள் முதற்கட்டமாக ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளான ஜூலை 7ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாளான ஜூன் 1 கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* மதுரை உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயே ஆட்சியாளர்களை எதிர்த்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த 16 வீரத் தியாகிகளுக்கு ஏப்ரல் 3ம் தேதி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நினைவு நாளாக கடைபிடிக்கப்படும்.
* சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாளாக அக்டோபர் 9ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* அல்லாள இளையநாயக்கர் பிறந்த நாளான தைத் திங்கள் 1ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* சுதந்திர போராட்ட தியாகி கு.மு.அண்ணல் தங்கோ பிறந்த நாளான ஏப்ரல் 13ம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் ப.சுப்பராயன் பிறந்த நாளான செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்த நாளான ஜூலை 7ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்த நாளான ஜூன் 1ம் தேதி திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* தமிழறிஞர் மு.வரதராசனார் பிறந்த நாளான ஏப்ரல் 25ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்த நாளான செப்டம்பர் 19ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* சென்னை தலைமை செயலக பத்திரிகையாளர்கள் அறை ரூ.16.75 லட்சத்தில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

* பேரவை கூட்டத்தில் பங்கேற்காத அதிமுகவினர்
தமிழக சட்டசபையில் கடந்த 21ம் தேதி முதல் காலை, மாலை என இருவேளைகளிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. உயர் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக் கல்வித் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது நேற்று காலை விவாதம் நடந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனால் நேற்றைய கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய 3 பேரும் அவைக்கு வந்திருந்தனர்.

* காலை சிற்றுண்டி திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கோரிக்கை
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி தனது பதிலுரையில் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை என்பது வருவாய் ஈட்டும் துறை அல்ல. ஆனால் இதில் செய்யப்படும் முதலீடு என்பது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றமாக மாறும். அதற்காக பள்ளிக் கல்வித்துறையில் 67 திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரில் சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டு அந்த திட்டம் அவர் பெயரில் உள்ளது போல, தற்போதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் வைக்கப்பட வேண்டும் என்பது என் சார்பில் வைக்கப்படும் கோரிக்கை. இந்த திட்டம் எங்கள் பணத்திலோ, கட்சிப் பணத்திலோ செயல்படுத்தப்படவில்லை. மக்கள் வரிப் பணத்தில்தான் செயல்படுத்தப்படுகிறது. இருந்தாலும் முதல்வர் பெயரை சூட்ட வேண்டும். இது வெறும் தம்பட்டத்துக்காக சொல்லவில்லை. இது எனது கோரிக்கைதான்.ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

The post சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு சென்னையில் இந்திராகாந்திக்கு சிலை: பல்வேறு தலைவர்கள் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Assembly ,Indira Gandhi ,Chennai ,Information ,MU Saminathan ,Legislative ,Rani Velu Nachiyar ,Gandhi Mandapam ,Marudu ,
× RELATED ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி செம்மொழி...