×

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு விரைந்து எடுக்க வேண்டும்: பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பற்றி காரசார விவாதம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பாமக எம்எல்ஏ, அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. இதையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பேரவையில் நேற்று உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.

பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி (பாமக): வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் உடனே நடத்த வேண்டும்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி: வன்னியர்களுக்கு கடந்த ஆட்சியில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டுமே உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் குறித்து சரியான தரவுகளோடு கொண்டு வராமல் அதை அவசர கதியிலே நிறைவேற்றிய காரணத்தினால்தான் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு குறித்த சரியான தரவுகள் தேவை. தரவுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு கூடுதல் பணி அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். ஆனால், சமூகம், பொருளாதார மேம்பாடு போன்ற தரவுகளை திரட்ட வேண்டும் என்றால் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுத்தாக வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாக வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை 2001-க்கு பிறகு ஒன்றிய அரசு எடுக்கவில்லை என்பதால் அதனை உடனே எடுக்க வேண்டும் என்று முதல்வரும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இன்றைக்கு பாமகவும் ஒன்றிய அரசின் கூட்டணியில் இருக்கிறது. எங்கள் கோரிக்கையை பாமகவும் வலியுறுத்தி, மிக விரைவிலேயே சாதிவாரி கணக்கெடுப்பினை நடத்தி வைத்து, அதன்பிறகு இந்த இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு இந்த அரசு எந்த வகையிலும் தடையாக இல்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகு தான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் உறுப்பினருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஜி.கே.மணி: அவ்வாறு நடத்தாமல் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்கும், இந்த உள் ஒதுக்கீடுக்கும் சம்பந்தம் இல்லை.
அமைச்சர் ரகுபதி: முதல்வர் குறிப்பிட்டதைப்போன்று, பீகார் மாநிலத்தில் இவ்வாறு சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அது உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே, அதை மீண்டும் நாம் செய்தாலும், மீண்டும் உயர் நீதிமன்றத்தால் ரத்துதான் செய்யப்படும். அவ்வாறு ரத்து செய்யப்படுவதில் உங்களுக்கு என்ன நன்மை இருக்கிறது? எனவே மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இதனை மேற்கொண்டால், யாருக்கும் எந்தவிதமான பாதகமும் ஏற்படாது.
அமைச்சர் எ.வ.வேலு: கடந்த ஆட்சியில் தேர்தல் நேரத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்துவிட்டு போய்விட்டார்கள். அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பிறப்பித்தார். இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பொருளாதார ரீதியில் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையம் ஒன்றை அமைத்தார். ஆனால், இவர்கள் (பாமக) வெளியே எவ்வாறு பேசுகிறார்கள். எனவே, இதை எங்களிடம் கேட்பதைவிட அவர்களிடம் (பாஜ) கேளுங்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒன்றிய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தரவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் சிவசங்கர்: சமூகநீதியை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிற பாஜவை இன்றைக்கும் தமிழகத்தில் தூக்கிப் பிடிக்கிறவர்கள் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள். எப்படி ஒரே நேரத்தில் இத்தனை விதமாக பேச முடிகிறது என்பது விந்தையாக இருக்கிறது. இப்போது நடைபெறப் போகிற இடைத்தேர்தல் நேரத்தில் அங்கு இருக்கிற மக்களுக்கு நீங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்வதாக நினைத்துக் கொண்டு சட்டமன்றத்தில் பதிவு செய்வது என்பது ஒரு தவறான முன்னுதாரணம். இன்னும் சொல்லப்போனால், பீகாரிலே உள்ஒதுக்கீடுதான் வழங்கப்படுகிறது. அதுதான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இங்கே பேசும்போது மேம்போக்காக சொல்கிறீர்கள், மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று. அத்தனை உள்ஒதுக்கீட்டையும் கொடுத்தவர் கலைஞர் என்பதை மறக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் திமுகவை குற்றம்சாட்டுவதைப் போல, பழியையெல்லாம் திமுகவின் மீது சுமத்துவது போல் பேசுவது என்பது அவைக்கு அழகல்ல. (அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேச முயன்றார். ஆனால், சபாநாயகர் அப்பாவு அவருக்கு அனுமதி அளிக்கவில்லை)

அமைச்சர் சிவசங்கர்: 20 சதவிகித இருக்கின்ற காரணத்தால்தான், வட மாவட்டங்களில் இன்றைக்கு 10.5 சதவீதம் என்று நீங்கள் கேட்கின்ற சதவீதத்தைவிட கூடுதலாக வன்னியர் சமூகத்து மக்கள் தங்களுக்கான உரிமையைப் பெறுகிறார்கள். அத்தனை புள்ளிவிவரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், டிஎன்பிஎஸ்சி வரைக்கும் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டதிலே, 10.5 சதவீதத்தைத் தாண்டிதான் வன்னியர்கள் இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு இருக்கின்ற காரணத்தால் பெறுகிறார்கள். நீங்கள் கேட்பது, அதனைக் குறைத்து கொடுப்பதற்கான வழியைத்தான் வகுத்துக் கொடுக்கும். இது வன்னியர் சமூகத்திலிருக்கின்ற படித்த, மூத்த, பல நிபுணர்கள் உங்களுக்கு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் புலி வாலை பிடித்து விட்டீர்கள். அந்த புலி வாலை பிடித்துக்கொண்டே போகிறீர்கள். புலியும் உங்களை விடாது. வாலையும் நீங்கள் விடமுடியாது. இதைத்தொடர்ந்தும் ஜி.கே.மணி பேச முற்பட்டார். பேச அனுமதி கிடைக்காததால் அவையில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.

The post மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு விரைந்து எடுக்க வேண்டும்: பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பற்றி காரசார விவாதம் appeared first on Dinakaran.

Tags : union government ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,BAM MLA ,Vanniyars ,M.K.Stal ,Vanniyyas ,
× RELATED ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த...