தாம்பரம்: முடிச்சூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ், இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சூரியகாந்தி என்பவர் சந்தோஷின் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சந்தோஷ் தனது நண்பர்களிடம் கூறியதின் பேரில் அவரது நண்பர் விக்கி (எ) விக்னேஷ் உள்ளிட்ட 10 பேர் நேற்று முன்தினம் இரவு சூரியகாந்தி வீட்டிற்கு கத்தியுடன் சென்று, சூரியகாந்தியை வெட்டியுள்ளனர். அப்போது சூரியகாந்தியின் அண்ணன் ராஜிவ்காந்தி மற்றும் அவரது உறவினர்கள், வெட்டிய நபர்களிடம் இருந்து 2 கத்திகளைப் பிடுங்கி, அவர்களை விரட்டினர்.
இதில் விக்கி (எ) விக்னேஷ் (20) மட்டும் தனியாக மாட்டிக்கொண்டதில், அவரை முடிச்சூர், சிஎஸ்ஐ சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக சூரியா (எ) சூரியகாந்தி (31), அமோஸ் (34) மற்றும் குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் உயிரிழந்த விக்கி (எ) விக்னேஷின் நண்பர்கள் 4 பேர் நேற்று மாலை சூரியகாந்தியின் நண்பரான லட்சுமிபுரம், கணபதி தெருவைச் சேர்ந்த நாத் (24) என்பவரை ஓடஓட விரட்டி வெட்டினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
The post நண்பரின் எதிரியை வெட்ட சென்ற வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.