×

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது மோடி, புதிய எம்பிக்கள் பதவியேற்பு: அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தி எதிர்க்கட்சிகள் முழக்கம்; நீட் எதிர்ப்பு கோஷங்களால் அவையில் பரபரப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் உட்பட 280 புதிய எம்பிக்கள் 18வது மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி பதவியேற்றபோது அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி ராகுல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் முழக்கமிட்டனர்.அதே போல், ஒன்றிய கல்வித் துறைஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்றபோது நீட் தேர்வு முறைகேடு குறித்து கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. மக்களவை தேர்தலைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளிலேயே பரபரப்பான பல சம்பவங்கள் நடந்தன. இடைக்கால சபாநாயகர் நியமனம் தொடர்பாக ஏற்கனவே பாஜ, காங்கிரஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் தலித் தலைவர் கே.சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல், பாஜவைச் சேர்ந்த 7 முறை எம்பியான பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கனவே காந்தி சிலை இருந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தியும் அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். இடைக்கால சபாநாயகர் நியமன விவகாரத்தில் பாஜ அரசியலமைப்பை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி, அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி ‘அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்’ என அவர்கள் முழக்கமிட்டனர். அதன்பின்னர் அவர்கள் அரசியலமைப்பு புத்தகத்துடனே அவைக்குள் சென்றனர்.

இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்பிக்கள் பதவியேற்பு விழா நடக்கிறது. இது புகழ்மிக்க நாள். நாளை ஜூன் 25. இந்த நாள் இந்திய ஜனநாயகத்தின் விழுந்த கறையின் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்தியாவில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட 50ம் ஆண்டு நினைவு தினம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ஜனநாயகம் முற்றிலும் நசுக்கப்பட்டது. அரசியலமைப்பை பாதுகாக்க நினைக்கும் இந்தியாவின் புதிய தலைமுறை இந்த நாளை ஒருபோதும் மறக்காது. 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்’’ என்றார்.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி முர்மு முன்னிலையில் புதிய மக்களவை உறுப்பினராகவும், இடைக்கால சபாநாயகராகவும் மகதாப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர், இடைக்கால சபாநாயகர் மகதாப் தலைமையில் காலை 11 மணிக்கு அவை கூடியதும், மறைந்த மக்களவை தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் முன்னிலையில் மக்களவை ஆளுங்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி முதல் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அப்போது, பாஜ உறுப்பினர்கள் ‘ஜெய் ராம்’ என முழக்கமிட்டு வரவேற்றனர்.

எதிர்க்கட்சியினர் வரிசையில் இருந்த ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது. இதே போல, மோடியை தொடர்ந்து, பதவியேற்பு நிகழ்வில் இடைக்கால சபாநாயகருக்கு உதவும் குழுவில் இடம் பெற்றிருந்த பாஜவின் ராதா மோகன் சிங், பக்கன் சிங் குலஸ்தே ஆகியோரும் 18வது மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அப்போது, ‘ஜனநாயக மரபு மீறல்’ என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இக்குழுவில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த காங்கிரசின் கே.சுரேஷ், டி.ஆர்.பாலு (திமுக) மற்றும் சுதீப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்.) ஆகியோர் இடைக்கால சபாநாயகர் நியமனத்தில் ஆளுங்கட்சி மரபை மீறியதை கண்டித்து குழுவில் பங்கேற்கவில்லை. மேலும், அவை தொடங்கியதுமே அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்பும் செய்தனர்.

பின்னர், ஒன்றிய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் இந்தியில் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங் ஆகியோர் புதிய எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்க வந்ததும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘நீட்’, ‘அவமானம்’ என தொடர்ந்து கோஷமிட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது. மொத்தம் 280 எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். மீதமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அதைத் தொடர்ந்து நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.

* தாய்மொழியில் பதவியேற்பு
பிரதமர் மோடி இந்தியில் உறுதிமொழி ஏற்ற நிலையில், பல எம்பிக்களும் அவர்களின் தாய்மொழியில் பதவியேற்றனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடியா மொழியில் பதவியேற்றார். கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாஜ எம்பியான சுரேஷ் கோபி மலையாளத்தில் சத்தியபிரமாணம் ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் ‘கிருஷ்ணா, குருவாயூரப்பா’ என கடவுள்களின் பெயரால் உறுதிமொழி ஏற்றார். மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் பத் யெஸ்ஸோ நாயக் சமஸ்கிருதத்தில் பதவியேற்றார்.

வடகிழக்கு பிராந்தியத்தின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பெங்காலி மொழியிலும், முரளிதர் மொஹோல் மராத்தி மொழியிலும், ஜிதேந்தர் சிங் டோக்ரி மொழியிலும் பதவியேற்றனர். துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோர் முறையே அசாம் மற்றும் தெலுங்கில் பதவியேற்றனர். ஒன்றிய எகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கன்னடத்திலும், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெலுங்கிலும் பதவியேற்றனர்.

* 3 மடங்கு அதிகமாக உழைப்போம் மோடி பேட்டி
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘‘நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். நாடகங்களையோ, இடையூறுகளையோ விரும்பவில்லை. நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை. மக்களுக்கு கோஷங்கள் தேவையில்லை, வாழ்வாதாரம் தேவை. இந்த 18வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்பிக்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என நம்புகிறேன். 3வது பதவிக்காலத்தில், நாங்கள் இன்னும் 3 மடங்கு அதிகமாக உழைப்போம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்’’ என்றார்.

* அவதேஷுக்கு முக்கியத்துவம்
மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமர்வின் முதல் வரிசையில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், திரிணாமுலின் கல்யாண் பானர்ஜி ஆகியோருடன், அவதேஷ் பிரசாத்துடம் இடம் பெற்றிருந்தார். சமாஜ்வாடியை சேர்ந்த இவர் அயோத்தியை உள்ளிடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜ எம்பி லல்லு சிங்கை 54,567 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுரவப் போரில் வெற்றி தேடித் தந்ததற்காக அவதேஷுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி தரப்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா 3வது வரிசையிலும், இமாச்சலின் மண்டி தொகுதி பாஜ எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் 8வது வரிசையிலும், டிவி தொடரில் ராமராக நடித்த மீரட் தொகுதி பாஜ எம்பி அருண்கோவில் 9வது வரிசையிலும் அமர்ந்திருந்தனர்.

The post நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது மோடி, புதிய எம்பிக்கள் பதவியேற்பு: அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தி எதிர்க்கட்சிகள் முழக்கம்; நீட் எதிர்ப்பு கோஷங்களால் அவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,House ,New Delhi ,18th ,Lok Sabha ,India ,Rahul ,
× RELATED எதுவும் மாறாதது போல பிரதமர் மோடி...