×

சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக தேர்தல்?.. போட்டியை தவிர்க்க பா.ஜ ஆலோசனை


புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. முதல்முறையாக மோடி தலைமையிலான அரசு பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பா.ஜ ஆலோசனை நடத்தி உள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களவை பாரம்பரிய வழக்கப்படி புதிய சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை பா.ஜ தொடங்கி இருக்கிறது. எனவே எதிர்க்கட்சி தரப்பினரிடமும் புதிய சபாநாயகர் குறித்து பா.ஜ ஆலோசனையை தொடங்கி உள்ளது.

இதற்கிடையே பா.ஜ கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி சபாநாயகர் பதவியை கேட்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான கே.ராம்மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ புதிய சபாநாயகர் தேர்தல் விவகாரம் குறித்து எனது கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள். இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை’ என்றார். அதே சமயம் 17வது மக்களவையில் சபாநாயகராக இருந்த ஓம்பிர்லாவை மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்ய பா.ஜ வட்டாரங்கள் விரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது முதலில் தெரியவில்லை.

மேலும் எதிர்க்கட்சிகள் எப்படி ஏற்றுக்ெகாள்வார்கள் என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளதால், முதல்முறையாக மக்களவையில் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படலாம் என்ற வாதமும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் (ஆர்எஸ்பி) எம்.பி என்.கே பிரேம்சந்திரன் கூறுகையில்,’ மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க ஒன்றியஅரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதுசபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற தேவையான பெரும்பான்மை பா.ஜ கூட்டணியிடம் இருந்தாலும் ஒருமித்த வேட்பாளரை உருவாக்க எதிர்க்கட்சிகளுடன் அரசு விவாதிக்க வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை. இதுவரை சபாநாயகர் தேர்தல் வேட்பாளர் குறித்து அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

ஒருமித்த கருத்து இல்லை என்றால், நிச்சயமாக நாங்கள் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவோம் ‘ என்றார். ஏனெனில் 18வது மக்களவையில் தற்காலிக சபாநாயகருக்கு உதவ எதிர்க்கட்சி தரப்பில் நியமிக்கப்பட்ட எம்பிக்கள் அந்த குழுவில் இடம் பெற மறுத்துவிட்டனர். எனவே புதிய சபாநாயகர் தேர்தலில் வேட்பாளரைப் பற்றி பா.ஜ தரப்பில் கூறினால் ஒருமனதாக தேர்வா அல்லது மக்களவை வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் நடக்குமா என்பது தெரிய வரும்.

The post சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக தேர்தல்?.. போட்டியை தவிர்க்க பா.ஜ ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,Lok Sabha ,Modi ,led ,National Democratic Alliance ,Dinakaran ,
× RELATED 18வது மக்களவை நாளை முதல் கூடும்...