×

சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ₹90.66 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

*குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை

வேலூர் : சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.90.66 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பணியை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், வருங்கால வைப்புநிதி அலுவலகம், வனத்துைற அலுவலகம், நீதிமன்றம், வட்டார போக்குவரத்து அலுவலகம், ஆவின் அலுவலகம் போன்ற முக்கிய அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அதேபோல், காட்பாடியில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வரக்கூடிய வகையில் ரயில் நிலையம், விஐடி பல்கலைக்கழகம், மாவட்ட விளையாட்டு மைதானம், முன்னாள் ராணுவவீரர் நல மருத்துவமனை மற்றும் கேன்டீன் போன்றவை இயங்கி வருகின்றன.

இந்த 2 பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு பிரம்மபுரத்தை சேர்ந்தவர்களும் சத்துவாச்சாரியை
சேர்ந்தவர்களும் சுமார் 8 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டும். இந்நிலையில், சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, சத்துவாச்சாரி- பிரம்மபுரம் மேம்பாலம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாலாற்றின் குறுக்கே இணைப்பு சாலை அமைக்க சத்துவாச்சாரி பகுதியில் 32,775 சதுர மீட்டருக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதேபோல், பிரம்மபுரத்தில் 38,000 சதுர மீட்டர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இப்பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு இழப்பீடு தொகையாக சுமார் ரூ.7 கோடி வரையில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதற்கேற்ப காட்பாடி காங்கேயநல்லூர்-சத்துவாச்சாரி ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான ஆய்வு பணிகளும், மண் பரிசோதனையும் தொடங்கின. இப்பணிகள் நிறைவடைந்து, கடந்த பிப்ரவரி மாதம் ரூ.90.66 கோடி மதிப்பீட்டில் அங்கு பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, அங்கு உடனடியாக சாலை பணிகளும், ரங்காபுரத்தில் பாலாற்றை ஒட்டி ஓடும் கழிவுநீர் கால்வாயில் சிறிய அளவிலான கல்வெர்ட் அமைப்பதற்கான பணிகள்
நடந்து முடிந்தன. தொடர்ந்து, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாலாற்றில் பாலம் தொடங்கும் வரையில் அமையும் சாலையில் பெரிய அளவிலான கல்வெர்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தொடர்ந்து, பிரம்மபுரம் பகுதி பாலாற்றில் பாலத்தை தாங்கும் பில்லர்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் குறித்த காலத்திற்குள் முடிக்க தீவிரமாக நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அடிக்கடி பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி வருகின்றனர். இந்த மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டால் காட்பாடி பகுதியில் பாதிக்கு மேல் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ₹90.66 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Balat ,Chathuvachary ,Brahmapuram ,Vellore ,Chathuvachari ,Sathuvachary-Brahmapuram ,Dinakaran ,
× RELATED பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்...