×

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (24-6-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், IND-TN-10-MM-84, IND-TN-10-MM-88 மற்றும் IND-TN-10-MM-340 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Minister of Foreign Affairs ,Government of Sri Lanka ,Sri Lankan Navy ,Chennai ,Chief Minister of Tamil Nadu ,Tamil Nadu ,Sri Lankan government ,K. Stalin ,Union ,Secretary of State ,Dr. S. For Jaisankar ,Minister of State ,Dinakaran ,
× RELATED இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட...