×

இந்தியா முழுதும் ஆன்லைனில் பட்டறை கருவாடு!

நன்றி குங்குமம் தோழி

கருவாடை வறுமையின் குறியீடாக சொல்வார்கள். உணவு வகைகளிலேயே விலை குறைவாக கிடைப்பது கருவாடு மட்டுமே. இதன் விலை குறைவு என்றாலும், கருவாட்டில் உள்ள சத்துக்கள் அதிகம். மேலும் எளிதாக சமைக்கக்கூடிய அசைவ உணவும் கருவாடு தான். கருவாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகைதான் பட்டறை கருவாடு. மீனை மண்ணிற்குள் புதைத்து, அதனை கருவாடாக மாற்றும் முறை. இதை ஆன்லைன் மூலமாக விற்று வருகிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த அந்தோணி தீனா. மாற்றுத்திறனாளியான இவர் தன்னைப் போல் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டறை கருவாடு விற்பனைக்கான வேலையை கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தந்துள்ளார்.

‘‘ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சி மடம்தான் என் சொந்த ஊர். நாங்க மீனவக் குடும்பத்தை சேர்ந்தவங்க. என் தாத்தா காலத்தில் இருந்தே கருவாடு செய்வதுதான் எங்களின் தொழில். தாத்தாவைத் தொடர்ந்து அப்பா, இப்போது நான் அதை தொடர்கிறேன். நான் +2 வரைதான் படிச்சேன். அதற்கு மேல் நான் படிப்பை தொடர முடியல. பள்ளிப் படிப்பை முடிச்சதும், வேலைக்கு போகலாம்னு நிறைய இடங்களில் தேடினேன். ஆனால் என்னுடைய உடலில் இருந்த குறையால் எனக்கு யாரும் வேலை கொடுக்க முன்வரல. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாதுன்னு அதையே காரணமாக சொல்லி தவிர்த்துட்டாங்க. அந்த சமயத்தில் என் மனதில் தோன்றிய ஒரே விஷயம் என்னைப்போல இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதுதான். மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்ப்பதற்கு நானே ஒரு தொழில் துவங்கலாம்னு முடிவு செய்தேன். அப்பா செய்யும் கருவாடு தொழிலை நான் நவீனப்படுத்த நினைச்சேன்‘‘ என்றவர் அது குறித்து விவரித்தார்.

எங்களுடைய அப்பா பட்டறை கருவாடு செய்றார். பட்டறை கருவாடு இந்தக் காலத்தில் யாருமே செய்வதில்லை. அப்பா மட்டும்தான் இதை தாத்தாவிடம் கற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து வருகிறார். அப்பா கருவாடு செய்து அதை சந்தையில் கொண்டு போய் விற்பார். நானும் அப்பாவைப் போல் அதே தொழிலில் ஈடுபட விரும்பினேன். அதே சமயம் அதனை நவீனப்படுத்த நினைத்தேன். சின்ன வயசில் அப்பா அதை செய்யும் போது நானும் உடன் இருந்து அவர் எப்படி செய்கிறார்… மீனை எவ்வாறு பதப்படுத்துகிறார் என்றெல்லாம் பார்த்து கற்றுக் கொண்டேன். அதனால் அப்பாவைத் தொடர்ந்து நானும் அதை செய்ய விரும்பினேன்’’ என்றவர் பட்டறை கருவாடு செய்முறை குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘கருவாடு என்றாலே அதில் மீனின் இரட்டிப்பு மடங்கு சத்து இருக்கும். அதே சமயம் இரண்டு கிலோ மீனை கருவாடாக்கினால் அது ஒரு கிலோதான் இருக்கும். இதில் பட்டறை கருவாடுதான் பழங்கால கருவாடு செய்யும் முறை. இப்படித்தான் நம் முன்னோர்கள் கருவாடு செய்து வந்தார்கள். சொல்லப்போனால் உண்மையான கருவாடு செய்யும் முறையும் இதுதான். கடலிலிருந்து மீனை பிடித்து வந்ததும் அதை இரண்டாக வெட்ட வேண்டும்.

பிறகு உள்ளே இருக்கும் அனைத்தையும் சுத்தம் செய்து அதன் மேல் உப்பு மற்றும் மஞ்சள் தடவ வேண்டும். அந்த மீனை பனை ஓலை பாயில் வைத்து சுருட்டி அதன் மேல் சாக்கு ஒன்றை மூடி அதை கடற்கரை ஓரங்களில் இருக்கும் மணலில் குழி தோண்டி புதைத்து விடுவோம். 10 நாட்கள் கழித்து அதை தோண்டி எடுத்து திறந்து பார்த்தாலே ஒரு மணம் வரும். அதுதான் கருவாட்டின் மணம். அந்த கருவாட்டை எடுத்து அப்போதே சமைக்கலாம்.

அதில் வைக்கப்படும் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பட்டறை கருவாடு எல்லா மீன்களிலும் செய்ய முடியாது. கட்டா, நெய் மீன், கொடுவா, வஞ்சிரம், தடியன், விலை மீன் என இந்த வகை மீன்களில் இருந்து தான் பட்டறை கருவாடை தயார் செய்ய முடியும். மற்ற மீன்களை சாதாரண முறையில் கருவாடு செய்ய ஒரே நாள் போதும். மஞ்சள் தடவி உப்பு போட்டு வெயிலில் காயவைத்தால் போதும் கருவாடு ரெடியாயிடும்.

பட்டறை கருவாடு செய்ய பத்து நாட்களாகும் என்பதாலே அதை செய்ய யாரும் முன் வருவதில்லை. குறிப்பாக இந்த கருவாடை செய்வதற்கு தனிப்பட்ட பக்குவம் தெரியணும். யாரும் செய்யாத வேலை என்பதால், இதை நான் செய்ய முடிவு செய்தேன். அப்பா சந்தைக்கு கருவாடு கொண்டு போய் விற்பார். நான் அதையே நவீனமயமாக்கி ஆன்லைன் முறையில் விற்க ஆரம்பித்தேன். அதே சமயம் பட்டறை கருவாடு குறித்து மக்களுக்கு தெரியாது என்பதால், அதற்கான யுடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதன் வழியாக இது குறித்து விளக்கமும் செய்முறையும் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டேன். மேலும் ஆர்டர் செய்பவர்களுக்கு கொரியர் மூலமாக டெலிவரி செய்து வருகிறேன். இப்படித்தான் பட்டறை கருவாடு ஆன்லைன்
விற்பனை தொடங்கியது’’ என்றவர் இதில் சந்தித்த பிரச்னை மற்றும் அதை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதையும் விவரித்தார்.

‘‘இப்போது எல்லாமே ஆன்லைன் என்றாகிவிட்டதால், பலரும் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தைப் பார்த்து ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தாங்க. நானும் அவர்களுக்கு கொரியர் மூலமாக டெலிவரி செய்தேன். ஆனால், அவர்களுக்கு நான் அனுப்பியது சரியாக கிடைக்காது. இல்லை என்றால் பேக்கிங் சேதமாக சென்றடையும். உணவு சார்ந்த பொருள் என்பதால், அது டெலிவரியாகும் வரை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அதனால் நான் முன்பு பயன்படுத்திய பேக்கிங் முறையினை மாற்றி அமைத்தேன். விளைவு எந்தவித சேதம் மற்றும் பாதிப்பு இல்லாமல் வாடிக்கையாளர்கள் கையில் கருவாடு ேபாய் சேர்ந்தது.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வரத் துவங்கின. என்னால் மட்டுமே இதனை பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் ஆட்களை வேலைக்கு நியமித்தேன். அவர்களில் சிலர் மாற்றுத்திறனாளிகள். அவர்களும் என்னைப் போலதான் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள். அந்த வலி என்ன என்று எனக்கு தெரியும். தற்போது என்னிடம் எட்டு பேர் வேலை பார்க்கிறார்கள்.

அதில் நான்கு பெண்கள், மற்ற நால்வர் மாற்றுத்திறனாளிகள். வரும் ஆர்டர்களை பிரித்து, பேக்கிங் செய்வது மற்றும் அதனை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பது என அனைத்தும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். தற்போது இந்தியா முழுதும் நாங்கள் பட்டறை கருவாடை அனுப்பி வைக்கிறோம். அடுத்த கட்டமாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறேன். பட்டறை கருவாடை ஒரு பிராண்டாக மாற்ற வேண்டும். மேலும் பல மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் அந்தோணி தீனா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post இந்தியா முழுதும் ஆன்லைனில் பட்டறை கருவாடு! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?