×

அரசு ரூ.10 லட்சம் செலவிட்டும் பயனில்லை; வானூரில் பயனற்று கிடக்கும் அரசு கட்டிடம்.! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வானூர்: வானூரில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாரம்பரியமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 1909ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் நீதிமன்றம், காவல்நிலையம் மற்றும் சில அலுவலகங்கள் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் 1982ம் ஆண்டு முதல் வானூர் தாலுகா உருவானதிலிருந்து இயங்கி வந்தது. கடந்த 2003ம் ஆண்டு மயிலம்-புதுச்சேரி சாலையில் கட்டப்பட்ட புதியதாக கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. ஏற்கனவே இருந்த பழைய கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அதன் தோற்றம் மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. உறுதியும் பழமையும் மாறாத கட்டிடம் தற்போதும் சிவப்பு நிறத்தில் கம்பீரமாக நிற்கிறது. புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் வேறு அலுவலகம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வானூர் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு பலமுறை இதுதொடர்பாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்டிடம் பூட்டப்பட்டு உள்ளது. மேல்தளம் அனைத்தும் கான்கிரீட் போட்டப்பட்டு நல்ல நிலையில் பொதுப்பணித்துறை பொறியாளர்களால் சான்று அளிக்கப்பட்ட கட்டிடம் தற்போது எந்த ஒரு அலுவலகமும் இயங்காமல் பயனற்று கிடக்கிறது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் இல்லாமல் பல அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையிலும், வானூர் வட்ட தலைமையிடத்தில் செயல்படாமல் மற்ற கிராமங்களில் ஒருசில அலுவலகங்களும் இயங்கி வரும் நிலையிலும் ஒரு பெரிய கட்டிடம் பயனற்று கிடப்பது அரசுக்கு வீண்செலவாகும். இதுபோல் தொடர்ந்து கட்டிடம் காலியாக இருந்தால் பாழடையும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் இந்த கட்டிடத்தின் அருகிலேயே மேலும் இரண்டு கட்டிடங்களும் உள்ளன. இந்த கட்டிடங்களும் காலியாகவே உள்ளது. அரசு அலுவலகங்கள் மாவட்ட தலைமையிடங்களில் ஒரே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு வட்ட தலைமையிடத்தில் ஒருசில அலுவலகங்கள் மட்டுமே உள்ளது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மற்றும் பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளில் சில அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஆவதுடன் பொதுமக்களுக்கும் இந்த அலுவலகங்களுக்கு சென்று வருவது சிரமமாக உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த கட்டிடத்தை பார்வையிட்டு இந்த கட்டிடத்தில் அரசு அலுவலகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post அரசு ரூ.10 லட்சம் செலவிட்டும் பயனில்லை; வானூரில் பயனற்று கிடக்கும் அரசு கட்டிடம்.! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vanur ,Vanur Taluk ,Dinakaran ,
× RELATED பட்டானூரில் பொது கழிப்பிடம் கட்ட வேண்டும்