×

மழைக்காலம் துவக்கம், நோய் தாக்கும் அபாயம் சின்ன வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்பு

*இடைத்தரகர்களால் மிகுந்த பாதிப்பு

திருச்சி : இந்தியாவில் பயிரிடப்படும் காய்கறிகளில் சின்ன வெங்காயம் முக்கிய இடம் வகிக்கின்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவை சின்ன வெங்காயம் விளைவிக்கும் முக்கிய மாநிலங்களாகும்.தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகின்றன. சின்ன வெங்காயம் சாகுபடியில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 75 சதவீதம் பங்களிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி திறன் ஒரு ெஹக்டேருக்கு 12 டன்கள் ஆகும். கோ 1, கோ 2, கோ என் 5 ஆகிய ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கோ என் 5 ரகமானது ஏற்றுமதிக்கு ஏற்ற ரகமாக கருதப்படுகிறது.

அதிலும், உடுமலைப்பேட்டை, தாராபுரம், துறையூர் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதியிலிருந்து தொடர்ச்சியாக சின்ன ெவங்காயம் சந்தைக்கு வருகிறது. தென்மேற்கு மழைக்காலம் தொடங்குவதாலும், அதனால் நோய் தாக்கும் சூழல் உள்ளதாலும், தரமான சின்ன வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது திருச்சி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தி மற்றும் அதன் விலை குறித்து தமிழ்நாடு ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் பூ.விஸ்வநாதன் கூறியதாவது:
சின்ன வெங்காயம் பொதுவாக இரண்டு பருவம் சம்பா பருவம் தை பட்டத்தில் விதைப்பது, குறுவை பருவத்தில் வைகாசியில் விதைப்பது தான், தற்போது தைப்பட்டத்தில் விதைத்த வெங்காயம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. தை பட்டத்தில் விதைக்கப்படும் வெங்காயம் ஒரு ஏக்கருக்கு சுமார் 4 டன் வரை கிடைக்கும். தை பட்டத்தில் விதைக்கப்பட்டால் ஏக்கருக்கு 1500 கிலோ முதல் 3 ஆயிரம் கிலோ வரை கிடைக்கும். இன்று வியாபாரிகள் ஒன்றரை கிலோ சின்ன வெங்காயத்தை ரூ.100க்கு விற்பனை செய்கிறார்கள்.

ஆனால் விவசாயிகளிடம் வாங்கும் போது கிலோ 22, 25, 28 என்ற மூன்று விலைகளில் வாங்குகிறார்கள். இன்னும் நல்ல தரமான வெங்காயம் ரூ.35 வரை விவசாயிகளிடம் இருந்து பெறுகிறார்கள். இருப்பதிலேயே தரம் குறைவான சின்ன வெங்காயம் கிலோ ரூ.20 வரை கொள்முதல் செய்கிறார்கள். ஆனால் விவசாயிகளிடம் இருந்து இடைதரகர் மூலம் வியாபாரிகளுக்கு வருவதால், வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

ஆனால் கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட அதிகபட்சமான வெயிலின் தாக்கத்தால், வெங்காயம் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்படுகிறது. அதேபோல் தென்மேற்கு பருவமழையால் வெங்காயம் அழுகிபோய் உற்பத்தி குறையும் தற்போது இதுபோன்ற பாதிப்பால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் இருக்கிறது. இதனால் உள்ளுர் வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் இருக்கிறது.

இதில் இடைதரகர்கள் அதிகளவில் பயனடைகிறார்கள். எனவே வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறையும் வாய்ப்பு உள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் இடைதரகர் கமிஷன் கிலோவுக்கு ரூ.8, ஏத்துக்கூலி, இறக்கு கூலி கிலோவுக்கு ரூ.3 என இதில் ரூ. 11 முதல் 15 வரை செலவாகிவிடும் அதில் மிஞ்சுவது வெறும் கிலோவுக்கு 5 முதல் 8 ரூபாய் வரை தான் விலை கிடைக்கும் என்றார்.

துறையூர் செங்காட்டுபட்டியை சேர்ந்த விவசாயி தன்னுடைய நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயத்தை அறுவடை செய்த நிலையில், வழக்கமாக கிடைக்கும் உற்பத்தியை விட இந்த முறை மிகவும் குறைவான உற்பத்தியே கிடைத்ததாகவும், ஒரு ஏக்கருக்கு சுமார் 60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் கிலோ ரூ.40க்கும் அதிகமாக கிடைக்க வேண்டிய நிலையில் தற்போது கிலோ ரூ.24 ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்கின்றனர் என்று கூறினார்.

The post மழைக்காலம் துவக்கம், நோய் தாக்கும் அபாயம் சின்ன வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Karnataka ,Andhra Pradesh ,Odisha ,Dindigul ,Tirupur ,Perambalur ,Trichy ,Namakkal ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...