×

21 ஆண்டுகளுக்கு பின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து: ‘உங்களுக்காக நீங்களே பேசுங்கள்’ கடைசி சுற்று பதிலால் முதலிடம்

ஜெருசலேம்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முதுகலை பயிலும் இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து 21 ஆண்டுகளுக்கு பின் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 1994ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சுஷ்மிதா சென் மற்றும் 2000ம் ஆண்டில் நடந்த போட்டியில் லாரா தத்தா ஆகியோர் மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். அதன் பின்னர் நடந்த போட்டிகளில் இந்தியா சார்பில் பலர் கலந்து கொண்டாலும் பட்டத்தை வெல்ல முடியாமல் திக்கி திணறி வந்தனர். இந்நிலையில் 70வது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி இஸ்ரேலின் எலியாட்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் சுமார் 80 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரை சேர்ந்த 21 வயது இளம் மாடல் அழகி ஹர்னாஸ் கவுர் சந்தும் போட்டியாளராக பங்கேற்றார். பல்வேறு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் போட்டியாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இறுதி சுற்றுக்கு முன்னதாக  கடைசி 5 போட்டியாளர்களில் பஞ்சாப் மாடல் ஹர்னாஸ் கவுரும் இடம்பெற்றார். இதனை தொடர்ந்து ‘காலநிலை மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்’? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்னாஸ், காலநிலை மாற்றம் உண்மை. இயற்கை படும் இன்னல்களை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது. நம்முடைய மோசமான நடவடிக்கை தான் இதற்கு காரணம். நாம் செயலில் இறங்க வேண்டும். காலநிலை மாற்றம் ஏற்பட்ட பின் அதனை சரி செய்வதை காட்டிலும், முன்கூட்டியே தடுப்பதே சிறப்பானது’ என்றார். ஹர்னாஸின் பதிலால் திருப்தியடைந்த நடுவர் குழு அவரை மூன்று போட்டியாளர்களுள்  ஒருவராக தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா, பராகுவேவை சேர்ந்த அழகிகளுடன் ஹர்னாசும் இதில் இடம்பெற்றார். இறுதி சுற்றில் கேட்கப்பட்ட கேள்விக்கும் அவர் அளித்த புத்திசாலித்தனமான பதிலை அடுத்து அவர் முதலிடத்தை பிடித்து பட்டத்தை கைப்பற்றினார்.மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற ஹர்னாஸ் கவுருக்கு மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆன்ட்ரியா மெசாவால் மகுடம் சூட்டி பாராட்டினார். இரண்டாவது இடத்தை பராகுவே அழகி நாடியா பெர்ரியா(22) மற்றும் மூன்றாவது இடத்தை தென்னாப்பிரிக்க அழகி லாலேலா ஸ்வானே(24) பெற்றார். 20 ஆண்டுகளுக்கு பின் இந்திய அழகி மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளதை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். பட்டம் வென்ற ஹர்னாஸ் நியூயார்க் நகருக்கு செல்கின்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பட்டம் வென்ற ஹர்னாஸ் சண்டிகரில் அரசு கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார்.  தற்போது பொது நிர்வாக துறையில் முதுகலை பயின்று வருகின்றார்.  ஹர்னாஸ் தனது 17 வயது முதல் மாடலிங் துறையில் இருந்து வருகின்றார். மிஸ் சண்டிகர் 2017 பட்டம் மற்றும் மிஸ் மேக்ஸ் வளர்ந்து வரும் நட்சத்திரம் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற ஹர்னாஸ் முதல் 12 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானார். அதன் பின்னர் பெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 பட்டத்தை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இதுமட்டுமின்றி சில பஞ்சாபி திரைப்படங்களிலும் ஹர்னாஸ் நடித்து வருகின்றார். படம் வென்ற ஹர்னாஸ் கவுர் சந்துதுக்கு பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஒடிசா முதல்வர் உள்பட பல அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ”பட்டத்தை கைப்பற்றிய பதில்”மிஸ் யுனிவர்ஸ் இறுதி சுற்றில் ‘இளம்பெண்கள் இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் அழுத்தத்துக்கு எந்த மாதிரியான  அறிவுரையை வழங்குவீர் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஹர்னாஸ், ‘இளம்  தலைமுறையினர் எதிர்கொள்ளும் அழுத்தம் என்பதே அவர்கள் தங்களை நம்பாதது தான்.  சுயநம்பிக்கை அவசியம். நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதை நம்ப  வேண்டும். அதுவே உங்களை அழகாக்கும். மற்றவரோடு உங்களை ஒப்பிட்டு  பார்க்காதீர்கள். உங்களுக்காக நீங்களே பேசுங்கள். ஏனெனில் உங்கள்  வாழ்க்கையின் தலைவர் நீங்கள் தான். உங்களுக்காக குரல் கொடுக்க  வேண்டியது  நீங்கள் தான். நான் என்னை நம்புகிறேன். அதனால் தான் நான் இங்கே  நிற்கிறேன்’ என்றார். இந்த சுற்றில் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு  பட்டத்தை வென்றார். ”குழந்தையை போல் அழுத அம்மா”தனது மகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றது தொடர்பாக  ஹர்னாசின் தாய் ரூபி கூறுகையில், ‘மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நான் அதனை பார்க்கவில்லை. அந்த நேரத்தில் நான் எனது மகள் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தித்தபடி குருத்வாராவில் இருந்தேன். எனது மகள் வெற்றி பெற்றால் தான் வீடு திரும்புவேன் என்று பிரார்த்தித்தேன். ஹர்னாஸ் மூன்று பேரில் ஒருவராக வந்துவிட்டதாக எனது பிள்ளைகள் செல்போனில் தெரிவித்தனர். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். எனது மகள் வெற்றி பெற்றுவிட்டாள் என்று கூறியவுடன் என் கண்களை மூடி ஒரு குழந்தை போன்று அழுதேன். நன்றி பாபாஜி என கூறினேன்’ என்றார்….

The post 21 ஆண்டுகளுக்கு பின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து: ‘உங்களுக்காக நீங்களே பேசுங்கள்’ கடைசி சுற்று பதிலால் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Harnaz Kaur Chandu ,Jerusalem ,Harnaz Kaur Sandhu ,Punjab ,Miss Universe ,Universe ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்