×

கால்வாய் ஆக்கிரமிப்பு: 250 வீடுகளுக்கு நோட்டீஸ்: வருவாய்துறை அதிரடி

குன்றத்தூர்: மாங்காடு பகுதியில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டியிருந்த 250 வீட்டின் உரிமையாளர்களுக்கு காலி செய்யும்படி வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழையில், மாங்காட்டில் சீனிவாசா நகர், ஜனனி நகர், ஓம்சக்தி நகர், அப்பாவு நகர், செல்ல கணபதி நகர் ஆகிய நகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு வகைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மழைக்காலங்களிலும் இதே அவலநிலை நீடித்து வந்திருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வுகாண தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி வட்டாட்சியர் காஞ்சனமாலா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், குடியிருப்புகளில் மழைநீர் தேங்க என்ன காரணம் என வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், அங்குள்ள மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து 250 வீடுகள் கட்டப்பட்டதுதான் எனத்தெரியவந்தது. இந்நிலையில், மாங்காடு பகுதியில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 250 வீடுகளின் உரிமையாளர்களுக்கு காலி செய்யும்படி வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் நேற்று வழங்கினர். அதில், ஆக்கிரமிப்பு வீடுகளில் உள்ளவர்கள் காலி செய்ய 21 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. மேலும், தாங்களாகவே முன்வந்து குடியிருக்கும் கட்டிடங்களை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்ற வேண்டும். இல்லையேல், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதும், வரும் மழைக்காலங்களின்போது கால்வாய் மூலமாக மழைநீர் எளிதாக வெளியேறும். இதனால் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்குவது தடுத்து நிறுத்தப்படும் என்றனர். வருவாய்த்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர்….

The post கால்வாய் ஆக்கிரமிப்பு: 250 வீடுகளுக்கு நோட்டீஸ்: வருவாய்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kuntarathur ,Revenue ,Mangadu ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில்...