×

யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு ஜெர்மனி, சுவிஸ் முன்னேற்றம்


ஃபிராங்க்பர்ட்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு முதல் 2 அணிகளாக ஏ பிரிவில் இருந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அணிகள் முன்னேறின. ஃபிராங்க்பர்டில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து-ஜெர்மனி அணிகள் மோதின. ஜெர்மனி ஏற்கனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்திருந்த நிலையில், சுவிஸ் அணிக்கு குறைந்தபட்சம் டிரா தேவைப்பட்டது. தொடக்கத்தில் ஜெர்மனி கை ஓங்கியிருக்க… 17வது நிமிடத்தில் அந்த அணியின் ராபர்ட் அடித்த கோல் ‘ஃபவுல்’ என நிராகரிக்கப்பட்டது. பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய சுவிஸ் அணிக்கு 28வது நிமிடத்தில் டான் என்டோய் அபாரமாக கோல் போட்டு 1-0 என முன்னிலை கொடுத்தார். அதன்பிறகு சுவிஸ் கோல் பகுதியை முற்றுகையிட்டு ஜெர்மனி வீரர்கள் அலை அலையாக தாக்குதல் நடத்தினாலும், அந்த கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

84வது நிமிடத்தில் ரூபன் வர்காஸ் அடித்த கோல் ‘ஆப்சைடு’ ஆனதால், 90 நிமிட ஆட்டம் முடியும் வரை சுவிஸ் 1-0 என முன்னிலையை தக்கவைத்தது. அதன் பிறகு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ஜெர்மனியின் நிகோலஸ் அற்புதமாக ‘ஹெட்’ செய்து கோலடிக்க, ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. ஜெர்மனி 7 , சுவிஸ் 5 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. ஸ்டுட்கார்ட் நகரில் ஸ்காட்லாந்து – ஹங்கேரி அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இருந்த ஸ்காட்லாந்து 0-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியிடம் தோல்வியை தழுவியது.

90 நிமிட ஆட்டம் முடிந்த பிறகும், இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, காயம் உள்ளிட்ட காரணங்களால் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டதற்காக வழங்கப்படும் கூடுதல் நேரம் முடியும் தருவாயில் (90’+10) ஹங்கேரி வீரர் ரோலண்ட் சல்லய் கார்னர் பகுதியில் இருந்து தட்டித் தந்த பந்தை சக வீரர் கெவின் ஸ்சோபோத் அசத்தலாக கோலடிக்க ஆட்டமும் முடிவுக்கு வந்தது. ஹங்கேரி (3), ஸ்காட் (1) அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

The post யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு ஜெர்மனி, சுவிஸ் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Germany ,Switzerland ,Euro Cup knockout round ,Frankfurt ,Euro Cup football ,Dinakaran ,
× RELATED யுரோ கோப்பை கால்பந்து: ஜெர்மனி கோல் மழை