×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு மாஸ்டர் பிளான் விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பதில்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது: கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியில் கருங்காலி குப்பம் பெருமாள் கோயில், கீழாத்தூர் கோயில், சொரங்குளத்தூர் கோயில் ஆகியவற்றில் பணிகள் பாதியளவே நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது. அதை விரைந்து நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். திருச்செந்தூர், பழனியை போல மிக அதிக அளவில் தெலங்கானாவிலும், ஆந்திராவிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினசரி திருவண்ணாமலை கோயிலுக்கு வருவதால் அதற்கான மாஸ்டர் பிளானை தயாரித்து வேண்டிய வசதிகளை பக்தர்களுக்கும் தர அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றும், அதேபோல கோயில்களில் செலுத்தப்பட்ட தங்க காணிக்கைகள் கட்டிகளாக மாற்றப்பட்டு, வங்கிகளில் எந்தெந்த கோயிலுடைய தங்கம் எப்படி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறநிலையத்துறை அறிவிக்குமா? என்றும் கு.பிச்சாண்டி கேள்விகள் எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலை பொறுத்தளவில் முதல்வரின் நேரடி பார்வையில் அந்த மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலு 10 நாட்களுக்கு ஒருமுறையாவது ஆய்வு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் முதல்கட்ட மாஸ்டர் பிளான் என்பது சுமார் 36.41 கோடி ரூபாயில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அந்த கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பவுர்ணமி தினத்தில் சுமார் 30 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான தங்கும் இடவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற மாவட்ட அமைச்சரின் கோரிக்கையை முதல்வரின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. தங்க முதலீட்டு திட்டம் குறித்து துணை சபாநாயகர் கோரினார். தங்க முதலீட்டு திட்டத்தில் 13 கோயில்களிலிருந்து பெறப்பட்ட 257 கோடியே 22 லட்சத்து 36,910 ரூபாய் மதிப்பிலான 442 கிலோ 107 கிராம் 030 மில்லிகிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டிற்கு ரூ.5 கோடியே 79 லட்சத்து 12,671 ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது. இந்த வட்டித் தொகை அந்தந்த கோயில்களின் திருப்பணிகளுக்கும், பக்தர்களுடைய தேவைகளை நிறைவேற்றுகின்ற பணிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சட்டப் பேரவையில் நேற்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்: அச்சு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில் தலா 60 இடங்கள் என 6 புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி ரூ.21 கோடியிலும், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி ரூ.14 கோடியிலும் கட்டப்படும். சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டிடம் ரூ.21 கோடியில் கட்டப்படும்.

அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ரூ.8.55 கோடியில் மாணவியர் ஓய்வறை கட்டப்படும். கோயம்புத்தூர், சேலம், பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம், ரூ.3 கோடி கோடியில் நிறுவப்படும். திருநெல்வேலி, தருமபுரி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூ.3 கோடியில் நிறுவப்படும். காரைக்குடி, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் நிறுவப்படும்.

வேலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் ரூ. நிறுவப்படும். கேட், ஐ.இ.எஸ்., ஜிமேட்., ஜி.ஆர்.இ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500ல் இருந்து 1,400ஆக உயர்த்தப்படும். இதற்கு கூடுதலாக ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்படும். அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ரூ.2 கோடி ஒதுக்கப்படும். 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் ரூ.7.05 கோடியில் கொள்முதல் செய்யப்படும்.
திருச்சி, அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் கல்வியாண்டில் அரசுக் கல்லூரிகளில் 20 சதவிகிதமும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15 சதவிகிதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவிகிதமும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு மாஸ்டர் பிளான் விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Annamalaiyar ,Minister ,Shekharbabu ,Legislative Assembly ,Deputy Speaker ,K. Pichandi ,Karungali Kuppam Perumal temple ,Geezathur temple ,Sorangulathur ,Kilipennathur ,
× RELATED உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு...