×
Saravana Stores

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் குழிக்குள் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு: தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் குழிக்குள் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்டனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கூட்டம் பட்டா வனப்பகுதிகள் மழை காரணமாக பசுமை திரும்பி உள்ளதால் குட்டியுடன் காட்டு யானைகள் மற்றும் மான்கள் கூட்டமாக புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி வனச்சரகம், கார்குடி பிரிவு வனக்காப்பாளர் தலைமையில் நேற்று முன்தினம் மாலை ஒம்பட்டா வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒம்பட்டா வேட்டை தடுப்பு முகாம் பகுதிக்கு அருகில் இருந்த சிறிய குழிக்குள் பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை ஒன்று தவறி விழுந்து வெளியே வரமுடியாமல் தவிப்பதையும், தாய் யானை அதனை மீட்க முயற்சி செய்து வருவதையும் பார்த்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநருக்கு தகவல் தெரிவித்தனர்.இதை அடுத்து அங்கு விரைந்து வந்த வனப்பணியாளர்கள் உதவியுடன் வேட்டை தடுப்பு காவலர்கள் தாய் யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், தாய் யானையுடன் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து வனப்பணியாளர்கள் தாய் யானை மற்றும் குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் குழிக்குள் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு: தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Reserve Forest ,Kudalur ,Mudumalai Tiger Reserve ,Nilgiris District ,Forest Department ,
× RELATED இரவு முழுவதும் காவல் காத்தாலும்...