×

பொறுமைக்கு கிடைத்த உலக சாதனை விருது!

நன்றி குங்குமம் தோழி

பல ஓவியங்களை வரைந்திருப்போம் அல்லது மற்றவர்கள் வரைய பார்த்திருப்போம். நமக்கு பிடித்த ஓவியங்களை நம் வீட்டினை அலங்கரிப்பதற்காகவும் விலை கொடுத்து வாங்கி வைத்திருப்போம். அப்படி பல ஓவியங்கள் வந்தாலும் கண்களை வேற திசையில் அகற்ற முடியாத வண்ணத்தில் மதுரை மீனாட்சி அம்மனின் திரு உருவத்தை எந்த ஒரு சிறு மாறுதல்களும் இல்லாமல், பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக வரைந்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார், மதுரை இஸ்மாயில்புரத்தை சார்ந்த வெண்ணிலா கண்ணன்.

‘‘ ‘Trust the process more than results’ என்ற கிரிக்கெட் வீரர் தோனியின் வார்த்தைகளைதான் எப்போதுமே பின்பற்றி வருகிறேன். அதாவது முடிவு எதுவாக இருந்தாலும், செயல்பாடுகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சொந்த ஊர் மதுரைதான். கணினியில் இளங்கலை பட்டமும், ஆடை வடிவமைப்பில் டிப்ளமோ படிச்சிருக்கேன். எனக்கு கலை வேலைப்பாடு செய்வது மிகவும் பிடித்த ஒன்று. அதனால்தான் ஆடை வடிவமைப்பையும், ஓவியம் வரைதலையும் தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு வரைவதில் ஆர்வம் வரக் காரணம் என் அண்ணன். அவன் ரொம்ப நல்லா வரைவான். நான் பள்ளியில் படிக்கும் போதே அவன் வரைவதை உற்றுப் பார்த்து அதை அப்படியே வரைவேன். அதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தேன். காலப்போக்கில் ஒரு ஓவியம் அல்லது புகைப்படத்தினை பார்த்து வரைய துவங்கினேன். இதனைப் பார்த்த அனைவரும் என்னை ஊக்குவிக்க ஆரம்பித்தனர். அப்போது துவங்கியதுதான் இந்த ஓவியம் வரைதல். நான் என்ன படம் வரைந்தாலும் முதலில் என் அண்ணன் மற்றும் கணவரிடம்தான் காட்டுவேன். அவர்கள் அதில் சின்னச் சின்ன தவறுகளை சுட்டிக் காண்பிப்பார்கள். அதை சரி செய்த பிறகே நான் விற்பனைக்கு அனுப்புவேன். அந்த தவறுகள்தான் என்னை ஓவியம் வரைவதில் மெருகேற்றி இருக்கிறது.

எல்லா பெண்களைப் போல எனக்கும் சில கனவுகள் இருந்தது. ஆனால் நான் ஓவியத் துறையில் கால் பதிப்பேன் அதில் உயர்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. 2019 முன்பு வரை பொழுதுபோக்கிற்காகத்தான் வரைந்து இருந்தேன். பின்னர் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்ததால், க்ராபைட் பென்சில் மூலம் A3 பேப்பரில் உயர் தத்ரூப ஓவியத்தை வரைய ஆரம்பித்தேன். ஊரடங்கு என்பதால், நேரமும் நிறைய இருந்தது. ஒரு நாளைக்கு 10லிருந்து 15 மணி நேரம் வரை வரைவேன். உயர் தத்ரூப ஓவியம் வரைய அதிக நேரமாகும்.

செலவும் செய்ய வேண்டும். அப்படி நான் முதலில் வரைந்த படம்தான் ஒரு பெண் முகம் கழுவும் புகைப்படம். இந்த ஓவியம் ஆன்லைனில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பல பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கலர் பென்சிலால் ஹாலிவுட் பட நடிகர் மோர்கன் ஃப்ரீமேனை வரைந்தேன். தொடர்ந்து நம்மூர் திரைப் பிரபலங்களின் படங்களும் வரைந்திருக்கேன்.

நான் வரையும் படங்களை எல்லாம் என்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். இதற்கிடையில் எனக்கு குழந்தை பிறந்ததால், என்னால் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்த முடியவில்லை. சுமார் ஒன்றரை ஆண்டுகள் நான் பிரஷ்ஷினை கையில் எடுக்கவே இல்லை. அதன் பிறகு என் 7 மாத குழந்தையை ஓவியமாக வரைந்தேன்’’ என்றவர் தனக்கு கிடைத்த விருதுகளையும் அதற்கான ஓவியங்களையும் குறிப்பிடுகிறார்.

‘‘நான் இதுவரையில் 500க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 50க்கும் மேலான தத்ரூப ஓவியங்கள் வரைந்துள்ளேன். மேலும் உயர் தத்ரூப ஓவியங்கள் மட்டுமே 10 வரைந்திருப்பேன். அதில் அனைவரையும் மிகவும் கவர்ந்த ஓவியம் என்றால், மீனாட்சி அம்மனும், இந்து திருமண நிகழ்வும்தான். நான் என் ஓவியங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததைப் பார்த்து பலரும் அவர்கள் விரும்பும் ஓவியங்களை வரையச் சொல்லி ஆர்டர் கொடுக்க துவங்கினார்கள்.

அப்படி ஒரு வாடிக்கையாளர் வரைந்து தர சொல்லி கேட்டதுதான் இந்து திருமணம் வரைபடம். அதற்கு 2024ல் உயர் தத்ரூப ஓவியம் என்று ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் விருது கிடைத்தது. மேலும் இதற்கு முன் நான் வரைந்த மதுரை மீனாட்சி அம்மன் ஓவியத்திற்காக ‘India’s World Record’ மற்றும் ‘International Book of Records’ என உலக சாதனை விருதுகள் கிடைத்தது’’ என்றவர் ஓவியம் வரைதலுக்காக தான் சந்தித்த இன்னல்களை பற்றியும் குறிப்பிடுகிறார்.

‘‘திருமணத்திற்கு முன்பு வரை எனக்கு ஓவியம் வரைய அதிக நேரம் இருந்தது. திருமணத்திற்குப் பிறகு வீட்டுப் பொறுப்புகள் அதிகமானதால், ஓவியத்திற்கான நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு ஓவியத்தின் மேல் கவனம் செலுத்துவதே அதிகம் என்றானது. இருப்பினும் நான் என் தன்னம்பிக்கையை விடவில்லை. கிடைக்கும் நேரங்களில் வரைய துவங்கினேன். அந்த பொறுமைக்கு கிடைத்த சன்மானம்தான் இந்த விருது.

நேரம் கிடைப்பதில்லை என்று தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதிலிருந்து பெண்கள் ஒதுங்கி விடுகிறார்கள். பத்து நிமிடங்கள் கிடைத்தாலும் அதனை நம் விருப்பத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தங்களுக்கு பிடித்த துறையில் அறிவை வளர்த்துக்கொள்ளவும் முற்படவேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்’’ என்று புன்னகையுடன் பதிலளித்தார் வெண்ணிலா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post பொறுமைக்கு கிடைத்த உலக சாதனை விருது! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?